Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 30, 2024

CMD BSNLஉடன், BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு


BSNL மற்றும் அதன் ஊழியர்களின் சில முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக, 17.10.2024 அன்று CMD BSNLக்கு, BSNL ஊழியர் சங்கம் ஒரு கடிதம் எழுதி, அவற்றை விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.  அந்தக் கூட்டம், 28.10.2024 அன்று நடைபெற்றது.  

இந்த சந்திப்பில், BSNL ஊழியர் சங்கம் சார்பாக அதன் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, அமைப்பு செயலாளர் தோழர் அஸ்வின் குமார் ஆகியோரும், நிர்வாக தரப்பில், CMD BSNLஉடன் DIRECTOR(HR) திரு கல்யாண் சாகர் நிப்பாணியும் பங்கேற்றனர்.  

அதில் கீழ்கண்ட பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன:-

1)   ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் மீதான ஒப்புதலை அமலாக்க மறுக்கும் நிர்வாகம்:- 27.07.2018 அன்று நடைபெற்ற ஊதிய பேச்சு வார்த்தைக் குழுவின் கூட்டத்தில், ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பாக, கருத்தொற்றுமை ஏற்பட்டதை BSNL ஊழியர் சங்கம் விளக்கியது.  ஆனால், அந்த கடப்பாட்டில் இருந்து பின் வாங்கிய நிர்வாகம், ஒரு குறுகிய ஊதிய விகிதங்களை, நிர்வாகம் ஊழியர்களுக்கு முன்மொழிந்ததையும் சுட்டிக் காட்டப்பட்டது.  இது தான், ஊதிய பேச்சு வார்த்தையில் முட்டுக் கட்டை ஏற்பட்டதற்கு காரணம் என்பதை தலைவர்கள் தெரிவித்தனர்.  இந்த குறுகிய ஊதிய விகிதங்களை ஏற்றுக் கொண்டால், மீண்டும் ஊழியர்கள் ஊதிய தேக்க நிலை பிரச்சனையை சந்திப்பார்கள் என்பதையும் தலைவர்கள் விளக்கினார்கள்.  27.07.2018 அன்று ஊதிய பேச்சு வார்த்தைக் குழுவில் இறுதி செய்யப்பட்ட ஊதிய விகிதங்களை அமலாக்க, CMD BSNLன் தலையீட்டை தலைவர்கள் கேட்டு கொண்டனர்.  அதன் மூலம் விரைவில் ஊதிய உடன்பாடு, கையெழுத்திட முடியும் என்பதையும் தெரிவித்தனர். 

இந்த பிரச்சனையை கவனிப்பதாக CMD BSNL  உறுதி அளித்தார்.

2)   வொடோபோன் ஐடியாவின் வலைத்தளத்தை பயன்படுத்தி, BSNL வாடிக்கையாளர்களுக்கு 4G சேவை வழங்க, BSNLக்கு அனுமதி:- BSNL, 4G சேவை வழங்குவதில் ஏற்பட்டு வரும் அதீத காலதாமதம், BSNLக்கு கடுமையான பாதிப்பை உருவாக்குவதை, BSNL ஊழியர் சங்க தலைவர்கள், CMD BSNLக்கு விவரித்தனர்.  BSNLல் அதிவேக டேட்டா சேவை இல்லாததால், அதன் வாடிக்கையாளர்கள் மிகவும் வருத்தமடைவதை, அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.  2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான், BSNLன் 4G BTSகளின் ஆரம்பம் நிறைவடையும் என சமீபத்தில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா வெளியிட்ட அறிக்கையினை, தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.  தற்காலிகமாக, வோடாபோன் ஐடியாவின் 4G வலைதளத்தை பயன்படுத்தி, BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4G சேவை வழங்க வேண்டும் என தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

எனினும், இந்தக் கோரிக்கையை CMD BSNL ஏற்றுக்கொள்ளவில்லை.  வோடாபோன் ஐடியாவின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், வோடோபோன் ஐடியாவின் 4G வலைதளத்தை பயன்படுத்த, BSNL அதிகமான தொகையை தர வேண்டி இருக்கும் என அவர் கூறினார்.

3) BSNLன் FTTH இணைப்புகள் பெருமளவு துண்டிக்கப்படுவதால்,  BSNLன் FTTH இணைப்புகள் வழங்குவதையும் அதனை பராமரிப்பதையும், BSNL நிறுவனமே மேற்கொள்ள வேண்டும்:- BSNLன் FTTH இணைப்புகள் பெருமளவு துண்டிக்கப்பட்டு வருவதை, BSNL ஊழியர் சங்க பிரதிநிதிகள், CMD BSNLன் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  தற்போது FTTH இணைப்புகளை பராமரித்து வரும் தனியார்களின் பராமரிப்பு, மிக மோசமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.  கேரளா மாநிலத்தில், BSNLன் FTTH இணைப்புகள் SURRENDER ஆகும் விகிதம், 42% ஆக இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். எனவே, TIP முறையை நிறுத்தி, FTTH இணைப்புகள் வழங்குவதையும், பராமரிப்பதையும் BSNL நிறுவனமே எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

எனினும், இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள தேவையான மனித வளம் இல்லாத காரணத்தால், எந்த முன்மொழிவு அமலாக்கப்பட முடியாது என CMD BSNL தெரிவித்தார். BSNLன் FTTH இணைப்புகளுக்கு, MARKETING பணிகளை ஊழியர்கள் செய்ய வேண்டும் என CMD BSNL வலியுறுத்தினார்.

4) மகாராஷ்டிரா மாநிலத்தில் ST ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்கள் பிரச்சனையில், DoTயின் உத்தரவுகள் அமலாக்கப்படாதது:- மகாராஷ்டிரா மாநிலத்தில் பல ST ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள் வழங்கப்படவில்லை. சாதி சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடையவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, அவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இது DoP&T உத்தரவுகளை ஒட்டுமொத்தமாக மீறும் செயலாகும்.   சாதி சான்றிதழ்கள் சரிபார்ப்பு நிறைவடையவில்லை என்ற காரணத்தை சொல்லி, ஓய்வு கால பலன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்க கூடாது என, இது தொடர்பான DoP&T உத்தரவுகளை சுட்டிக்காட்டி, 2022, மார்ச் 22 ஆம் தேதி, DoT, CMD BSNLக்கு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் அதற்குப் பின்னரும், சாதி சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடையவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில்,ST ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக, 28.10.2022 அன்று CMD BSNL உடன் BSNL ஊழியர் சங்கம் விவாதித்தது.  இந்த பிரச்சனையில், DoT உத்தரவுகள் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

சில விவாதங்களுக்கு பின், இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என CMD BSNL, DIRECTOR (HR)க்கு உத்தரவிட்டுள்ளார்.

 5) 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கு, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற, JTO இலாகா தேர்வு முடிவுகளை வெளியிட்டு, வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடுக என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLஇடம் கேட்டுக் கொண்டுள்ளது :- 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கு, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற, JTO இலாகா தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக, 28.10.2024 அன்று, CMD BSNL திரு A.ராபர்ட் J ரவி அவர்களிடம், BSNL  ஊழியர் சங்கம் விவாதித்தது.  இந்த பிரச்சனையின் முழு பின்னணியையும், BSNL ஊழியர் சங்க தலைவர்கள், CMD BSNLக்கு எடுத்துரைத்தனர்.  ”இதே ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு, இதர மாநிலங்களில் நடைபெற்ற தேர்வு பெற்றவர்களுக்கு, பதவி உயர்வு வழங்கியுள்ள போது, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஏன் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன” என கேள்வி எழுப்பினர்.  நிர்வாகத்தின் இந்த முடிவு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர்.  மேலும், இந்த இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, SUPERNUMERARY பதவிகள் உருவாக்கி, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

எனினும், SUPERNUMERARY பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் முன்மொழிவை, CMD BSNL நிராகரித்து விட்டார்.  ஆனால், அதே சமயத்தில், இந்த பிரச்சனைக்கு மாற்று தீர்வை ஆலோசிக்க வேண்டுமென DIRECTOR(HR)க்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண, BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)உடன் தொடர்ந்து விவாதிக்கும். 

6) ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்குக: - DoT காலம் தொடங்கி, ஊழியர்கள் பண்டிகை காலம் முன்பணத்தை பெற்று வருகின்றனர். BSNL உருவான பின்னரும் இந்த முறை தொடர்ந்தது. ஆனால்,  இதற்கு முன்னர் இருந்த CMD BSNL, நிறுவனத்தின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி, பண்டிகை காலம் முன்பணம் வழங்குவதை நிறுத்திவிட்டார்.   ஒரு வருட காலத்திற்கு முன்னரே, BSNL ஊழியர் சங்கம், இந்த கோரிக்கையை, அப்போது இருந்த CMD BSNL இடம் முன்வைத்தது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மீண்டும் இந்த பிரச்சனையை, 28.10.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தற்போதைய CMD BSNL இடம் முன் வைக்கப்பட்டது. 

இந்தப் பிரச்சனையை சாதகமாக பரிசீலிக்க நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

7) ஊழியர்களின் ஊதியத்திலிருந்து LIC பிரீமியம் பிடிப்பதை, மீண்டும் தொடர வேண்டும் :- எப்போதுமே, LIC மற்றும் PLI பாலிசிகளின் பிரீமியம், ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், எந்த காரண காரியமும் இன்றி, கடந்த CMD BSNLன் காலத்தில், இந்த முறையானது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், நமது ஊழியர்கள் எடுத்துள்ள LIC பாலிசிகளுக்கு மட்டுமாவது, ப்ரீமியம் பிடித்தம் செய்து LICக்கு கட்ட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. LIC என்பது இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையும், 28.10.2024 அன்று CMD BSNL உடன் நடைபெற்ற சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

விவாதத்திற்கு பின் இந்த பிரச்சினையை பரிசீரிப்பதாக CMD BSNL உறுதி அளித்தார்.  

8) 01.01.2024 முதல் உயர்த்தப்பட்ட DAவை காசுவல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் :-  BSNLலில் பணியாற்றும் காசுவல் ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 6வது ஊதிய குழுவின் ஊதிய விகிதங்களின் படி ஊதியம் பெறுபவர்களுக்கு, 01.01.2024 முதல் 9% DA உயர்வு ஏற்பட்டுள்ளது.   ஆனால், அந்த DA உயர்வு, BSNLலில் உள்ள காசுவல் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.  இது தொடர்பாக ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதி உள்ளது. 28.10.2024 அன்று CMD BSNL உடன் நடைபெற்ற சந்திப்பின் போதும், இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டது.  

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட CMD BSNL, விரைவில் பணம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்