Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, August 1, 2017

தேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்

Image result for surjeet
சுதந்திர போராட்ட தியாகி தோழர் சுர்ஜித் அவர்களுக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நினைவு அஞ்சலி. தோழரின் நினைவு நாள், இன்று, 01.08.2017

தற்போது மத்தியில் உள்ள பாஜக ஆட்சியாளர்கள் சொல்வது போல் எல்லைக் கோடுகளையும், தேச வரைபடத்தையும் நேசிப்பது அல்ல தேசபக்தி. உண்மையான தேசபக்தி என்பது அதற்கு உள்ளே வாழும் மக்களைநேசிப்பது; அவர்களின் நல்வாழ்வுக்காக போராடுவது தான். அப்படி இந்திய தேசபக்தியின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், இந்திய விவசாய மக்களிடையே மிகவும் பிரபலமான தலைவருமான தோழர் சுர்ஜித், 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று ஹர்னாம் சிங்-குர்பச்சன் கவுர் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார். அவர்பிறந்த ரூப்வால் கிராமமானது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ளது.சுர்ஜித்துக்கு ஐந்து வயதாகும் போது அவர் கிராமத்திலிருந்த துவக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 7 வயதிலேயே அவருக்கு ஒருஅரசியல் அனுபவம் கிடைத்தது.

அந்நாட்களில் அகாலி இயக்கத்தைச் சேர்ந்த 500 தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திரம் குறித்து பிரச்சாரம் செய்வார்கள். அந்த இயக்கம் முடிவடைந்த பின் அவர்கள் புறக்கணிப்பு செய்து கைதாவார்கள். தொடர்ந்து இது நடந்து வந்தது. ஆங்கிலேயே அரசாங்கம் இந்த பயணக் குழுக்களுக்கு உணவோ, குடிநீரோ அளிக்கக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தது. எனவே இந்த ஊழியர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களுடன் சென்று ஆங்காங்கே கோதுமை, தானியங்கள் போன்றவற்றை சேகரித்து உணவு தயார் செய்து அந்த ஊழியர்களுக்கு அளித்தார்கள்.சுர்ஜித்தின் தாயார் குர்பச்சன் கவுர், சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றபோதும் அவர் அகாலி இயக்கத்தில் சேர்ந்தார்.அதனுடைய ஊழியராகிவிட்டார். ஒருமுறை அகாலி ஊழியர்கள் சுதந்திரப் பிரச்சார பயணம் மேற்கொண்டபோது இவரும் சென்றுஉணவு சமைத்துக் கொடுத்தார். இந்த பயணத்தில் இளம் சுர்ஜித்தும் மிகுந்த உற்சாகமாக பங்கேற்றார்.

அதுவே ஆங்கிலேயே எதிர்ப்பு உணர்வை அவர் மனதில் விதைத்தது.புரட்சி ஓங்குக; ஏகாதிபத்தியம் ஒழிக!தேச விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்த போது, சுர்ஜித்தின் இல்லமானது அகாலி, கிலாபத் மற்றும் காங்கிரஸ் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் சந்திக்கும் இடமாக மாறியது. தலைவர்கள், சுர்ஜித் வீட்டிற்கு பல செய்தித்தாள்களையும் வார, மாதஇதழ்களையும் கொண்டு வருவது வழக்கம். அத்தகைய பத்திரிகையில் ஒன்று விவசாயி மற்றும் தொழிலாளர் கட்சி வெளியிட்டு வந்ததாகும்.இப்படித் துவங்கிய சுர்ஜித்தின் சுதந்திரவேட்கையும், அரசியல் உணர்வும் படிப்படியாகஅவரை புரட்சிவீரர் பகத்சிங்கின் எழுச்சி மிகுபோராட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தது.சுர்ஜித் தன்னை பகத்சிங் மற்றும் அவருடைய சக தோழர்கள் உருவாக்கியிருந்த நவ்ஜவான் பாரத் சபா என்ற அமைப்பில் உறுப்பினராகப் பதிந்து கொண்டார். அச்சமயத்தில் சுர்ஜித்துக்கு 14 வயதே நிரம்பி இருந்தது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பகத்சிங். பிரச்சார செயலாளர் பகவதிசரண் வோரா. ‘‘புரட்சி ஓங்குக ஏகாதிபத்தியம் ஒழிக’’ என்பதே இந்த அமைப்பின் பிரதான முழக்கங்களாகும். இந்த அமைப்பின் கதாநாயகனாக பகத்சிங் விளங்கி வந்தார். அவர் சுர்ஜித்திற்கும் கதாநாயகனாக விளங்கினார்.பகத்சிங்கும் அவரது சகதோழர்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் 1931ஆம்ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இது சுர்ஜித்திற்கு மிகுந்த அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது.இந்நிலையில்,ஹேசியார்பூரில் பகத்சிங்கின் முதலாவது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி ஒரு அறிவிப்புச் செய்திருந்தது. அந்த நாளில் பஞ்சாப்பின் ஆளுநர் அந்நகருக்கு வருவதாக இருந்தது. எனவே அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தின் உச்சியில் பறக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தின் கொடியை இறக்கி விட்டு தேசியக் கொடியை பறக்கவிடுவது என்பதுதான் காங்கிரஸ் அறிவிப்பு.இதையறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தத் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றநோக்கத்துடன் நீதிமன்றத்தைச் சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி வைத்தார். அத்துடன், யாராவது அங்கே தேசியக் கொடியை ஏற்ற வந்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அறிவித்தார். இது நாட்டிற்கும், நமக்கும், நமது இயக்கத்திற்கும் பெருத்த அவமானம் என்று கருதினார் சுர்ஜித். தேசியக் கொடியை ஒரு குச்சியில் கட்டிக்கொண்டு அங்கிருந்த நீதிமன்ற வளாகத்தை நோக்கிச் சென்றார். அங்கிருந்த காவலர்கள், காங்கிரஸ்காரர்கள் கொடியை ஏற்றப்போவதாகச் சொன்ன நேரம் முடிவடைந்துவிட்டதாக சற்று ஓய்வாக இருந்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு சுர்ஜித் ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு தேசியக் கொடியைஏற்றினார். ராணுவ வீரர் ஒருவர் சுர்ஜித்தைப்பார்த்து சுட்டார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சுர்ஜித்திடம் நீதிபதி, உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு சுர்ஜித் ‘‘லண்டனை உடைக்கும்சிங்’’ என்று கூறிவிட்டு பகத்சிங்கைப்பற்றி புகழ்ந்து பேசினார். இறுதியாக அந்தநீதிபதி சுர்ஜித்திற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். உடனே சுர்ஜித் அவரைப் பார்த்து இதற்கு ஒருவருடம் தானா தண்டனை என்று கேட்டார்.

இந்த வழக்கில் இதற்கு மேல் தண்டனை வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார்.இந்தத் தகவல் வெளியானதும் சுர்ஜித்தின்தந்தையாரின் நண்பர்கள் அவரை சிறைக்குச்சென்று பார்த்து அவருடைய துணிச்சலுக்காக அவரைப் பாராட்டினர். இப்படிப்பட்ட துணிச்சலும், தீரமும், விடுதலைக்காக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்படத் தயாராகயிருந்த அசைக்க முடியாதவிடுதலை வேட்கையும், அன்றைய ஆர்எஸ்எஸ் - மதவெறிக் கூட்டத்தின் எந்தத்தலைவரிடம் இருந்தது? அவர்கள் ஆங்கிலேயஆட்சிக்கு பல்லக்கு தூக்கினார்கள்.விடுதலை இயக்கத்தின் மகத்தான வீரராக துவங்கி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பெருமைமிகு தலைவராக உயர்ந்த தோழர் சுர்ஜித், 1992ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 முதல் 2004 ஆம்ஆண்டு வரைப்பட்ட காலத்தில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய அரசியல் அரங்கத்தில் மையமாகக் கொண்டுவந்து நிறுத்தினார். இந்திய மக்களின் ஒற்றுமையைக் காப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். அவர் ஜனநாயக சக்திகளை அணி திரட்டி, பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக - குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு எதிராக போராட்டங்களை உருவாக்கினார்.மதவெறி சக்திகள் மற்றும் சங்பரிவாரத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவதற்கான சுர்ஜித்தின் முயற்சிதான் முதல் ஐக்கிய முன்னணிஅரசாங்கத்தை மத்தியில் உருவாக்கியது என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.1996இல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் மத்தியில் உருவாக்கப்பட்டது.

இதற்கு முன்னர்வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசாங்கம் உருவாக 1989ஆம் ஆண்டில் சுர்ஜித்மகத்தான பங்கினை ஆற்றினார். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு தேசியத் தலைவருடைய கருத்தோட்டமும் மதச்சார்பற்ற சக்திகளால் மிக உன்னிப்பாகவும் மரியாதையுடன் கேட்கப்பட்டது என்றால் அது சுர்ஜித்தினுடையது தான். இந்துத்துவா சக்திகளின் தாக்குதலை எதிர்த்து மதச்சார்பற்ற பதாகையை உயர்த்திப் பிடித்ததற்கு இந்த நாடு சுர்ஜித்திற்கு பெரும் கடமைப்பட்டிருக்கிறது.என்றென்றும் ஜோதியாய்...2008 ஆகஸ்ட் மாதம் முதல் தேதி தோழர் காலமானார். அவரது உடல் எரியூட்டப்பட்டுஅஸ்தி பஞ்சாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பல்லாயிரக்கணக்கானமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதியாக அவரது அஸ்தி ஹுசைனிவாலாஎன்ற இடத்தில் ஓடும் சட்லஜ் நதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்குதான் புரட்சி வீரர்கள்பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் ஆகியோரின்உடல்கள் எரிக்கப்பட்டன.அங்குதான் தன்னுடைய அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்றுசுர்ஜித் ஏற்கெனவே கூறியிருந்தார். அதன்படி அவரது அஸ்தி அங்கு கரைக்கப்பட்டது. பகத்சிங்கின் வாரிசுகளாய் இந்தியா முழுவதும் எழுச்சியோடு அணி வகுக்கும் இளையதலைமுறைக்கு எரிகிற ஜோதியாய் என்றென்றும் வழிகாட்டுகிறார் தோழர் சுர்ஜித்


Image result for theekkathir