திரிபுராவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட, 30 வயதுகூட நிரம்பாதஇளம் தொலைக்காட்சி செய்தியாளர்சாந்தனு பௌமிக்கின் இறுதிப் பயணத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் வருத்தத்துடன்பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ‘வாழ்க்கை சிறியது... நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்... உண்மையை மட்டுமே பேசுங்கள்...’, என்று 2016 டிசம்பர் இறுதிவாக்கில் பௌமிக் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டது வருந்தத்தக்க, தீர்க்கதரிசனமான சொற்கள்! பயமறியாத பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷின் குரல் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து நடந்துள்ள பௌமிக்கின் படுகொலை, திரிபுராவில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும்அதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கியிருக்கிறது.
கௌரி லங்கேஷைப்போலவே, இவரும் மதவெறியர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தார். இருவருமே, உண்மையைப் பேசியதற்கான விலையாக உயிரைக்கொடுக்க நேர்ந்துள்ளது. தின்ராத் என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பௌமிக்தான், அதன் பெரும்பாலான அரசியல் செய்திகளைத் தந்துகொண்டிருந்தவர். அவரது படுகொலைக்குப் பின்னுள்ள சக்திகளை அடையாளம் காண, அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிற திரிபுரா மாநிலத்தில், நடைபெற்றுவரும் அரசியல் மாற்றங்கள் குறித்து அவர் அளித்துள்ள செய்திகளைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
அரசதிகாரத்தைப்பெற, எதையும், எல்லாவற்றையும் செய்யலாம் என்ற பாரதிய ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் கோட்பாட்டை திரிபுரா முழுவதும் பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது.இது ஓர் என்கவுண்ட்டர் அரசியலாகும். அரசியல் நெறிமுறைகள், ஒழுக்கம், கோட்பாடுகள், உண்மை, நேர்மை மட்டுமின்றி, நாட்டின்மீதான அக்கறையும் இங்கு என்கவுண்ட்டர் செய்யப்படுகின்றன. இந்த என்கவுண்ட்டர் அரசியலின் வெ வ்வேறு கூறுகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், பௌமிக்போல, தங்களைத் தாங்களே ஆபத்துக்குள்ளாக்கிக்கொள்கின்றனர்.எதிர்ப்பவர்கள்மீது, பணபலத்தையும் அச்சுறுத்தலையும் பயன்படுத்துவதுதான் இந்த என்கவுண்ட்டர் அரசியலின் முதல்படியாகும். மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ), வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவைதான் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம் அரசியல் எதிரிகள்மீது ஏவும் திரிசூலத்தின் மூன்று கூர் முனைகளாகும்.
ஆனால் திரிபுராவில், மிகப்பெரிய மக்கள்செல்வாக்கைக் கொண்ட நேர்மையான முதல்வரை இந்த ஆயுதத்தால் நெருங்கக்கூட முடியாது. திரிபுராவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் எங்குள்ள கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினரையும் லஞ்சம் கொடுத்தோ,மிரட்டியோ பணியவைக்க முடியாது. அவர்களால் செய்ய முடிந்த காரியம், கடந்த தேர்தலில் பாஜகவை எதிர்த்தவர்களான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பகுதிப்பேரை விலைக்கு வாங்கியது. தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாமல், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, திரிபுராவில் எதிர்க்கட்சியாகியுள்ள பாஜக, கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்ட அதைப் பயன்படுத்தி வருகிறது.இந்த முதற்படியின் ஒரு பகுதியே, மக்களிடையே எழும் அரசியல் ரீதியான எதிர்ப்புக்களை என்கவுண்ட்டர் செய்யும் அணுகுமுறை. அரசியல் எதிரிகளைக் கொள்கைரீதியான விமர்சனங்கள் மூலம் எதிர்கொள்ளும் வழக்கமான ஜனநாயக முறைக்கு இதுநேரெதிரானது.
மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவது, பாதுகாப்பற்ற நிலையைத் தோற்றுவிப்பது, பொய்களையும் வதந்திகளையும் உற்பத்தி செய்து, அவற்றை வன்முறையாக மாற்றும் கலையைச் சிறப்பாகச் செயல்படுத்துவது ஆகியவற்றைத்தான் இந்த என்கவுண்ட்டர் அரசியல் நம்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்களில், அமித்ஷா வருகைக்கு முன்பாகஇவையனைத்தும் செயல்படுத்தப்பட்டு மதப்பிரிவினைகள் ஏற்படுத்தப்படும். அவர் வந்து, திருப்திப்படுத்தும் அரசியல் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் மாநில அரசைக் குற்றம் சாட்டிப் பேசி, மத்திய அரசின் தலையீட்டுக்கான தேவையை உருவாக்குவார். இதுதான் கேரளா, கர்நாடகம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடந்தது. சிறுபான்மையினர் மிகக்குறைவாக உள்ள திரிபுராவில் இந்தப் பாச்சா பலிக்காது என்பதால், அங்கு 31 சதவீதமாக உள்ள பழங்குடியினருக்கும், மற்றவர்களுக்குமான இணக்கமான உறவைப்பலியாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது பாஜக.
இடது முன்னணி அரசு, மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களையும், உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு,பழங்குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமான நல்லுறவை உருவாக்கி, அமைதியைக்கொண்டுவந்தது. தொடர்ச்சியான அரசியல் பணிகளாலும், நூற்றுக்கணக்கானோர் தீவிரவாத அமைப்புக்களால் கொல்லப்பட்டபோதும் வீரஞ்செறிந்த பணியை ஆற்றிய ஆயிரக்கணக்கான பழங்குடியின கம்யூனிஸ்ட் ஊழியர்களாலும்தான் அரசின் முன்முயற்சிகள் செயல்வடிவம் பெற்றன. பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தசரத்தேவ் துவக்கிய, பழங்குடியினரின் முன்னோடி அமைப்பான, திரிபுரா ராஜேர் உபஜாதி கணமுக்தி பரிஷத் இதில் மிக முக்கியப் பங்காற்றியது.
தீவிரவாதிகளை அடக்க, நாட்டின் மற்றபகுதிகளைப்போல துணை ராணுவப்படையைப் பயன்படுத்தாமல், பழங்குடியின மக்களிடமிருந்து அவர்களை அரசியல் ரீதியாகத்தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. காட்டுமிராண்டித்தனமான சட்டமான ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் திரிபுராவில்2015இல் கைவிடப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா மாறியது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் மிகச்சிறந்த இடத்தை அடைந்ததிலும், குறிப்பாக, பழங்குடியினரின் வளர்ச்சியிலும் உரிமைகளை மேம்படுத்துவதிலும், பொறாமைப்டத்தக்க வளர்ச்சியை திரிபுரா எட்டியுள்ளது.தீவிரவாத அரசியலுக்கு மீண்டும்தற்போது பாஜக உயிரூட்டிக்கொண்டிருக்கிறது.
எல்லைப் பகுதிகளில், பழங்குடியினரல்லாத மக்களின்மீது தீவிரவாதத் தாக்குதல்களைக் கடந்த காலத்தில் நடத்தி வந்த, சட்டவிரோத, பிரிவினைவாத அமைப்பின் அரசியல் பிரிவான திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி(ஐ.எஃப்.பி.டி.) என்ற அமைப்பு உட்பட பழங்குடியினரின் அமைப்புக்களோடு நெருக்கமான உறவை பாஜக உருவாக்கியிருக்கிறது. இடது முன்னணியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்கோடு இக்குழுக்களை காங்கிரஸ் ஆதரித்து வந்தது. தற்போது பாஜக அதே பாதையைத் தீவிரமாகவும், கூடுதல் பணபலத்துடனும் பின்பற்றி வருகிறது.இந்த ஐ.எஃப்.பி.டி. அமைப்பின் தலைவர்களில் ஒரு பகுதியினர் மட்டும் பாஜகவிடமிருந்து ஏராளமான நிதியைப் பெற்று வருவதால் இந்த அமைப்பே தற்போது இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. ஐ.எஃப்.பி.டி.(என்சி தேவ்) என்றழைக்கப்படும் இப்பிரிவின் தலைவர்கள், மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை பிரதமர்அலுவலகத்திலேயே சென்று சந்தித்தனர்.
அதன்பின், அரசியல் சட்டத்தின் 6ஆவது அட்டவணையின்படி உருவாக்கப்பட்ட பழங்குடியினர் தன்னாட்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரித்து, தனி திவிப்புராலாந்து அமைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக்கள் ஏற்படுத்துவது உட்பட, வன்முறைப் போராட்டங்களில் ஐ.எஃப்.பி.டி. ஈடுபட்டுவருகிறது. அதன்வன்முறைகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள தொடர்பினை பௌமிக் உலகறியச் செய்துவந்தார்.பழங்குடியினருக்கான தனி மாநில கோரிக்கைக்காக வன்முறைச் செயல்களை ஊக்குவித்துவரும் அதே நேரத்தில், நகர்ப்புற பகுதிகளில் பழங்குடியினருக்கு எதிரான உணர்வுகளை பாஜக தூண்டி விட்டுவருகிறது.
இது பல இடங்களில் பதற்றத்தையும், சில இடங்களில் இன மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசு உடனடி நடவடிக்கைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி வருகிறது. இத்தகைய நடவடிக்கை, அதுவும் ஓர் எல்லைப்புற மாநிலத்தில், அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.கணமுக்தி பரிஷத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, முதலமைச்சர் மாணிக்சர்க்காரும், பழங்குடியினத் தலைவர்களும் உரையாற்றிய மாபெரும் பேரணி ஒன்று தலைநகர் அகர்தலாவில் செப்.19 அன்றுநடைபெற்றது. பேரணிக்கு வந்தவர்களின் வாகனங்களை ஐ.எஃப்.பி.டி.யின் சிறுகுழுக்கள் தாக்கியதில் 118 பேர் காயமடைந்தனர். இதை பௌமிக் செய்தியாக வெளிக்கொணர்ந்தார்.
அதற்கு அடுத்த நாள், ஜிரானியாவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீதும், ஊழியர்களின் மீதும்நடத்தப்பட்ட தாக்குதல்களை அவரும்அவரது புகைப்படக்காரரும் படம்பிடித்தனர். அந்த இடத்திலிருந்து அப்போது சென்றுவிட்ட அவர், மீண்டும் தாக்குதல் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குதிரும்ப வந்தார். அவரை அடையாளம் தெரிந்து வைத்திருந்ததுடன், தங்கள் வன்முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அவரது செய்திகளையும் அறிந்து வைத்திருந்த கொலையாளிகள் அவரைக் கடுமையாகத் தாக்கி, கடத்திச் சென்றனர். அதன் பின்னர், ரத்தம் தோய்ந்த அவரது உயிரற்ற உடல்தான் கிடைத்தது. இதுவரை ஐ.எஃப்.பி.டி.யினர் 4 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், இக் கொலைக்கான பொறுப்பிலிருந்து, என்கவுண்ட்டர் அரசியலை நடத்தி வருபவர்கள் தப்பித்துவிட முடியுமா?
பிருந்தா காரத்