ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், இன்று (03.09.2025) காலை 11.00 மணிக்கு துவங்கியது. 01.09.2025 அன்று ஊதிய பேச்சுவார்த்தை குழு கூட்டம் நடந்து முடிந்த பின்னர், BSNLEU மத்திய சங்கம், மாநில செயலாளர்கள் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு, புதிய ஊதிய விகிதங்கள், ஊதிய நிர்ணய பலன் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, அவர்களது கருத்துக்களை சேகரித்தது.
03.09.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், BSNL ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், கீழ்கண்ட கோரிக்கைகளை உறுதியாக முன்வைத்தனர்:-
அ) அதிகாரிகளுக்கு இணையாக, ஊழியர்களுக்கும் ஊதிய நிர்ணய பலன் வழங்க வேண்டும். இது, ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆ) இந்த ஊதிய மாற்றத்தில் அமலாக்கப்படும் ஊதிய விகிதங்கள், அடுத்த ஊதிய மாற்றத்திற்கு, அடிப்படையாக கொள்ளப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை நிர்வாகம் வழங்க வேண்டும்.
இ) ஊதிய மாற்றத்திற்கு பின், ஊழியர்கள் யாருக்கேனும் ஊதிய குறைப்பு ஏற்பட்டது என்று சொன்னால், அவர்களுக்கு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்கி, ஈடு கட்டப்பட வேண்டும்.
ஈ) இந்த ஊதிய மாற்றத்திற்கு பின், ஏதாவது ஒரு ஊழியருக்கு, ஊதிய தேக்கநிலை ஏற்பட்டது என்று சொன்னால், அதனை நிர்வாகம், பொருத்தமான முறையில் கவனிக்க வேண்டும்.
விவாதத்தின் போது, அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டதற்கு பின் தான், ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட முடியும் என, நிர்வாகம் உறுதியாக வாதிட்டது. இதனை கறாராக நிராகரித்த ஊழியர் தரப்பு, ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுத்திடப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த பிரச்சனையில், சூடான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. இறுதியில், நகல் ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை தயார்படுத்த, நிர்வாக தரப்பு ஒத்துக் கொண்டது. ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் அடுத்த கூட்டம், 11.09.2025 அன்று நடைபெறும்.