Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 1, 2017

மரணப் படுக்கையில் பாரதி பாட்டு

Image result for muthu sundaram


1978 ஆம் ஆண்டு, மாநிலம் முழுவதும்,அரசு ஊழியர் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆர்.முத்துசுந்தரம் அவர்களோடுஇணைந்து பணியாற்றும் வாய்ப்பை முதன் முதலாகப் பெற்றேன். அதற்கு முன்னரே நடவடிக்கைக் குழுக் கூட்டங்களில், (என்.ஜி.ஓ.யூனியனில் இருந்து விலகி தனியாக செயல்பட்ட காலம்) அன்றைய ஒருங்கிணைந்த கோவைமாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டக்கிளையின் சார்பில் பங்கேற்றபோது அவரை அறிந்திருந்தேன். ஆனால் போராட்டக் காலத்தில், அலுவலக வராண்டாவில் இரவைகழித்து, உண்டும் உறங்காமல் அவர் சுழன்றுபணியாற்றியதைக் கண்டு அவர் வயப்பட்டேன். அன்று முதல் என் ஆருயிர்தோழராக அவர் விளங்கி வந்தார். 40 ஆண்டுகாலம் நானும் அவரும் பயணித்த பயணங்கள், சந்தித்த துயரங்கள், அங்கீகாரங்கள் எண்ணற்றவை.

1978 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது தொடர்பாக நடவடிக்கைக் குழுவில் விவாதங்கள் நடைபெற்று வந்தபோதுஅதில் பங்கேற்பதே சரியான முடிவாகும் என வாதிட்டவர்களில் அவரும் ஒருவர். அதே போல் நடவடிக்கைக் குழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றப் பிறகே அது முழுமையானது. நடவடிக்கைக் குழுவை கலைத்துவிட்டு என்ஜிஓயூனியனில் இணைவது என்ற முடிவு எடுத்தபோது அதிலிருந்து பலர் வேறுபட்டனர். தோழர்ஆர்எம்எஸ் இணைப்பே அரசு ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். அதுவே நடவடிக்கைக் குழுவை கலைத்துவிட்டு மீண்டும் ஒற்றுமையை முன்னுறுத்தி என்.ஜி.ஓ. யூனியனில் இணைவதற்கு வழிவகுத்தது. மாநிலம் முழுவதும் அரசுஊழியர்களிடையே நடவடிக்கைக் குழுவினர் மீதான கவனத்தை ஈர்த்தது. இணைப்பிற்கு பிறகு நடைபெற்ற அமைப்பு தேர்தலில் ஆர்எம்எஸ் இருந்த கோவை மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடவடிக்கைக் குழுவினர் வெற்றி பெற்றனர்.தோழர் ஆர்.எம்.எஸ். அவர்களின் இளமைக்காலம் முழுவதும் சங்கப்பணியில் கரைந்தது என்றால் அது மிகையாகது. 1978லிருந்து 1984 வரை என்.ஜி.ஓ.யூனியன் நடவடிக்கைகளில் பங்கேற்று, சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட முதலான நிகழ்வுகள் அவரை மாநில அளவில் அரசுஊழியர் அரங்கில்அறிமுகப்படுத்திய நிகழ்வுகளாகும். 1984இல்அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றபின் அவரது செயல்பாடுகள் அவரை அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நிலைக்கு உயர்த்தியது.

அவர் இளமையில் உண்ணாத நாட்களும் உறங்காத நாட்களும்தான் அதிகம். அன்று சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தோழர்கள் தங்களது ஊதியத்தின் ஒருபகுதியை செலவழித்தனர். அவர்களில் ஒருவராக தோழர் ஆர்.எம்.எஸ். விளங்கினார். தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த பல தோழர்களில் முதன்மையானவர் தோழர் ஆர்.ஆம்.எஸ்.அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் நிகழ்வுகளில் அவருடன் தோழர் ஆர்.எம்.எஸ் பங்கேற்றதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமாகி, சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொதுச் செயலாளராக, இறுதிவரை அதன் அகில இந்திய தலைவராக விளங்கியவர் தோழர் ஆர்.எம்.எஸ். சம்மேளனத்தின் சார்பில் அவர், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இலங்கை,நேபாளம் போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்று மாநாடுகளில் பங்கேற்றவர். தமிழில் உரையாற்றுவதைப்போலவே சரளமாக ஆங்கிலத்திலும் உரையாற்ற வல்லவர். இவ்வாறு பேசுவதற்காக சிரத்தை மேற்கொண்டு பயிற்சி பெற்றவர். இறுதிக் காலக்கட்டத்தில் இந்தி மொழியிலும் உரையாற்றி வடமாநில அரசு ஊழியர்களின் தலைவராக விளங்கியவர். அவரை’ முத்துதாதா’ என்றே வடமாநிலங்களின் அரசு ஊழியர்களின் தலைவர்கள் அழைப்பர். சர்வதேச அரசியல் நிலைமைகளை அறிந்து பிறருக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலால் தோழர் சுகுமால் சென் அவர்களால் பாராட்டு பெற்றவர். கோவையிலும், சென்னையிலும் அகிலஇந்திய மாநாடுகளை நடத்த காரணமாயிருந்தவர்களில் ஆர்எம்எஸ் அவர்களும் ஒருவர்.அரசு ஊழியர் ஆசிரியர்களின் மகத்தான வேலை நிறுத்தப் போராட்டங்களில், 1978, 1988, 1992, 2002, 2003 ஆண்டுகளில் நடைபெற்றவை வரலாற்று சிறப்புமிக்க போராட்டங்கள் ஆகும். இவற்றில் அனைத்திலும் தோழர் ஆர்.எம்.எஸ். அவர்களின் பங்கு மகத்தானது.

2003 ஆம் போராட்டக் காலங்களில் அரசின் கடுமையான அடக்குமுறையைக் கண்டு அஞ்சாமல், பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, சங்கவேறுபாடின்றி பாதுகாத்தவர். தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தலில், அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆளும் கட்சிதுவண்டுபோனது. அவருக்கு தூது விட்டது.இழப்பையெல்லாம் ஈடு கட்டுகிறோம் எங்கள் செலவில் மாநாடு நடத்தி தருகிறோம் முதல்வரை அழைத்து நடத்துங்கள் என்று கெஞ்சினர். அவை அனைத்தையும் நிராகரித்து, ஊழியர்களை திரட்டி ஆளும் கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்தவர். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுமார் இரண்டு லட்சம் அஞ்சல் வாக்குகள் ஆளும்கட்சிக்கு எதிராக பதிவு ஆனதும், வெற்றிபெற்ற எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஒரு சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். அந்நேரத்தில் அவர் எழுதிய‘பகைமுடிக்கும் பணி முடிப்போம்’ என்ற புத்தகம் லட்சக்கணக்கில் தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது.தனது பேச்சாற்றலால் இளைஞர்களின்பால் ஈர்க்கப்பட்டவர். தமிழ்நாடு முழுவதும், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களாக, மாவட்ட தலைவர்களாக இன்றுஉள்ள பலரும் அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். தன்னையும் தகுதிபடுத்திக்கொண்டு தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தகுதிபடுத்தியவர். தனது இல்லத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவளிக்காமல் விடாமாட்டார். வீட்டில் எது உள்ளது எது இல்லை என்ற நிலையிலும், தனது துணைவியாரை அழைத்து வந்தவர்களுக்கு உணவளிக்க சொல்வார். அவரும் (திருமதி உஷாராணி) கணவரின் விருப்பப்படியே வந்தவர்களை உபசரிப்பார். தனது துணைவியாரையும் பொதுவுடைமை இயக்கத்தில் பங்கேற்க வைத்து, மாதர் சங்க தலைவர்களில் ஒருவராக விளங்கச் செய்தவர். தான் பின்பற்றும் கொள்கைகளை தனது குடும்பத்தாரும் பின்றபற்ற வலியுறுத்தி வெற்றி கண்டவர்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அவரது சகோதரர் ஒரு விபத்தில் காலமான நிகழ்ச்சி அவரை பெரிதும் பாதித்துவிட்டது. சிலமாத காலம் உடல் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர் படுத்த படுக்கையாக இருந்தபோதும் உணர்வுகள் மங்கிவிடவில்லை. அவரைசந்திக்கும்போதெல்லாம் இயக்க நடவடிக்கைகள் குறித்தே பேசினார். தனது மரணம் நெருங்கிவிட்டதை அறிந்த அவர், ஒரிரு நாட்களுக்கு முன், காலனைப் பார்த்து, அஞ்சி விடுவேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியாரின் பாடலை எங்கள் முன் பாடிக்காட்டி எங்களின்கண்களில் நீர்வழியச் செய்தார்.

அவரது இறப்பிற்குப் பிறகு எந்த ஒரு சம்பிரதாய சடங்குகளும் மேற்கொள்ளாமல், அவரது விருப்பப்படி, ஈரோடு அரசு மருத்துவமனையிலிருந்து, சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு சென்று, தோழர்களை அவர் வழக்கமாக சந்தித்து உரையாடும் இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , அவரது உடல் அரசினர் மருத்துவமனைக்கு , மாணவர்களின் பயிற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு அவரது குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு நல்கியது அங்கிருந்த அனைவரையும் நெகிழவைத்தது. அவரது இறுதி நிகழ்ச்சியில், சென்னை கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு பேரணியாகச் சென்று கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்தனர்.அருமைத் தோழர் ஆர்.எம்.எஸ். மறையவில்லை. அவர் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.


Image result for theekkathir