Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 28, 2018

சங்கம் வைப்போம்! நாங்கள் தொழிலாளர்கள்!




முதலில் நான் ஒரு சிஐடியு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் என்பதால் மட்டுமல்ல;நானும் ஒரு தொழிலாளி என்ற ஒரே காரணத்தினால் இந்த வகையான போராட்டங்களுக்கு எனது ஆதரவு என்றைக்கும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நடைபெற்றுக் கொண்டிருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தொழிலாளர்களும், ராயல் என்ஃபீல்டு கம்பெனி தொழிலாளர்களும், எம்எஸ்ஐ தொழிலாளர் தோழர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. யமஹா தொழிற்சாலை நிர்வாகமானது சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக மூத்த சங்க நிர்வாகிகள் இரண்டு பேரை எந்தவிதக் காரணமுமின்றி பணி நீக்கம் செய்துள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினாலும், பெற்ற தந்தை இல்லை என்ற காரணத்தினாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளது. நிர்வாகமானது எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. தொழிலாளர்கள் முறையாக சங்கம் ஆரம்பிக்க, வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அதனை இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துறை ஆணையர் முன்பாக சமர்ப்பித்து தங்களுக்கு வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை கோரிக்கைமனுவாக தயாரித்து அதனையும் யமஹா நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. அத்தனையையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிர்வாகமானது, திடீரென்று இப்படி ஒரு அரக்க குணம் படைத்த செயலில் ஈடுபட காரணம் என்ன? காவல்துறை உடன் இருப்பதாலா? இல்லை, பணமும் அதிகாரமும் அதிகபட்சமாக தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தினாலா? எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, அது தொழிலாளர்கள் ஒற்றுமைக்கு முன்பாக தவிடுபொடி ஆகி விடும் என்பதை எந்த நேரத்திலும் மறந்துவிடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான சம்பளத்தை வழங்கி இருந்தாலே போதும் எந்த பிரச்சனையும் உருவாகி இருக்காது. ஆனால் நீங்கள் உங்களது கொள்ளையடிக்கும் திறமையை தொழிலாளர்களின் ஊதியத்தில் காட்டும்போது, தொழிற்சங்கம் உருவாகிறது.ராயல் என்பீல்டு கம்பெனியிலும் மூன்று வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த தொழிலாளர்களை ‘நீம்’ என்ற பயிற்சியாளராக மாற்றப்போகிறோம் என்று சொல்லி நிர்வாகம், தன் தலையிலே தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது.

இந்த இரண்டு தொழிற்சாலையிலும் பெண்தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் பாராட்டக்குரியது. உங்களுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளும் நன்றிகளும்.மேலும் எம்எஸ்ஐ தொழிற்சாலை தொழிலாளி கடந்த 22 நாள்களாக கொட்டும் மழை,கொளுத்தும் வெயில் என எதையும் பாராதுதனது நியாயமான கோரிக்கைகளை கேட்டு போராடி வருகின்றனர்... ஆனால் பணம்படைத்த அனைவருக்கும் இந்த மூன்று போராட்டங்களும் பெரிதாக தெரியாது. ஆனால் நீங்கள் எங்கள் இடத்தில் இருந்தால் தான் தெரியும்-அதன் வலியும் வேதனையும்...!மேலும் தொழிலாளர்கள் இந்த மூன்று போராட்டத்திலும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ‘‘இந்த அரசு நமக்கானது அல்ல”, “இந்த காவல்துறையும் நமக்காக இல்லை”-இதனை நாம் மாற்ற வேண்டும். அப்போதுதான் நம் சந்ததியினர் நம்மைப் போன்று இல்லாமல் நிம்மதியாக வாழமுடியும்.தொழிலாளர் துறை உடனடியாக தலையிட்டு உங்கள் அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.உங்களது அனைத்து விதமான போராட்டத்திலும் எங்களது ஜேகே டயர்ஸ் தொழிலாளர் சங்கம்உடனிருந்து ஆதரவளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது போராட்டம் வெற்றிபெற எங்களது புரட்சிகரமான வாழ்த்துக்களை எங்கள் தலைவர் அருண்குமார் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.-

 பிரவின் ஸ்டீபன்ஜே.கே.டயர்ஸ் ஆலைத் தொழிலாளி(முகநூலில்)