Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, August 10, 2026

சொசைட்டி பிரச்சனை - பாராளுமன்ற உறுப்பினர் தலையீடு !!


தமிழ்நாடு மாநில BSNLEU, NFTE, SNEA மற்றும் AIBSNLEA சங்கங்களின் சார்பாக, 06.08.2026 அன்று, தோழர் V.செந்தில் குமார் CT BSNLEU, மற்றும் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் CVP BSNLEU ஆகியோர், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் R.சச்சிதானந்தம் அவர்களுடன் இணைந்து திரு ஷிவ்பால் சிங், JOINT SECRETARY & CENTRAL REGISTRAR OF COOPERATIVE SOCIETIES அவர்களை, புதுடெல்லி நௌரோஜி நகரில் உள்ள WORLD TRADE CENTERஇல் உள்ள, அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.  இன்று சந்திப்பின்போது, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் R.சச்சிதானந்தம் அவர்களின் தனி உதவியாளர் திரு ஶ்ரீஆதித்யா அவர்களும் நம்முடன் இருந்தார்.  நிர்வாகத்தின் சார்பில் திரு ஜிதேந்தர் நாகர், Dy.COMMISSIONER மற்றும் ஒரு அதிகாரியும் உடன் இருந்தனர். முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.  

அந்த சந்திப்பின் போது சென்னை கூட்டுறவு சங்கத்தில் இருந்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும், மறைந்த தோழர்களின் குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும், சென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றுள்ள நில ஊழல் தொடர்பாகவும், மத்திய கூட்டுறவு பதிவாளரால் உத்தரவிடப்பட்டிருந்த நிதி ஆய்வு தொடர்பாகவும், சென்னை கூட்டுறவு சங்க நிர்வாகம் தொடர்பாகவும் கடிதம் கொடுத்து, விவாதிக்கப்பட்டது. தோழர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நமது சங்கங்களின் சார்பாக கொடுத்த புகார்களின் அடிப்படையில், புது டெல்லி கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் பிறப்பித்த ஆய்வு உத்தரவின் அடிப்படையில், நடைபெற்ற ஆய்வின் அறிக்கை வந்து விட்டதாகவும், அதனை தங்களின் தணிக்கையாளர் குழுவிடம் அனுப்பி உள்ளதாகவும், அவர்களிடமிருந்து அறிக்கை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கூட்டுறவு பதிவாளரிடம், நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக தெரிவித்த போது, அவற்றையும் முழுமையாக விசாரித்து தெரிந்து கொண்டார். இதர பிரச்சனைகள் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது.  பாதிக்கப்பட்ட ஊழியர்களின் நிலை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் R.சச்சிதானந்தம் மற்றும் ஊழியர் தரப்பில் இருந்து கலந்து கொண்ட தோழர்கள், விரிவாக எடுத்துரைத்ததின் அடிப்படையில், அதிகாரிகளின் குழு ஒரு சில ஆலோசனைகளை வழங்கினர்.  அதன் பின்னர், மத்திய கூட்டுறவு பதிவாளரின் ஆலோசனையின் அடிப்படையில், இந்த நான்கு தோழர்களும் கூட்டுறவு தேர்தல் அதிகார ஆணையத்தின் தலைமை நிர்வாகி திரு தேவேந்திர குமார் சிங் அவர்களையும் சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதித்தனர். அவரும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இவை தொடர்பாக நாம் விரிவாக கலந்து ஆலோசித்த பின்னர், முடிவெடுக்க வேண்டி உள்ளது. போராட்டக் களமாக பாராளுமன்றம் மாறி உள்ள சூழ்நிலையிலும், சுமார் மூன்று மணி நேரம், நம்முடன் இருந்தது மட்டுமல்லாமல், அதிகாரிகளிடம் நமது தரப்பு நியாயங்களை வலுவாக முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தோழர் R.சச்சிதானந்தம் அவர்களை மனமார வாழ்த்தி பாராட்டுகிறோம்.  இறுதியில், இந்த பிரச்சனை தொடர்பாக, கூட்டுறவு துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களை நேரடியாக சந்தித்து, கடிதம் கொடுத்து விவாதிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.  தோழருக்கு, மேலும், மேலும் நன்றிகள். கூட்டுறவு பதிவாளர் அவர்களிடம் நடைபெற்ற சந்திப்பு மிக மிக பயனுள்ளதாக இருந்தது.  ஊழியர்களின் பணத்தை பாதுகாக்க நாம் நடத்தி வரும் போராட்டத்தின், மிக முக்கியமான பகுதி இது என்பதில், எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நாம் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம். 

வாழ்த்துக்களுடன்,
தோழர் B.மாரிமுத்து CS BSNLEU 
தோழர் D.குழந்தைநாதன் CS NFTE 
தோழர் G.வளனரசு CS SNEA 
தோழர் S.பிரபாகரன் CS AIBSNLEA