Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, January 13, 2026

12.02.2026 பொது வேலை நிறுத்தத்திற்கு, தொழிற்சங்கங்கள் அறைகூவல்.


2026, ஜனவரி 9ஆம் தேதி புதுடெல்லி, HKS பவனில் நடைபெற்ற, மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தொழிலாளர் கருத்தரங்கம், நான்கு தொழிலாளர் தொகுப்புகள் அமலாக்கப்படுவதற்கு எதிராக, 2026, பிப்ரவரி 12ஆம் தேதி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு, அறைகூவல் விடுத்துள்ளன. 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சையான, இதர சங்கங்களின் தலைவர்களும், உறுப்பினர்களும், இந்த கருத்தரங்கில் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்தனர்.  கோரிக்கை பட்டியல் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக, உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டும் என, தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தொழிலாளர் தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய இந்த கருத்தரங்கம், இவற்றின் கீழ் விதிகள் அறிவிக்கப்படுவதற்கான, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.  

இந்த தொழிலாளர் தொகுப்புகளை அமலாக்கப்படுவது தொடர்ந்தது என்று சொன்னால், பல நாட்கள் அல்லது காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும், பகுதி வாரியான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என, மத்திய தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த தொழிலாளர் தொகுப்புகள், அதிகரித்து வரும் வேலையின்மைக்கு நடுவே, தொழிற்சங்கங்களையும் தொழிலாளர் உரிமைகளையும் பலவீனப்படுத்தும் என்றும், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப் படும் என்றும், ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படும் என்றும், விலைவாசி உயரும் என்றும், கல்வி மற்றும் சுகாதாரம், வணிகமயமாக்கப் படும் என்றும், அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் அமைப்புகள், தங்களது ஆதரவை தெரிவித்தன.  

இந்தக் கருத்தரங்கில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் ஹரியானா, உபி (கிழக்கு) மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, நமது சங்கத் தோழர்கள் பங்கேற்றனர். இந்த நான்கு தொழிலாளர் தொகுப்புகளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை, BSNL ஊழியர் சங்கம், ஏற்கனவே துவங்கி விட்டது.  வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை, எதிர்வரும் மத்திய செயலகம் மற்றும் மத்திய செயற்குழு கூட்டங்களில் இறுதி செய்யப்படும். 

தோழர் அனிமேஷ் மித்ரா, G/S., BSNLEU