Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 5, 2014

நீதியின் சுடர் அணைந்தது



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கால மானார். எர்ணாகுளத்தில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில்அனுமதிக்கப்படிருந்த அவர் வியாழனன்று மாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 24 அன்று அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 100.வழக்கறிஞர், பொதுநலவாதி, ஐக்கிய கேரளத்தின் முதல் உள்துறை-சட்ட அமைச்சர், நீதிபதி, நீதியின் காவலன் என்று பல்வேறு நிலைகளில் ஒரு நூற்றாண்டு காலம் இந்திய சமூகத்தில் நிறைந்து நின்றவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர் என்ற வி.ஆர்.கிருஷ்ணய்யர் 1915 நவம்பர் 15 அன்றுகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள வைத்தியநாதபுரத்தில் வழக்கறிஞர் வி.பி.ராம அய்யர், நாராயணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் இண்டர்மீடியட் கல்வியை நிறைவு செய்த கிருஷ்ணய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பட்டமும், சென்னைப்பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப் புப் பட்டமும் பெற்றார். 1938ல் மலபார்-கூர்க் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதில் பெரும்பங்காற்றினார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு சட்ட உதவிகள் செய்தார் என்ற வழக்கில் 1948ம் ஆண்டு ஒருமாத காலம் சிறையிலடைக்கப்பட்டார்.
1952ல் கூத்துப்பறம்பு தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய கேரளத்தில் 1957ல் நடைபெற்ற முதல் தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இ.எம்.எஸ் அமைச்சரவையில் சட்டம், உள்துறை, சிறைத்துறை, சமூக நலம், மின்சாரம், நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றினார்.விமோசன சமரம் என்ற பெயரில் இ.எம்.எஸ் அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்பு 1959ம் ஆண்டு முதல் மீண்டும் வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தினார். 1968ல் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். 1970ல் இந்திய சட்டக் கமிஷன் உறுப்பினரானார். 1973ம் ஆண்டு ஏழைகளுக்கு சட்ட உதவி வழங்குவது சம்பந்தமாக அமைக்கப்பட்ட மத்தியக் குழுவின் தலைவரானார். 1973ம் ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்ற நீதிபதியானார். 1980ம் ஆண்டு நவம்பர் 14 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1987ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆர்.வெங்கட்ராமனை எதிர்த்துப் போட்டியிட்டார்.சட்டங்கள் குறித்த பல்வேறு நூல்கள் உள்பட 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். வான்டரிங் இன் மெனி வேர்ல்டு என்ற சுயசரிதையும் 3 பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1999ல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் சட்ட உலகில் வாழும் சகாப்தம் என்ற விருது வழங்கி சிறப்பித்தது. மூன்று பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர்பட்டமும், மேலும் பல்வேறுவிருதுகளும் வி.ஆர்.கிருஷ்ணய்ய ருக்கு வழங்கப்பட்டது. இவரது மனைவி சாரதா 1974ல் காலமானார். இவருக்கு ரமேஷ், பரமேஷ் என்ற மகன்களும், லதா, இந்திராணி என்ற மருமகள்களும் உள்ளனர்.