Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, December 11, 2017

பிஎஸ்என்எல் நிறுவனம் காக்க வேலைநிறுத்தம்!


A.பாபுராதாகிருஷ்ணன், BSNLEU தமிழ் மாநில செயலர்


இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவது என்ற பெயரால் அரசுத்துறை நிறுவனமாக இருந்ததை 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமாக ஆட்சியாளர்கள் மாற்றினார்கள். இதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் அள்ளித்தருவோம் என வாக்குறுதிகளை கொடுத்தனர்.

ஆனால் ஆரம்ப நாள் முதலே இந்த நிறுவனத்தை சீரழிக்க முயற்சி செய்தனர். நவீன தொழில்நுட்ப சேவையான மொபைல் சேவையினை தனியார் நிறுவனங்கள் எல்லாம் கொடுக்க ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்த பின்னரே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் அந்த வாய்ப்புக் கூட வழங்கப்பட்டது.

தடுக்கப்பட்ட வளர்ச்சி

மொபைல் சேவை வழங்க ஆரம்பித்து ஐந்தாண்டு காலத்திற்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் பல தனியார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி மொபைல் சேவையில் இரண்டாம் இடத்திற்கு வந்தது. இன்னமும் ஒரு ஆண்டு காலம் இதே வேகத்தில் சென்றால் முதலிடத்திற்கு வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருந்தது. பொதுத்துறை நிறுவனத்தின் மீது இந்திய நாட்டு மக்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாகவும், சிறப்பான சேவையின் காரணமாகவும் இந்த நிலை உருவானது.

ஆனால் இந்த நேரத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் 2007ஆம் ஆண்டு தனது விரிவாக்கத்திற்காக இறுதி செய்யப்பட்டிருந்த 4.5 கோடி கருவிகளுக்கான டெண்டரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரத்து செய்தார். சேவையின் விரிவாக்கம் தடுக்கப்பட்டது. பின்னர் 9.3 கோடி கருவிகள் வாங்குவதற்காக டெண்டர் இறுதி செய்யப்பட இருந்த நேரத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதனையும் ரத்து செய்தது. ஒரு ஆறாண்டு காலத்திற்கு மேல் கருவிகளின் பற்றாக்குறையின் காரணத்தால் ஒட்டு மொத்தமாக பிஎஸ்என்எல்-லின் வளர்ச்சி முடக்கப்பட்டது.

கருவிகளின் பற்றாக்குறையின் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு சேவையின் தரத்திலும் குறைபாடு ஏற்பட்டது. 2007ஆம் ஆண்டு வரை நாளொன்றுக்கு பல கோடி ரூபாய்களை லாபமீட்டி வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு பின் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.

அரசின் சமூக கடமைகளுக்காக

அரசாங்கத்தின் சமூக கடமைகள் அமலாக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு இருந்தது. ஒரு புறம் லாபம் தரும் நகரப் பகுதிகளிலும், பெருநகர பகுதிகளிலும் மட்டுமே தனியார் நிறுவனங்கள் தங்களது அக்கறையான சேவையை வழங்கி வந்த நிலையில் தொலை தூர கிராமப்புறங்கள், மலைப் பகுதிகள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் இருந்த மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் சேவையினை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியது. அரசாங்கத்தின் சமூக கடமைகளை நிறைவேற்றுவதற்காக இந்த பொதுத்துறை நிறுவனம் அதனால் ஏற்படும் நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் சேவையினை வழங்கி வருகிறது. இந்த நஷ்டத்தினை இதுவரை அரசாங்கம் ஈடுகட்டவே இல்லை.

சிறந்த சேவை தர களமிறங்கிய 
ஊழியர்கள்

இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காக்கும் பொறுப்பினை இதில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் ஏற்றுக் கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாக “வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்”, “புன்முறுவலுடன் சேவை” போன்ற இயக்கங்களை பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தி சேவையினை மேம்படுத்தினர். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதற்கொண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தனது பணி நேரத்திற்கு மேல் ஒரு மணி நேரம் கூடுதல் பணி செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலை தலைமேல் கொண்டு அதிகாரிகளும் ஊழியர்களும் இரவு, பகல் பார்க்காமல் கூடுதலாக பணியாற்றினார்கள்.

பிஎஸ்என்எல்-லின் புத்தாக்கம்

ஒரு சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தொழிற்சங்கங்களின் இந்த முயற்சியின் காரணமாக மீண்டு வர துவங்கியது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான முயற்சிகளின் காரணமாக 2014-15ஆம் ஆண்டுகளில் இருந்து செயல்பாட்டு லாபத்தை பெற துவங்கியது. தேய்மான செலவுகள் என 7,000 முதல் 8,000 கோடி ரூபாய்களென நிர்ணயிக்கப்பட்டதின் காரணமாகவே நிகர லாபத்தை அடைய முடியாமல் இருந்தது. மத்திய அரசாங்கம் கொண்டு வந்த பண மதிப்பின்மை காரணமாகவும், மோசடித்தனம் நிறைந்த ரிலையன்ஸ் ஜியோவின் வருகையின் காரணமாகவும், கடந்த நிதியாண்டில் தனியார் நிறுவனங்களின் வருவாய் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்த நிலையிலும், பிஎஸ்என்எல்-ன் வருவாய் குறையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஊதிய மாற்றம்

இந்த சூழ்நிலையில் பிஎஸ்என்எல்-லில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மிக நீண்ட பத்தாண்டு காலத்திற்கு பின் வரவேண்டிய ஊதிய மாற்றத்தை மத்திய அரசு லாபமில்லை என்று சொல்லி மறுத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 15 சதவிகித ஊதிய நிர்ணய பலனுடன் கூடிய ஊதிய மாற்றம் தரலாம் என்றும், அதற்காக அரசாங்கம் எந்த ஒரு நிதியும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தரவேண்டியதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. பிஎஸ்என்எல்-லின் சொந்த நிதியிலிருந்தே இவர்களுக்கு ஊதிய மாற்றம் தர முடியும் என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவே கூறிய பின்னரும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 1.85 லட்சம் ஊழியர்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் அரசுத்துறை ஊழியர்களாக பணியில் நுழைந்து அரசின் கொள்கை முடிவின் காரணமாக இன்று பொதுத்துறை ஊழியர்களாக மாறியுள்ளனர். இந்த நிறுவனத்தை பல மட்டங்களில் தலைமை தாங்கும் அதிகாரிகளில் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைய தயாரில்லை என்று கூறி அரசு ஊழியர்களாகவே தொடர்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் மறுப்பது நியாயமில்லை என அந்த ஊழியர்களும், அதிகாரிகளும் கொந்தளிப்பில் உள்ளனர்.

அரசு மறுப்பதற்கான காரணம்

பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்த பொதுத்துறை நிறுவனத்தை சீரழிக்க அரசுகள் எடுத்து வந்த அனைத்து முயற்சிகளையும் ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை நடத்தி தடுத்து இந்த நிறுவனத்தை பொது மக்களுக்கு பயன்தரும் நிறுவனமாக நிலைநிறுத்தி வருகின்றனர். எனவே அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மன நிலையை சீர்குலைக்கவே அரசாங்கம் அவர்களுக்கான ஊதிய மாற்றத்தை மறுத்து வருகிறது.

துணை டவர் நிறுவனம்

மொபைல் சேவையின் வளர்ச்சிக்கு அதிமுக்கிய காரணம் அதன் மொபைல் டவர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள 66,000க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரித்தெடுத்து ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதில் பணியாற்றுவதற்கான ஊழியர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்தே எடுக்கப்படும் என்றும் அதனை பராமரிப்பதும் பிஎஸ்என்எல்-தான் என்றும் அரசாங்கம் கூறுகிறது. பின்னர் எதற்காக அதனை தனியான ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும்? புத்தாக்கத்தை நோக்கி திரும்பியுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடைய செய்வதற்கான முயற்சியே தவிர வேறு ஏதும் இல்லை. மொபைல் டவர்களை தனியாக பிரித்த பின்னர் பிஎஸ்என்எல்லின் புத்தாக்கம் ஒட்டுமொத்தமாக தடைபடும். பின்னர் நலிவடைந்த நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

Image result for theekkathir