Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 15, 2022

JE இலாகா தேர்வு - பொதுச்செயலாளர் - DIRECTOR(HR)உடன் சந்திப்பு


BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, 11.07.2022 அன்று திரு அர்விந்த் வட்னேர்கர் DIRECTOR(HR) அவர்களை சந்தித்து கீழ்கண்ட பிரச்சனைகளை விவாதித்தார்.

1) 16.10.2022 அன்று நடைபெற உள்ள JE இலாகா தேர்விற்கு குறைவான காலிப் பணியிடங்கள்:- 

16.10.2022 அன்று JE இலாகா தேர்வு நடைபெறும் என நிர்வாகம் அறிவிப்பு வழங்கியுள்ளது. JTO இலாகா தேர்வை போலவே, இந்த JE இலாகா தேர்விலும், 14 மாநிலங்களில் மட்டுமே காலிப் பணியிடங்கள் உள்ளன. இதிலும், 7 மாநிலங்களில், ஒற்றை இலக்கத்திலேயே காலிப் பணியிடங்கள் உள்ளன. இது, JE இலாகா தேர்வை எழுத காத்திருக்கும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. BSNL நிர்வாகம், ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்து வருவதை, 11.07.2022 அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பொதுச் செயலாளர் சுட்டிக் காட்டினார். எனவே, 31.01.2020 அன்று உள்ள காலிப் பணியிடங்களுக்கு, JE இலாகா தேர்வு நடத்தப்பட வேண்டும் என பொதுச்செயலாளர், மீண்டும் ஒருமுறை வற்புறுத்தி உள்ளார்.

மேலும், 2020ஆம் ஆண்டின் காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே தற்போது JE இலாகா தேர்விற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளதையும் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு சுட்டிக் காட்டினார். 2021ஆம் ஆண்டின் காலிப் பணியிடங்களுக்கான JE இலாகா தேர்விற்கும், உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

2) JE இலாகா தேர்வை OFF LINE மூலம் நடத்த வேண்டும்:- 

JE இலாகா தேர்வு, ONLINE மூலம் நடத்தக் கூடாது என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கோரி வருகின்றது. இந்த இலாகா தேர்வு எழுத உள்ள பல டெலிகாம் டெக்னீசியன் ஊழியர்கள், கணிணி பயன்பாட்டில் பரிச்சயமிக்கவர்கள் அல்ல என்பதாலேயே, இந்த கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. எனவே, JE இலாகா தேர்வை ONLINE மூலம் நடந்தால் பல சிரமங்கள் ஏற்படும். JE இலாகா தேர்வு OFFLINE தேர்வாகவே நடைபெற வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு வலிமையாக வற்புறுத்தி உள்ளார்.

3) JE இலாகா தேர்விற்கான கேள்வி கடினமாக இருக்கக் கூடாது:- 

2018ஆம் ஆண்டு நடைபெற்ற JE இலாகா தேர்விற்கு, 9185 காலிப் பணியிடங்கள் இருந்தன. எனினும், அந்த தேர்வை எழுதிய 1800 தேர்வாளர்களில், வெறும் 111 தேர்வாளர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கேள்விகள், மிக உயரிய தரத்தில் இருந்ததே, இதற்கு காரணம். இதனை கருத்தில் கொண்டு, தற்போது நடைபெற உள்ள JE இலாகா தேர்விற்கான கேள்விகள், கடுமையானதாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு DIRECTOR(HR)ஐ கேட்டுக் கொண்டார். தேர்வாளர்களை வடிகட்டும் நோக்கத்துடன் கடினமான கேள்விகள் கேட்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் DIRECTOR(HR)ஐ கேட்டுக் கொண்டார்.

4) JE இலாகா தேர்விற்கான தேதிகளை மாற்றுக:- 

ஊழியர்களுக்கான 9வது உறுப்பினர் சரிபார்ப்பு, 2022, அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதே சமயத்தில், 16.10.2022 அன்று JE இலாகா தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பையும், நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகங்கள், 9வது உறுப்பினர் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார்கள். மேலும், தொழிற்சங்க தலைவர்களாக உள்ள JE இலாகா தேர்வு எழுதக் கூடிய தேர்வாளர்கள், உறுப்பினர் சரிபார்ப்பு பிரச்சார பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, 2022 நவம்பர் மாதத்தில் JE இலாகா தேர்வை நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, DIRECTOR(HR)ஐ கேட்டுக் கொண்டார்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்