Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, October 23, 2026

விதி 55A - கட்டாய பணி ஓய்வு - அச்சம் தவீர்!


அற்ப தொகை ஆயிரம் ரூபாய்க்கு, அடமானம் வைக்கப்பட்ட DoT ஊழியர்கள், ABSORPTION என்கிற பெயரில், 01.10.2000 முதல் BSNL ஊழியர்களாக மாற்றப்பட்டனர். 01.10.2000க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள், BSNL ஊழியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருவரையும் இணைத்து, பழைய CCS (CONDUCT) RULES க்கு மாற்றாக, மத்திய அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் பின்புலத்தோடு, BSNL CONDUCT, DISCIPLINE AND APPEAL RULES 2006, (BSNL நடத்தை, ஒழுங்கு மற்றும் மேல்முறையீட்டு விதிகள் 2006), என்கிற பெயரில் புதிய விதிகள் 2006ல், நமது BSNL லில் உருவாக்கப்பட்டது. இது வரை, BSNL CDA விதிகளில், பல்வேறு சேர்க்கை / நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் விதி 55A என்கிற ஒரு உட்பிரிவு இணைக்கப்பட்டது. 

ஒன்றிய அரசு அதன் ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய விதியை, அப்படியே, நமது BSNL நிறுவனத்திலும், 55A என்கிற பெயரில் இணைக்கப்பட்டது. இதை உடனடியாக ஒன்றிய அரசு ஊழியர்கள் எதிர்த்தது போல், நமது BSNLEU சங்கமும், இந்த ஊழியர் விரோத விதியை எதிர்த்தது. 26.11.2020 அன்று நடைபெற்ற ஒரு நாள் பொது வேலை நிறுத்த கோரிக்கையில், இந்த விதியை நீக்க வேண்டும் என்பது நமது BSNLEU சங்கத்தின் கோரிக்கை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கடுமையான விதிகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில், இந்த விதியை ஒன்றிய அரசு உருவாக்கியது. இருப்பினும். ஊழியர்களின் கடுமையான எதிர்பால், ஒன்றிய அரசு அந்த விதியை அதிகம் பயன்படுத்தியதில்லை. நமது BSNL நிறுவனத்திலும், பொதுவாக, இந்த விதி அமுல்படுத்தப்பட்டது கிடையாது. ஆனால், ஊழியர்களை மிரட்ட இந்த விதிகளை சுட்டிக்காட்டுவார்கள்.

இந்நிலையில் கடந்த 17.09.2026 அன்று கார்ப்பரேட் அலுவலகம், மீண்டும் இந்த விதியை அமுல்படுத்த போகிறோம் என கொக்கரித்து, ஒரு கடிதம் வெளியிட்டது. 55A விதியை அமுல்படுத்துவதற்கான நடைமுறைகளை அந்த கடிதத்தில் விவரித்துள்ளது. அதற்கு தேவையான விவரங்களை சேகரிக்க. கால கெடு  நிர்ணயத்து, தேவையற்ற அச்ச உணர்வை உருவாக்கியது. கார்ப்பரேட் நிர்வாகத்தின், இந்த கடிதத்தை பார்த்ததும், நமது ஊழியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. அதை உணர்ந்த நமது மத்திய சங்கம், உடனடியாக, தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில், தமிழ் மாநில நிர்வாகம், மாநிலம் முழுவதும், இந்த விதியின் அடிப்படையில், நடவடிக்கைக்கு பரிசீலிக்க பட வேண்டிய ஊழியர்கள் / அதிகாரிகள் பெயர் பட்டியலை வெளியிட்டதும், நமது தோழர்களுக்கு, அச்ச உணர்வு அதிகரித்தது. நம்மால் தெளிவாக சொல்ல முடியும், இந்த விதி, அமுலாகாது, அமுல்படுத்த BSNLEU சங்கம் விடாது. இருப்பினும், தோழர்களின் புரிதலுக்காக, இந்த விதியின் சில அம்சங்களை, கீழே விளக்கியுள்ளோம்.

முதலில், BSNL CDA Rules 2006, விதி 55A என்றால் என்ன?

விதி 55A என்பது, BSNL நிறுவனத்தின் நலனுக்காக, 35 வயதுக்கு முன் பணியில் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 வயதை எட்டும்போது, ​​மற்ற ஊழியர்கள் 55 வயதில், அல்லது 30 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் எவரையும் கட்டாய ஓய்வில், PREMATURE RETIREMENT வீட்டிற்கு அனுப்பலாம். மூன்று மாத எழுத்துப்பூர்வ அறிவிப்பு அல்லது அதற்குப் சமமான ஊதியம் மட்டும் வழங்கி, அவர்களை ஓய்வில் அனுப்பலாம். இந்த விதி, 07.07.2017 அன்று நடைபெற்ற 176வது BSNL BOARD கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டு, பின் சட்டமாக்கப்பட்டது. 

55Aவிதியின் அடிப்படையில், மாவட்டத்தில் இருந்து தரவுகள் பெறப்பட்டு, மாநில அளவில் பட்டியல் வெளியிடப்படும். பின், அந்த பட்டியலில் உள்ள  ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சேவை காலம், அவரவர் சார்பு உயர் அதிகாரிகளால், ஆய்வு செய்யப்பட்டு, ஊழியர் மீது, மேல் நடவடிக்கை தேவையா அல்லது அவர் பணியில் நீடிக்கலாமா என பரிந்துரைக்கப்படும்.

NON EXECUTIVE ஊழியர்கள் என்றால், ஊழியரின் தள மட்ட அதிகாரி, SDE அவர்களால், அறிக்கை தயாரிக்கப்பட்டு, AGM பரிந்துரையோடு, DGM இறுதி முடிவு எடுப்பார். JTO / JAO / SDE / AO / CAO / AGM / DGM வரையிலான அதிகாரிகள் என்றால், GM அவர்களால் அறிக்கை தயாரிக்கப்பட்டு, CGM பரிந்துரையோடு, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இருவரின் பட்டியலும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். கார்ப்பரேட் அலுவலகத்தில் HIGH LEVEL CENTRALISED COMMITTEE என்று சொல்லக்கூடிய ஒரு உயர்மட்ட குழு, ஒவ்வொரு ஊழியர், அதிகாரிகளின் கோப்புகளை ஆய்வு செய்து, இறுதி தீர்ப்பு வழங்கும்.

ஊழியர்கள் / அதிகாரிகள் வகை படுத்துதல்

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை இந்த 55A விதியின் கீழ், மூன்று வகைகளாக பிரித்து, பட்டியல் தயாரிக்கிறார்கள்.

1. 35 வயதுக்கு முன் பணியில் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 30.09.2026 அன்று 50 வயதை கடந்தவர்கள் 

2. எப்பொழுது பணியில் சேர்ந்து இருந்தாலும், 30.09.2026 அன்று, 55 வயதை கடந்தவர்கள். 

3. வயது எதுவாக இருந்தாலும், 30.09.2026 அன்று 30 வருடங்கள் சேவையை நிறைவு செய்தவர்கள்.

இந்த 55A விதிகளின் படி,  தற்போது, 579 அதிகாரிகள், 752 NE ஊழியர்கள் தகுதியானவர்கள் என, 13.10.2026 அன்று, தமிழ் மாநில நிர்வாகம் பட்டியல் வெளியிட்டது. அதை சேலம் மாவட்ட நிர்வாகம், 14.10.2026 அன்று, உடனடியாக ENDORSE செய்தது.

யார் மீது நடவடிக்கை? 

1. Vigilance / CBI / Disciplinary authority போன்ற அமைப்புகள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் அல்லது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

2. நேர்மை, நாணயம், நம்பகத்தன்மை, இறையாண்மை போன்ற பிரிவுகளில், சந்தேகத்திற்கு, இடமளிக்கக்கூடியவர்கள்.

3. செயல்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் திறமை இல்லாதவர்கள்

4. மருத்துவ ரீதியாக, பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் 

5. நிறுவன நலனுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் 

6. இன்ன பிற காரணங்கள் 

நடவடிக்கைக்கான, நடைமுறைகள் 

பட்டியல் தயாரிக்க மட்டும் தான் வழி கட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.  கார்ப்பரேட் அலுவலகம் எப்பொழுது தேதி நிர்ணயம் செய்தாலும், அதன் மீதான நடவடிக்கைகள் துவங்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களின் கருத்து, ஆட்சேபனைகள், கோரிக்கைகளும் அந்த கோப்புகளோடு இணைக்கப்படும். ஒவ்வொரு காலாண்டும், இது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு, கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவை அனைத்தும், ரகசிய முறையில், தயார் செய்யப்பட வேண்டும் என கடிதம் சுட்டிக்காட்டுகிறது

இது முழுக்க முழுக்க ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக, மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை என புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது ஊதிய மாற்றத்தை பெற்றே தீர வேண்டும் என்கிற நோக்கில், வருகிற 20.11.2026 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல், AUAB அமைப்பால்  கொடுக்கப்பட்டு, வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் சமயத்தில், அந்த வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க கூட, இப்படி சில நடைமுறைகளை, நிர்வாகம் கையாளும் என நாம் சந்தேகிக்கிறோம். அதே போல், இரண்டாவது VRS போன்ற திட்டங்கள் ஏதாவது  அமுல்படுத்தப்பட்டால், அதிகப்படியான ஊழியர்கள் அதில் செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த நடவடிக்கைகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். 

மொத்தத்தில், இது வெறும் அச்சுறுத்தல் மட்டுமே. எதார்த்தமாக, இந்த விதியின் கீழ் நடவடிக்கை எடுத்து, ஒரு ஊழியரையோ, அதிகாரிகளையோ, கட்டாய பணி ஒய்வில் அனுப்புவது என்பது அவ்வளவு எளிதல்ல. மேல் முறையீடு போன்ற மேல் நடவடிக்கைகள் செய்ய, சட்டத்தில் இடம் உள்ளது. நமது BSNLEU மத்திய சங்கமும், இந்த விதிகளை எதிர்ப்பதால், இது அமுலாகாது என திடமாக நம்புகிறோம். எனவே, ஊழியர்கள் அச்சத்தை தவிர்க்கவும். தொடர்ச்சியாக, போராட்ட களம் கண்டு, இந்த ஊழியர் விரோத 55A விதி அமுல்படுத்தப்படாமல், ஊழியர்களை, BSNLEU காக்கும் என உறுதியளிக்கிறோம். 

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்