Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 9, 2019

கோடிக்கால் பூதம் எழுந்தது !

20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத- தேசவிரோதக் கொள்கை களை எதிர்த்தும் விலைவாசி உயர்வில் துவங்கி விவசாயி களின் துயரம் வரை அனைத்துத்துறைகளிலும் முற்றாக தோல்வி யடைந்துள்ள மோடி ஆட்சியின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் இந்திய தொழிலாளி வர்க்கம் கோடிக் கால் பூதமென எழுந்து நிற்கிறது.20 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்ற பிரம்மாண்டமான - வரலாறு காணாத யுத்தத்தை, மத்தியில் ஆட்சி நடத்தும் ஆர்எஸ்எஸ்-பாஜக வலதுசாரி பிற்போக்கு பாசிசசக்திகளுக்கு எதிராக இந்தியஉழைக்கும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, தொமுச, யுடியுசி ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டான அழைப்பை ஏற்று ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கமும் எழுபதுக்கும் மேற்பட்ட துறைவாரி அகிலஇந்திய சங்கங்களும் ஜனவரி 8 அன்று முழுமையான வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர்.

48 மணிநேரமும் நீடிக்கவுள்ள இந்த வேலைநிறுத்தத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தொழிற்சங்க அமைப்பான பிஎம்எஸ் மட்டும் பங்கேற்கவில்லை. நாடு முழுவதும் வங்கிகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன. இன்சூரன்ஸ் அலுவலகங்கள் முடங்கியுள்ளன. பல்வேறு மாநில அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. நிலக்கரி சுரங்கங்கள் நின்றுபோயுள்ளன. பெட்ரோலியம், அஞ்சல், தொலைத் தொடர்பு, பொறியியல், உற்பத்தித் துறைகள், இரும்பு எஃகு, பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, நீர் சுத்திகரிப்பு மையங்கள் உள்படஅனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஊழியர்களது வேலை நிறுத்தத்தால் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.நாடு முழுவதும் மின்சாரத்துறை ஊழியர்கள் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தால் கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்பட பல நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.கேரளா, அசாம், ஒடிசா மற்றும் கர்நாடகத்தில் பல மாவட்டங்கள் இவற்றோடு வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் முழுமையான பந்த்ஆக தொழிலாளர் வேலைநிறுத்தம் மாறியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், அரியானா, பஞ்சாப், உத்தர் கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநி லங்களில் சாலைப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்தது. ஜம்மு-காஷ்மீரிலும் போக்குவரத்து நின்றது.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டபோதிலும் தொழிலாளர் வேலை நிறுத்தம் வெற்றிபெற்றது. திரிபுராவில் பாஜக அரசு மற்றும் குண்டர்களின் நிர்ப்பந்தத்தால் 30சதவீத கடைகள் திறக்கப்பட்டன.தில்லியிலும் மேற்குவங்கத்தின் 24 பர்கானா, ஹூக்ளி, ஹவுரா ஆகிய மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் முற்றாக மூடப்பட்டிருந்தன. அசாம் மாநிலத்தில் எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டன. மகாராஷ்டிராவில் புனே, நாசிக், அவுரங்காபாத் தொழிற்சாலை மண்டலங்கள் முற்றாக ஸ்தம்பித்தன. கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு தொழில் மண்டலங்கள் முற்றாக மூடப்பட்டன. பஞ்சாப்பில் லூதியானா, ஜார்கண்டில் பொக்காரோ, ராஞ்சி, குஜராத்தில் அகமதாபாத், சூரத், பவன்நகர், பரோடா, ராஜ்கோட், ஜூனாகத் மற்றும் தெலுங்கானாவில் ஹைதராபாத் ஆகிய அனைத்து தொழில்மண்டலங்களிலும் வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தன. பல்வேறு பன்னாட்டு நிறுவன ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் முழுமையாக ஈடுபட்டனர். பெங்களூ ருவில் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.வேலைநிறுத்தத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும்,துறைவாரி சம்மேளனங்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல் உள்ளிட்ட இயக்கங்களும் நடைபெற்றன. இவ்வியக்கங்களில் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள், ஊழி யர்கள் பங்கேற்றனர்.அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்தி விலைவாசியைக் கட்டுப்படுத்திட வேண்டும்; ஊக வணிகத்தைதடை செய்ய வேண்டும்; வேலைவாய்ப்புகளைஉருவாக்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அனைத்து தொழிலாளர் நலச்சட்டங்களையும் எவ்வித விதி விலக்குமின்றி கறாராக அமல்படுத்திடவேண்டும்; அனைத்து தொழிலாளர்களையும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் கொண்டுவர வேண்டும்; குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்திற்கும் குறையாமல் நிர்ண யிக்க வேண்டும்;

மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திட வேண்டும். நிரந்தரத் தன்மையுள்ள பணிகளை ஒப்பந்தப் பணிகளாக மாற்றக்கூடாது; போனஸ், பிஎப் தொகைகளுக்கு கட்டுப்பாடுகளை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி துவங்கியுள்ள இந்தமாபெரும் வேலைநிறுத்தத்தில், இந்திய தொழிலாளர்களின் சகோதர வர்க்கமான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இணைந்துள்ளனர்.விவசாயக் கடன்களை ரத்து செய்திடவேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணைய பரிந்துரையின்படி ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர் வர்க்க வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். எண்ணற்ற மையங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்ட பேரணிகளில் அணிவகுத்து வருகின்றனர்.இந்த பிரம்மாண்ட இயக்கத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் இயக்கங்களும் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளன. ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், ஆதரவு மறியல் போராட்டங்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் நாடுமுழுவதும் பேரெழுச்சியாக வேலைநிறுத்தப்போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

அரசின் மிரட்டலுக்கு அச்சமில்லை

முன்னதாக இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தவும், சீர்குலைக்கவும், பாஜக அரசு சூழ்ச்சி செய்தது. அரசின் கைக்கூலி சங்கமான பிஎம்எஸ் மூலம் அந்த வேலையை செய்திட முயற்சித்தது. ஆனால் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று அதை முறியடித்து பிரம்மாண்டமான வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்திற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே 2018 செப்டம்பர் 28 அன்று புதுதில்லியில் தொழிலாளர்களின் தேசிய மாநாடுநடத்தப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. மூன்றுமாத காலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒரு கோரிக்கையை கூட பேசுவதற்கு கூடமோடி அரசு தயாராக இல்லை. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குபதிலாக இந்த மூன்று மாத காலத்தில் தொழிலாளர்கள் மீது இன்னும் கூடுதலான தாக்குதலையே மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஈவிரக்கமற்ற முறையில் இந்தியாவின்ஒட்டுமொத்த பொதுத்துறையையும் சீர்குலைத்து, சூறையாடி, கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்துக்களாக மாற்றுவதற்கு மோடிஅரசு மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய பின்னணியிலேயே அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், வேலைநிறுத்தத்தை உறுதியோடு வெற்றிகரமாக துவக்கி நடத்தி வருகின்றன. சில மாநிலங்களில் - குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும்பொதுத்துறை ஊழியர்கள் மீது பழிவாங்கும்முயற்சிகளும் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் கூட அதிமுக அரசின் தலைமைச் செயலாளர், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். தில்லியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மின் தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று மாநில துணைநிலை ஆளுநர் அராஜகமான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அனைத்தையும் தகர்த்து, நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த களத்தில் நிற்கின்றனர்.தொழிலாளர் விரோத தேசவிரோத மோடிஆட்சி நடுக்கத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.இத்தகைய பிரம்மாண்டமான வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிய இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தனது செவ்வணக்கத்தை உரித்தாக்குவதாக பிரகடனம் செய்கிறது.

Image result for theekkathir