Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 27, 2019

மத்திய சங்கத்தின் பத்திரிகைச் செய்தி!17.6.2019 அன்று,  பி.எஸ்.என்.எல்.  நிர்வாகத்தால் தொலைதொடர்பு இலாகாவுக்கு எழுதப் பட்ட கடிதத்தால் எழுந்துள்ள சில குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் இந்த பத்திரிகை செய்தியை வெளியிடுகிறது. 

பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதென்றும், தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப் படவில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட வேலைகளைத் தொடர்வதற்கும் சிரமம் ஏற்படும் என்று இக்கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இக்கடிதத்தின் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும் தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன. பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவுக்கு ஓர் ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது, பி.எஸ்.என்.எல்.   மட்டுமல்ல, ஒட்டு மொத்த தொலைதொடர்பு துறையும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப்படுத்தி வரும் கழுத்தறுப்பு கட்டணங்களின் காரணமாக பல்வேறு நிதி நெருக்கடிகள் இத்துறையின் குரல்வளையை நெரிக்கின்றன. செப்டம்பர் 2016- இல் சேவைகளைத் துவக்கிய காலம் முதல் அடக்க விலைக்குக் குறைவாகவே ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. பெரும் நிதி வலிமை உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக இத்தகைய நிலைபாட்டை எடுத்து வருகிறது. அரசாங்கமும், டிராய் அமைப்பும் ஜியோ நிறுவனத்துக்கு  ஓசைப் படாமல் தங்களின் ஆதரவை வழங்கி வருவது துரதிருஷ்ட வசமானது. 

அதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.  உள்ளிட்ட அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களின் வருமானமும் தலை கீழாக அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் காட்டுமிராண்டித் தனமான கட்டணப் போர் முறையால், ஏற்கனவே ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம், டெலினார் உள்ளிட்ட பல தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடப் பட்டு விட்டன. பி.எஸ்.என்.எல்.  இன் செயல் திறன் குறித்துப் பேசுவோர், ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. இன்றிருப்பதைக் காட்டிலும் ஒரு லட்சம் ஊழியர்கள் கூடுதலாக இருந்த காலத்தில், 2004-05 ஆம் ஆண்டில் நிகர லாபமாக 10,000 கோடி ரூபாயை  நிறுவனம் ஈட்டியது இதே பி.எஸ்.என்.எல்.  நிறுவனம்தான்.

ஆனால், அதன் பின்னர், 7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு, கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான  புதிய கருவிகள் வாங்குவதற்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கவில்லை. பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் விடுவித்த டெண்டர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப் பட்டன.  இது பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது. மேலே சொல்லப் பட்ட நெருக்குதலுக்குப் பிறகும் கூட,  பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது – ரிலையன்ஸ் ஜியோ வரும் வரை. 

2014-15 நிதியாண்டு முதற்கொண்டு, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைத் தொடர்ந்து ஈட்டி வந்தது.
2015- ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது கூட, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்,  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டத் துவங்கியுள்ளதைப் பெருமையோடு குறிப்பிட்டார். 

இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு இடையிலேயும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனம், தனது மொபைல் வாடிக்கையாளர் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. உதாரணமாக, 2017-18- ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் 11.5 % அதிகரித்தனர். ஆனால் இதே ஆண்டில் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் 9.5 % -உம், வோடஃபோன் 3.8% - உம், ஐடியா நிறுவனம் 3.2% மட்டுமே அதிகரித்தன. 

ஏப்ரல் 2019 மாதத்தில் கூட, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் 2,32,487 புதிய மொபைல் வாடிக்கையாளர்களை இணைத்திருந்தது. ஆனால் ஏர்டெல் 29,52,209 மொபைல் வாடிக்கையாளர்களை இழந்திருந்தது ; வோடஃபோன் 15,82,142 வாடிக்கையாளர்களை இழந்திருந்தது. 

நிதி நிலை குறித்து பேசினாலும் கூட, தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிலை அந்த அளவு மோசமல்ல.  இன்றைய தேதியில், பி.எஸ்.என்.எல்.  றுவனத்தின் கடன் 13,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 1,18,000 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் 1,08,000 கோடி ரூபாயும் கடன் வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட 1,12,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது. 

மேலும், பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி அடித்தளம் போதுமான வலிமையானதாகவே உள்ளது.  7.5 லட்சம் வழித்தட கிலோ மீட்டர் அளவு கண்ணாடி இழை வலைக் கட்டமைப்பு  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திடம் உள்ளது.  ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 6.25 லட்சம் வழித்தட கிலோமீட்டரும், ஏர்டெல் நிறுவனத்திடம் 2.5 லட்சம் வழித்தட கிலோமீட்டரும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் 1.6 லட்சம் வழித்தட கிலோ மீட்டரும் மட்டுமே உள்ளன.

நாடு முழுவதும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியிடங்கள்    பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திடம் உள்ளது.  வேறு எந்த நிறுவனத்திடமும் இவ்வளவு பெரிய சொத்துக்கள் இல்லை.

மேற் சொன்ன இத்தனை வலிமைகள் இருந்தும்,   பணப் புழக்கம்  வருவதில் கடுமையான குறைவை  பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் சந்தித்து வருகிறது. தொலைதொடர்பு துறைக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கமே பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் 100% பங்குதாரராகும். பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில்,  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். பி.எஸ்.என்.எல்.    நிறுவனம் தொடங்கப் பட்டு கடந்த  பதினெட்டரை ஆண்டுகள் காலமாக, மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு நயா பைசா கூட நிதி உதவியாக பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் பெறவில்லை என்று கூறுவது மிகையானதல்ல.

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும்போது அரசாங்கத்துக்குக் கை கொடுப்பது  பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் மட்டுமே. இந்த காலங்களில், தனியார் நிறுவனங்கள், தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்கின்றன.

அது மட்டுமன்றி,  பின் தங்கிய வட்டாரங்களில் வாழும் மக்கள் தங்கள் தொலைதொடர்பு தேவைகளுக்கு  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே,  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. மத்தியில் அதிகாரத்துக்கு வந்த தொடர்ச்சியான அனைத்து அரசாங்கங்களும்  பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்துள்ளன.

இன்று வரையும் இதே நிலைமை தொடர்கிறது.
உதாரணமாக, மொபைல் சேவை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு 1995- ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.   - க்கு, 2002- ஆம் ஆண்டில்தான் மொபைல் சேவை அனுமதி வழங்கப் பட்டது. அது போலவே, 4 ஜி சேவை வழங்குவதற்கான அனுமதி தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் முன்னரே வழங்கப் பட்டது. ஆனால் அரசாங்கம் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை இன்னும் வழங்கவில்லை.

இவ்வாறு, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள்தான்,  நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கடுமையான தடைகளை ஏற்படுத்தி உள்ளன 
2000- ஆம் ஆண்டு, பி.எஸ்.என்.எல்.  றுவனம் உருவாக்கப் பட்ட போது, பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மை பாதுகாக்கப் படும் என்று மத்திய மந்திரிசபை உறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டுமே உள்ளது. தொலை தொடர்பு துறையின் உண்மையான கட்டுப்பாட்டாளர் பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் மட்டுமே.

பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் சந்தையில் இருப்பதால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்த முடியாமல் உள்ளன.
பி.எஸ்.என்.எல்.   நிறுவனம் மூடப் பட்டால், வாடிக்கையாளர்கள் மீது இரக்கமற்ற கட்டணக் கொள்ளையைத் தனியார் நிறுவனங்கள் நடத்துவார்கள்.

எனவே, இந்திய நாட்டு மக்களுடையவும், நாட்டினுடையவும் பரந்துபட்ட நலன்களைக் கருத்தில் கொண்டு,  நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

பி. அபிமன்யு
பொதுச் செயலாளர்
BSNL ஊழியர் சங்கம்

மொபைல் எண் : 9868231113.