Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, September 6, 2018

நாடாளுமன்ற வீதியில் சிவப்பு சமுத்திரம்!


05.09.2018 அன்று டில்லியில், தொழிலாளர்கள் விவசாயிகள் இணைந்து நடத்திய  பேரணியில், லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். BSNLEU சங்கமும் பங்குபெற்றது. 



“யே கிர்தே காலே பாதல் ஆர் யே லால் சமுத்ரா, மோடி சர்க்கார் கே லியே சுனாட்டி ஹை!”- கைகளில் சிவப்பு பதாகையை ஏந்தியவாறு சத்தீஸ்கரில் இருந்து வந்திருந்த அந்த உருக்காலை தொழிலாளி கழுத்து நரம்புகள் புடைக்க முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்.“சூழ்கிற கருப்பு மேகங்களும் இந்த வீதியிலே புகுந்திருக்கிற சிவப்பு சமுத்திரமும் மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும்”. அந்தத் தொழிலாளி இந்தியில் முழங்கியதன் தமிழ் வடிவம் இது.செப்டம்பர் 5. இந்தியத் தலைநகரின் ஆட்சி அதிகார பீடம் அமர்ந்திருக்கிற அந்த வீதியை அதிர வைத்தது, சத்தீஸ்கர் தொழிலாளி போல லட்சக்கணக்கில் கூடியிருந்த தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் இடிமுழக்கம்.பேரணி துவங்கிய போது மேகங்கள் சூழ்ந்து, மழை பொழிந்தபோதிலும், நாடாளுமன்ற வீதியில் சிவப்பு சமுத்திரம் பாய்ந்தது. நாட்டின் அனைத்து முனைகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்திருந்தார்கள். இந்திய நாட்டின் தொழிலாளி - விவசாய வர்க்கத்தினர்.இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று பேரியக்கங்களின் கூட்டு அறைகூவலை ஏற்று மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், தில்லி ராம்லீலா மைதானத்தில் துவங்கி நாடாளுமன்ற வீதியில் முற்றுகையிட்ட - இந்திய வரலாற்றில் தொழிலாளர்களும், விவசாயிகளும், முதல் முறையாக தலைநகரில் கரம் கோர்த்து ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரம்மாண்டமான பேரணியில் பங்கேற்றார்கள்.


இந்திய அரசாங்கத்தின் பிரம்மாண்டமான அலுவலகங்களிலும், கட்டிடங்களிலும் இந்தப் பேரணியின் முழக்கங்கள் பட்டு எதிரொலித்தன. கவுரவமான வேலைவாய்ப்பு, நியாயமானக் கூலி, நிலமற்றோருக்கு நிலம், விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விலைவாசியை கட்டுப்படுத்துவது, சமூகப் பாதுகாப்பு, எல்லோருக்கும் கல்வி மற்றும் சுகாதாரம், காண்ட்ராக்ட் மயத்தையும் தனியார்மயத்தையும் ஒழிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாப்பது என இந்திய தொழிலாளி வர்க்கமும், விவசாய வர்க்கமும், தங்களது வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளை முழங்கின.