அக்டோபர் – 9 தோழர்.சே குவேரா
50வது நினைவு தினம்
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சே குவேரா, பியூனஸ்அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பல விருதுகளையும் பெற்றது.பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார்.
பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. அர்ஜெண்டினாவுக்குத் திரும்பிய சே குவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார்.1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா, பெரு, ஈக்குவடார், பனாமா, கோஸ்டாரிக்கா, நிகரகுவா, ஹோண்டூராஸ், எல்சல்வடார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சே குவேரா குவாதமாலாவுக்குச் சென்றார்.
அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் சே குவேரா, குவாதமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.குவாதமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் நட்பு கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார்.
அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களின் தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பதுநண்பர் அல்லது தோழர் என்னும் பொருள்கொண்ட அர்ஜெண்டினச் சொல்லாகும்.சில காலத்துக்குப் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959-இல் கியூபாவின் ஆட்சிஅதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன்பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின்தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றி னார். அக்காலகட்டத்தில் கொரில்லாப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ஆம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார்.
பின்னர், காங்கோ-கின்ஸாசா (தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப்போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பி னை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து புறப்பட்டார்.சே 1966ஆம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டுஉருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்கசிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார்.சிம்மசொப்பனமாக விளங்கிய சேபொலிவிய இராணுவத்தால் வல்லெ கிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் 1967 அக்டோபர் 9இல் கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப் பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது. கைதி யாக நின்ற நேரத்தில் கூட இப்படி சொல்லித்தான் மரணத்தை வரவேற்றார். “நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு”
- பெரணமல்லூர் சேகரன்