உலகின் முதல் பெண் டெலிபோன் ஆபரேட்டர்
1878 - உலகின் முதல் பெண் டெலிஃபோன் ஆப்பரேட்டராக எம்மா நட் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் டெலிஃபோன் ஆப்பரேட்டர் பணி என்பது இன்றுநாம் அறிந்துள்ளது அல்ல. அக்காலத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு என்பதை நாமாகவே செய்ய முடியாது. தொலைபேசி இணைப்பகத்தில் இருக்கும் ஒரு ஊழியரிடம் பேசி, நமக்கு வேண்டிய எண்ணுக்கு அவர் இணைப்புத் தரவேண்டும். இதுதான் டெலிஃபோன் ஆப்பரேட்டர் பணி. அதாவது, தொலைபேசி நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் இப்பணி செய்பவர்கள் பேச வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் பேசுவதையும் இவர்கள் கேட்க முடியும். இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பணியிலிருக்கும் வாலிபர்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொண்ட முறைகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் பெண் ஆப்பரேட்டர்களை நியமிக்க அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்த எட்வின் ஹோம்ஸ் தொலைபேசி அனுப்புகை நிறுவனம் முடிவுசெய்து இவரை நியமித்தது. மனித இடையீட்டுடன் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதால் அன்றைய நிறுவனங்கள் டெலிஃபோன் டெஸ்பாட்ச் கம்பெனி என்றுதான் பெயர் கொண்டிருந்தன.
1951இல் நேரடி அழைப்பு வசதி கண்டுபிடிக்கப்பட்டாலும், 1960கள்வரை இம்முறைதான் பெரும்பாலும் புழக்கத்திலிருந்தது. எம்மா நட் பின்னர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் நியூ இங்கிலாந்து டெலிஃபோன் கம்பெனியில் பணிபுரிந்தார்.அந்நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களையும்நினைவில் வைத்திருந்த எம்மா நட் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.