ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தின் போது, 5% ஊதிய நிர்ணய பலன் வழங்க வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் வலுவாக கோரியது. எனினும், 01.09.2025 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகம் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. இந்த சூழ்நிலையில், 02.09.2025 அன்று, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு ஒரு கடிதம் எழுதி, அதன் நகலை, ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை குழுவின் தலைவருக்கும் அனுப்பியது. அதில் கீழ்க்கண்ட 3 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
1) அதிகாரிகளுக்கு என்ன ஊதிய நிர்ணய பலன் வழங்கப்படுகிறதோ, அதுவே ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என, ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என, BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
2) குறுகிய ஊதிய விகிதங்கள் மற்றும் 0% ஊதிய நிர்ணய பலன் ஆகியவை அமலாக்கப் படுவதால், ஒரு சில ஊழியர்களுக்கு, ஊதிய குறைவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, ஊதிய மாற்றம் அமலாக்கப் பட்டதற்கு பின், எந்த ஒரு தொழிலாளியும், ஊதிய குறைவால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், அவ்வாறு குறைய கூடிய ஊழியர்களுக்கு, கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்கி, ஊதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நாம் கோரி உள்ளோம்.
3) ஊதிய விகிதங்கள் குறைவாக உள்ளதால், ஊதிய மாற்றம் அமலாக்கப் பட்டதற்கு பின்னரும், ஒரு சில ஊழியர்கள் ஊதிய தேக்க நிலையை அடையக்கூடும். எனவே ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டதற்கு பின்னால், எந்த ஒரு தொழிலாளியும் ஊதிய தேக்க நிலையால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், நிர்வாகம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் கோரி உள்ளோம். ஏதாவது ஒரு தொழிலாளி ஊதிய தேக்க நிலையை அடைந்தால், ஊதிய தேக்க நிலையால், அந்த தொழிலாளி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, நிர்வாகம் பொருத்தமான பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.
தோழமையுடன்,
S. ஹரிஹரன்,
மாவட்ட செயலர்
தகவல் : BSNLEU மத்திய / மாநில சங்கங்கள்