Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 15, 2018

ஸ்டீபன் ஹாக்கிங் - புரட்சிகர விஞ்ஞானி

 


பிரபஞ்சம் பற்றிய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்த 21ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் விஞ்ஞானி - முற்போக்கு சிந்தனையாளர். தமது அறிவியல் கருத்துக்களை ஆதாரத்தோடு ஆணித்தரமாக கூறிய மாற்றுத் திறனாளி - முனைவர் ஸ்டீபன் ஹாக்கிங், இப்போது நம்மிடையே இல்லை. அவரது புரட்சிகர அறிவியல் மூளை, 2018, மார்ச் 14 அன்றோடு தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டது.

அவருக்கு உலகத்தின் சார்பில் அஞ்சலி.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். இவர் இங்கிலாந்தின் மிகப் பெரிய கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சவியல் விஞ்ஞானியுமாவார். அவரது அறிவியல் புத்தகங்கள் மற்றும் அவர் பொது இடங்களில் பேசும் தன்மை அவரைப் பெரிய புகழ்பெற்ற கல்வியியலாளராக்கிவிட்டது. அவரது கல்வித்தகுதிகள் CH, CBE, FRS, FRSA என்பதாகும். கலைகளுக்கான ராயல் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக(Honorary Fellow of the Royal Society of Arts) இருக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிகப்பெரிய குடியுரிமை விருதான சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தையும் 2009ல் பெற்றுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக (Lucasian Professor of Mathematics)பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979ல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67ம்வயதில், 2009ல் பணி மூப்பு பெற்றார். சர் ஐசக் நியூட்டனுக்குப் பின், பெருமைமிக்க இந்தப் பொறுப்பு வகிப்பவர் இவரே. இப்போதும் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் செயல்முறைக் கணிதவியல் மற்றும் கோட்பாட்டியல்/கருத்தியல் இயற்பியல் துறையின் கோட்பாட்டியல்/கருத்தியல் பிரபஞ்சவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பதவி வகித்து வந்தார். உலகின் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் கௌரவ விஞ்ஞான பதவிகளை வகித்து வந்தார்.

‘ஹாக்கிங் கதிர்வீச்சு’

பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்புவிசை துறைகளில் ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார். குறிப்பாக, புரிந்து கொள்ளவே கடினமான ‘கருந்துளை’ பற்றிய தகவல்களைச் சொன்னவரும் ஸ்டீபன் ஹாக்கிங்தான். “காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time)” என்ற உலகப்புகழ்பெற்ற நூலை, பலரும் வியக்கும் வண்ணம் பலருக்கும் புரியும்படி மிக எளிமையாக எழுதியதும் இவரே.

‘கருந்துளை’யிலிருந்து கதிர்வீச்சு வருகிறது என அறுதியிட்டு தகவல் தந்தவரும் ஹாக்கிங்தான். எனவே அது “ஹாக்கிங் கதிர்வீச்சு” என்றே அழைக்கப்படுகிறது.

கல்வியில் மோசம் என்று கணிக்கப்பட்ட மாணவர்

இத்தனை பெருமைகளையும் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்த தினம் 1942, ஜனவரி 8ம் நாள். ஹாக்கிங்கின் பிறப்பில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா? கலிலியோவின் 300வது நினைவு தினத்தன்று பிறந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். ஹாக்கிங்கின் தந்தை டாக்டர் பிரான்க் ஹாக்கிங் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளர். தாயின் பெயர் இசபெல் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் இவர்களின் முதல் குழந்தை. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். எனவே ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றோர் ஜெர்மனியின் குண்டு வீச்சுக்குப் பயந்து வட லண்டனிலிருந்து, கேம்பிரிட்ஜுக்கு இடம் பெயர்ந்தனர். ஹாக்கினுக்கு இரு சகோதரிகளும், ஒரு தத்து சகோதரரும் இருந்தனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் தனது பத்தாவது வயதுவரை பெண்கள் பள்ளியிலேயே படித்தார். அவருக்கு அறிவியலில் அதீத ஈடுபாடு இருந்தது. அவரின் ஈர்ப்பு சக்தியாய் இருந்தவர் ஹாக்கினின் கணித ஆசிரியர் டீக்ரன் தாஹ்த (Dikran Tahta) என்ற அர்மீனிய ஆசிரியரே. துவக்கத்தில் அரசின் உதவித் தொகையில் உயிரியல் படித்தார். பின்னர் இயற்பியல் படித்தார். ஆக்ஸ்போர்டில் பி.ஏ பட்டம் 1962ல் பெற்றதும், அங்கேயே தங்கி வானவியல் படித்தார். பின்னர் சூரியப் புள்ளிகள் பற்றியும், கோட்பாட்டியல் வானவியல் மற்றும் பிரபஞ்சவியல் பற்றி படித்தும் ஆராய்ச்சியும் செய்தார்.

இங்கே ஒரு ஆச்சரியமான தகவலை குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங், 9 வது வயது வரை மிக மோசமான மாணவராக கணிக்கப்பட்டார். ஆனாலும் கூட அவரின் சில ஆசிரியர்கள், அவர் மிகப்பெரிய மேதையாக வரலாம் என்றும் கணித்தனர். அது உலகை வியப்பில் ஆழ்த்தும் என்றும் கூறினர். ஹாக்கிங்கின் இளமைக் காலத்தில் அவரது பட்டப்பெயர் ஐன்ஸ்டீன் என்பதாகும். இது கொஞ்சம் வியப்பான தகவல்தான்.

மூளை மட்டுமே மிஞ்சியது

ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு 21 வயதாகும்போது, அவருக்கு நரம்பியல் நோய் பாதித்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக கை, கால் மற்றும் குரலை செயலிழக்கச் செய்தது. மூளையைத்தவிர வேறு எதுவும் பெரிதாக செயல்படவில்லை. அந்த நோயின் பெயர் Amyotrophic Lateral Sclerosis (ALS). அதன் பின் அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர். அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி, அதன்பின் ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் 5௦ ஆண்டுகள் வாழ்ந்தது மட்டுமின்றி பல உலக சாதனைகளையும் சாதித்து பெருமை தேடினார்.

ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நோய் வரும் முன்பு இளம்வயதில், மிகவும் தைரியம் மிக்க சவால் குணம் நிறைந்தவர். ஆக்ஸ்போர்டு படகுக் குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இருந்தார்; அதில் பெருமையும் புகழும் பெற்றவர்.

“நான் இறப்பைப் பற்றி கவலைப்படவில்லை.கடந்த 55 ஆண்டுகளாக அது என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சீக்கிரம் சாக விரும்பவில்லை. எதிலும் முதன்மையானவனாக இருக்கவே விரும்புகிறேன்” என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் ஹாக்கிங். அதன்பின் அவருக்கு நிமோனியா நோய் தாக்கி, மிகவும் அபாய கட்டத்தில் இருந்தார். பிறகு அவருக்கு குரல்வளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் பேசும் திறனை இழந்தார். அதன் பின்னர், அவருக்காக பேசும் குரல் உருவாக்கி (NeoSpeech’s VoiceText speech synthesiser) மூலம்தான் கடைசித் தருணம் வரை அற்புதமாக, முன்பைவிட நன்றாக பேசிக் கொண்டிருந்தார். நிமிடத்திற்கு 15 வார்த்தைகள் அவரால் பேசமுடியும்.

ஸ்டீபன் ஹாக்கிங் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகத்தின் பெயர்“பிரபஞ்சத்துக்கான ஜார்ஜின் ரகசிய சாவி” (“George’s Secret Key to the Universe)

ஸ்டீபன் ஹாக்கிங் இருமுறை மணமுடித்து விவாகரத்து ஆகிவிட்டது.

அவரது மறைவு தினத்திலும் கூட ஓர் அதிசயம்தான். மார்ச் 14, அறிவியலில் - கணிதத்தில் PIE day என்பதன் 30வது  ஆண்டு ஆகும்.

எங்கே அந்தக் கடவுள்?

“புவிஈர்ப்பு விசை என்ற ஒன்று இருக்கும்போது, ஒன்றும் இல்லாததில் இருந்துதானே பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியும்” என்ற பிரபஞ்சம் உருவானது பற்றிய விளக்கத்துடன் கூடிய கருத்தைக் கூறி, கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கவில்லை என ஆணித்தரமாக கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் என்ற தீவிர கடவுள் மறுப்பாளர் இன்று நம்மிடையே இல்லை.

புரட்சிகர இயற்பியல் விஞ்ஞானியும், பிரபஞ்சத்தை கடவுள் உருவாக்கவில்லை என்ற உண்மையை மேலும் உறுதியாக நிறுவியவருமான 21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76ம் வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவினை அறிவியல் உலகம் எப்படி ஈடு கட்டப்போகிறதோ தெரியவில்லை. அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு, அவரின் அறிவியல் கொள்கையை நாம் கடைபிடிப்பதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

பேரா. சோ.மோகனா
கட்டுரையாளர்: மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Image result for theekkathir