BSNL நிறுவனத்தை சீரழிக்கும் நோக்கோடு, ஒன்றிய அரசாங்கம், உள்நாட்டு தொழில்நுட்பம் என்கிற பெயரில், TCS நிறுவனத்திற்கு, 4G சேவைகள் வழங்க அனுமதி வழங்கியதை நமது தோழர்கள் அறிவார்கள். இந்தியாவின் தலை சிறந்த தனியார் நிறுவனங்களில் ஒன்றாக TCS நிறுவனம் அறியப்பட்டாலும், தொலைதொடர்பு சந்தைக்கு அவர்கள் புதியவர்கள். அவர்களால், அவர்களின் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, நமது நிறுவனத்தில், 4G சேவைகள் சரியாக வழங்க முடியவில்லை. BSNL வாடிக்கையாளர்களை, சோதனை கூட எலியாக மாற்றி, சோதித்து வருகின்றனர். நாடு முழுவதும், கொத்துக் கொத்தாக, நமது வாடிக்கையாளர்கள், MNP PORT OUT முறையில் நம்மை விட்டு வெளியேறி வருகிறார்கள். அகில இந்திய, மாநில, மாவட்ட அளவில் நமது சங்கம் தொடர்ச்சியாக நிர்வாகத்தோடு பலமுறை பேசியும் கூட, ஆக்கபூர்வமான முன்னேற்றம் இல்லை.
அதே போல், FTTH சேவைகளிலும், ஒரு காலத்தில் தலை சிறந்து விளங்கிய நாம், இன்று இறங்கு முகமாக உள்ளோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகம் சம்பந்தமான குறைபாடுகள் (SPEED ISSUE) அதிகமாக உள்ளது. பழுது நீக்கம், தவறான பில்லிங் மற்றும் TIPகளை கண்காணிக்க முறையான ஏற்பாடுகள் இல்லாமல் உள்ளது.
அதே போல், கண்மூடித்தனமாக, மாநிலம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களை, OUTSOURCING முறையில் தனியாருக்கு தாரை வார்க்க, மாநில நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. நம்மை கலந்து ஆலோசிக்காமல், நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது வருத்தத்திற்குரியது.
இந்த பின்னணியில், கடந்த 30.05.2025 அன்று நடைபெற்ற BSNLEU தமிழ் மாநில செயற்குழுவில், சேவை மேம்பாடு கோரிக்கைகளை மட்டும் மையபடுத்தி, மாநில அளவில், மாவட்ட தலைநகரங்களில், உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், நமது சேலம் மாவட்டத்தில் இந்த போராட்டம், CoC சார்பாக நடைபெறும். சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், 25.06.2025 புதன்கிழமை அன்று, நண்பகல் 12.30 மணி அளவில், உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநில சங்கத்தின் போராட்ட பிரகடனத்தை, கோரிக்கை விளக்கங்களாக, இத்துடன் இணைத்துள்ளோம்.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும், மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், அலைகடலென திரண்டு, போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


