கடந்த இரண்டு நாட்களாக, இந்திய தொலைத்தொடர்பு துறையில், மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. எலான் மஸ்கின் SPACE X நிறுவனத்துடன், தாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, இந்தியாவின் இரு பெரும் கார்ப்பரேட் தொலைதொடர்பு நிறுவனங்களான, ஜியோவும், ஏர்டெல்லும் அறிவித்துள்ளன. எலான் மஸ்கின், STARLINK செயற்கைக்கோள் இணையதள வசதியை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு தான், இந்த ஒப்பந்தங்கள்.
செயற்கைக்கோள் இணையதள சேவை என்றால் என்ன? சாதாரணமான மொபைல் டவர் மூலமாக வழங்கப்படும் இணையதள சேவை அல்ல இது. ஆனால் பூமியில் இருந்து குறைவான உயரத்தில், நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் (LOW EARTH ORBIT SATELITES) மூலமாக வழங்கப்படும் இணையதள சேவை. இந்த செயற்க்கை கோள்கள், எலான் மஸ்கின் SPACE X நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. மொபைல் டவர்கள் உள்ளிட்ட கருவிகள் நிர்மாணிப்பதற்கு சிரமமாக உள்ள, மலை பிரதேசங்களிலும், STARLINKன் அதிவேக செயற்க்கை கோள் இணையதள வசதி வழங்கப்படும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பாரதி மிட்டலின் ஏர்டெல் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்தவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, அவர்களது கொள்ளை இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காகத்தான் உள்ளனர். எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர். அம்பானியும், சுனில் மிட்டலும் அவரோடு கூட்டு சேர்வது, என்பது அவர்களது செல்வத்தை பெருக்கத்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.
இந்தியாவில், வெளிநாட்டு டிஜிட்டல் சேவைக்கு, அரசாங்கம் 30 சதவிகித வரி விதித்துள்ளது. எனவே, STARLINKன் செயற்கைக்கோள் இணையதள சேவைக்கு கட்டணம் அதிகமாக இருக்கும். வாடிக்கையாளருக்கு, ஒரு மாதத்திற்கு, 3,500 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை செலவாகும் என, ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களுக்கு நல்ல தரமான குரல் மற்றும் டேட்டா சேவைகளை, BSNL வழங்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. BSNLலில் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களும், இந்த பிரச்சனையின் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். போர்க்கால அடிப்படையில், BSNL சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு, BSNL நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும்.