2025 ஜூன் மாதத்தில் மட்டும், BSNL, 3,05,766 வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக TRAIயின் அறிக்கை கூறுகிறது. ஆனால் இதே மாதத்தில், ஜியோ 19,12,870 இணைப்புகளையும், ஏர்டெல் 7,63,482 இணைப்புகளையும் அதிகரித்துள்ளன. தனது தரக்குறைவான 4G சேவைகளால் தான், BSNL, தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 24.07.2025 தேதியிட்ட THE NEW INDIAN EXPRESS பத்திரிக்கையில் வெளியான மற்றொரு செய்தியின் படி, உ.பி.(மேற்கு) LSAவில், TRAI நடத்திய INDEPENDENT TEST DRIVE (ITD)வில், BSNL மிக மோசமாக செயல்பட்டதாக தெரிவிக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட பெரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களில், BSNL தான், உயர்ந்த பட்ச இணைப்பு துண்டிப்பு விகிதத்தையும், அதிகபட்ச நேர அழைப்பு நிசப்தமாவதையும் கொண்டுள்ளது என, அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த அறிக்கையின் படி, BSNL இணைப்பு வெற்றி பெறும் விகிதம் (CSSR) என்பது 86.57 சதவீதமாக உள்ளது. இது 13% அழைப்பிற்கான முயற்சிகள், தோல்வியுற்றன என்பதையே குறிக்கின்றது. BSNLன் இணைப்பை பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் (CST), 3.03 வினாடிகள் என கணக்கிடப் பட்டுள்ளன. இது இதர நிறுவனங்களை விட, மிக நீண்ட நேரம் ஆகும். தானியங்கி தேர்வு முறையில் BSNL லின் அழைப்பு துண்டிக்கப்படும் விகிதம் (DCR) 3.45% என்ற உயர்ந்த பட்ச அளவில் உள்ளது. இதற்கு மோசமான இணைப்புத் திறன், அல்லது போதுமான அளவில் மொபைல் டவர் கவரேஜ் இல்லாதது தான் காரணம். இந்தச் செய்தி வெளியாகி உள்ள இதே நேரத்தில் தான், மத்திய அரசாங்கம், நாடு முழுவதும், BSNL 95,000 மொபைல் டவர்களை, செயல்படுத்தி உள்ளதாக கூறிக் கொள்கிறது.