Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 11, 2019

4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படாததே பிஎஸ்என்எல் நட்டத்திற்கு காரணம்

img


தொலைத்தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியும், புதிய தேவைகளுக்கு ஏற்ப 4ஜி சேவைகளை வழங்க தனி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களும்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இழப்புக்கு அடிப்படை காரணங்கள் என மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.  

மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையிடம், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் அந்நிறுவனத்தை பாதுகாப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு மத்திய தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி, மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் அளித்துள்ள பதிலில், மேற்கண்ட காரணங்களுடன், ஊழியர்களுக்கு ஆகும் அதிக செலவு, கடன்சுமை உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 3ஜி ஸ்பெக்ட்ரம் 2010ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது; தற்போது சில பகுதிகளில் 4ஜி சேவைகளை குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் என்ற அடிப்படையில் வழங்குகிறது என தனது பதிலில் தெரிவித்துள்ள அமைச்சர் ரவிசங்கர், தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3ஜி பேஸ் டிரான்ஸ் ரிசிவர் நிலையங்கள் 61ஆயிரத்து 91, 4ஜி டிரான்ஸ் ரிசிவர் நிலையங்கள் வெறும் 7ஆயிரத்து 818 இயங்கி வருகின்றன என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். 

2017 செப்டம்பரில் தொலைத்தொடர்புத்துறையானது பிஎஸ்என்எல் நிறுவனத்தை நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என வகைப்படுத்தி, மறுசீரமைப்புத் திட்டங்களை தொடங்கியது என்றும் 2019 அக்டோபர் 23 அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான ஒரு விரிவான திட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இத்திட்டத்தில், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வூதியத்திட்டம்; பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்று பணமாக்குவது; 4ஜி சேவைகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது; இவற்றின் மூலம் கடன் மறுசீரமைப்பு போன்றவை அடங்கும் என விவரித்துள்ளார்.

Image result for theekkathir logo