Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 15, 2018

உஜ்வாலாவும் நானும்!ராணா அயூப், பிரபல பத்திரிகையாளர்


நான் அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னால் என்னுடைய முகத்தில் மிகத் தாராளமாக‘சன்ஸ்கிரீன்’ தடவிக் கொண்டேன். நடக்கும் போது கொதிக்கும் கோடை வெயிலால் தலைவலி வந்து விடாமல்இருப்பதற்கு என்னுடைய அம்மா ஒரு பாட்டில் (ஓஆர்எஸ்)உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் திரவம் என்னிடம் கொடுத்திருந்தார். நான் என் தலை மற்றும் முகத்தை துணிகொண்டு மூடியிருந்தேன். ஓடுவதற்குப் பயன்படுத்துகின்ற நைக் ஷூ என்னுடைய கால்களில் இருந்தது.பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தையை வீட்டில்விட்டு விட்டு, தன்னுடைய கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்த போது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளது தலை உச்சியில் இருந்த மயிரிழையில் இருந்து ஒரு துளிவியர்வை வழிந்தோடிய போது நான் அவளுக்கு என்னிடம்இருந்த ஓஆர்எஸ் பாட்டிலைக் கொடுத்தேன். அவள்சிரித்துக் கொண்டே, மராத்தி மொழியில் சொன்னாள்: “நன்றி அக்கா! எங்களுக்குப் பழகி விட்டது. உங்களுக்குத்தேவைப்படலாம்” என்றாள்.உஜ்வாலா வைத்திருந்த பை, ஆவணங்களால் நிறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் வங்கிகளுக்கான விண்ணப்பங்கள். கிராமப்புற பதிவாளரிடமிருந்து, உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்ட மராத்தியில் எழுதப்பட்ட சில கடிதங்களும் இருந்தன. கடந்தமாதம் குழந்தை பெற்ற பிறகு, கடுமையான ரத்த சோகையின் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் உஜ்வாலாஅனுமதிக்கப்பட்டாள்; குழந்தை மிக எடை குறைவாகப் பிறந்திருந்தது. சத்துள்ள உணவு என்பதே ஆடம்பரப் பொருளாக இருப்பதால், மூன்று வேளை சாப்பாடு என்பதுஒரு போராட்டமாகவே இருந்தது. சில நாட்களில் அவளுடைய குடும்பம் அரிசி மற்றும் சர்க்கரையை மட்டும் வைத்துஒருவேளை மட்டுமே சாப்பிடும் நிலைமையும் ஏற்படும். அதனால் அவள் தன்னுடைய குழந்தைக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.கடந்த ஆண்டு, அவளுடைய சிறிய நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தும் பூச்சிகளால் நாசம் செய்யப்பட்டன. அவளுடைய குடும்பம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதையெல்லாம் கூறிக்கொண்டே அவளது விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு யாராவது அரசாங்கத்தில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். நான்அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு மாதத்திற்கு கூட நீடிக்காது. அரசாங்கம் மட்டுமேஎங்களுக்கு உதவ முடியும், உங்களால் முடியுமானால் எங்களைக் கவனிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள் என்றாள்.“லால் சலாம்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டுசிவப்புத் தொப்பி, கொடிகளை வைத்திருந்த இளம் சிறுவர்கள் அவளுக்கு சற்றுப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மஜ்தூர் படத்தில் திலீப்குமார் பாடும் பாடலைஅவர்கள் பாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பாடலில் இருந்த ஒரு வரியை மறந்து போனபோது, சிரித்துக் கொண்டே மராத்தி பாடலுக்கு மாறினார்கள். இடதுசாரிக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, தொலைக்காட்சி சேனலில் வேலைசெய்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள்.

மற்றொருவர் அக்கா, நாங்கள் எல்லாம் விவசாயிகள் என்றார்.மாலை வேளையின் இறுதியில், பேரணியில் கலந்துகொண்ட சிலர் சாலையில் இருந்த தேநீர் கடை முன்பாகசற்று நின்று செல்ல முடிவு செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டவராக அந்தக் குழுவில் இருந்த வயதான ஒருவருக்கு தொண்டர் ஒருவர் தேநீர் வழங்கினார். யாரோ ஒருவர்பார்லே-ஜி பிஸ்கட்டை அவரிடம் கொடுத்தார். நான் அவரிடம், நாசிக்கிலிருந்து மும்பைக்கு இந்த வயதில் நடந்துவருவது உங்களுக்குத் தேவைதானா என்று கேட்டேன். நான் ஒன்றும் தனியாக இல்லை, என்னுடைய நண்பர்கள்பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நேற்று இரவு என் கால்கள் மரத்துவிட்டன என்று சொல்லி விட்டு தனக்கிருக்கும் நீரிழிவுநோயைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த நடை அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘நகரத்தில் உள்ள உங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு உணவு, தண்ணீரை கொடுத்தார்கள், மந்திராலயாவில் (மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்) உட்கார்ந்திருக்கும் உங்கள் தலைவர்களிடம் எங்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்கவே நாங்கள்வந்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து கால்நடையாக உங்கள் நகரத்திற்கு வருமாறு அவர்கள் எங்களைக்கட்டாயப்படுத்தி விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட, என்னுடைய மகனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் ஏதோ செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தால் கடனை அடைக்க முடியாது” என்றார் அவர்.அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்னிடம்தன்னுடைய மற்றும் தனது பேரனின் ஆதார் அட்டைகளைக் காட்டினார். “அவர்களுக்குத் தேவையான எல்லாபொருட்களும் எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன, வாக்காளர் அடையாள அட்டையும் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.இதற்கிடையே சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவின்தலைவரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்; “உங்கள் சிவப்புக் கொடிகளை அவர்கள் பார்க்கிறார்கள், நான் உங்கள் ரத்தத்தின் சிவப்பு நிறத்தைப் பார்க்கிறேன்,” என்று தங்களுடைய கட்சிஅங்கம் வகிக்கின்ற கூட்டணி அரசாங்கத்தைச் சீர்குலைக்க இடதுசாரிகள் முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள்கூறுவதைப் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் பேசினார்.

அரசியல் மறதிக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் கூட கலந்து கொண்டார்.என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நான், சிவசேனா அல்லது காங்கிரஸ் கட்சி உங்களுடைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்று கேட்ட போது, கொடிகளின் நிறம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றனர். ‘‘மன்மோகன் சிங் ஒரு விவசாயியின் மகனாகவே இருந்தார். மோடியும் அப்படித்தான் கூறுகிறார். அவர் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர். எங்கள் மீதுஅக்கறை கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? எங்களை இந்த இக்கட்டில் இருந்துவிடுவிப்பவர்கள் எங்களைக் காக்க வந்த ரட்சகர்களாகவே இருப்பார்கள்.’’சிவப்பு நதி மும்பையை நெருங்க, நெருங்க ஆள்பவர்களின் வாட்ஸாப் குழுக்களும், ட்விட்டர் கைத்தடிகளும் செயலில் இறங்கின. மாநிலத்திலும், மத்தியிலும்இருக்கின்ற பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பறக்க விடப்பட்டன. மும்பை பாஜக எம்பி பூனம் மகாஜன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நகர்ப்புற மாவோயிஸ்டுகளால் இந்த விவசாயிகள் போராட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார். ஒருவேளை நாடாளுமன்றம் நடைபெறாமல் இருந்திருந்தால், தனது தொகுதியைத் தாண்டிச் செல்கின்ற விவசாயிகளின் கால்களில் உள்ள கொப்புளங்களை அவர் பார்த்திருக்கலாம்.கடந்த ஆண்டு ஜூன் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனைமுழுமையாகத் தள்ளுபடி செய்து அறிவித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை அப்போது விலக்கிக் கொண்டனர். அந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தன்னிச்சையான கடன் தள்ளுபடி செயல்முறையால் 31 லட்சம் விவசாயிகளே பயன் பெற முடிந்ததாக இந்தப் பேரணியின் அமைப்பாளர்கள் கூறினார்கள்.இந்த ஆண்டு ஜனவரி முதலே, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநில அளவிலான போராட்டம் பற்றி பேசி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கிராமவாசிகளிடம் இருந்து கடன் தொடர்பான விவரங்களைச் சேகரித்து விபரங்களை எடுத்துக் கொண்டு விவசாயிகளைத் திரட்டியது. நான் இதை எழுதும்போது, ​​விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் பட்னாவிஸ் அனைவரின் எதிர்பார்ப்பின்படியே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமும்நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. விவசாயிகளின் குரல்கள் இப்போது நம் வீடுகளுக்குள், மும்பையில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமல்லாது, நாடு முழுக்க இருக்கின்ற வீடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வேதனையைத் தரும் இந்த துன்பகரமான பேரணியை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.களைப்படைந்த முகங்கள், காயமடைந்த கால்களின் படங்கள் மூலமாக, வழக்கமாக ‘வளர்ச்சியை’ மையப்படுத்துகின்ற வாட்ஸாப் பதிவுகளும் பார்வேர்டுகளும் மாற்றி அனுப்பப்பட்டன. நாட்டைப் பீடித்திருக்கும் விவசாயத் துயரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான சாத்தியத்தை இந்த இயக்கம் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்து, காற்றின் திசையை மாற்ற மோடியும் பட்னாவிசும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளோ தங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் திசை திருப்பி தெளிவுபடுத்தி உள்ளனர்.கடந்த காலத்திலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், முன்பு மாதிரி இப்போது அது நிறைவேற்றப்படாமல் இருக்கப் போவதில்லை. நம்முடைய விவசாயிகள் மீண்டுமொரு முறை எச்சரிக்கைவழங்குவதற்காக நமது அலட்சியமான நகரத்திற்கு அடுத்த வருடம் திரும்பி வரலாம் என்று கருதி ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், விவசாயிகளின் துயரக் கதைகள்,விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டு வந்தசெய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறி விட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.

தமிழில்: பேரா.தா.சந்திரகுரு

Image result for theekkathir