30.08.2017 - கலைவாணர் 60ம் நினைவு நாள்
அது 1956 ஆம் ஆண்டு. கலைவாணர் கையில் மொத்தம் ஏழு படங்கள் இருந்தன. அந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்தது “ராஜா ராணி”. அதன் கதை, வசனம் கலைஞர் மு. கருணாநிதி. இயக்கம் ஏ.பீம்சிங். சிவாஜி கணேசன் - பத்மினி நடித்த இந்தப் படத்தில் கலைவாணரும் மதுரமும் கணவன் - மனைவியாக நடித்தனர். சமரசம் என்பது கணவனின் பெயர். சாந்தம் என்பது மனைவியின் பெயர். டி.ஆர். பாப்பாவின் இசையில் இந்தப் படத்தில் அமைந்ததுதான் “சிரிப்பு... இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பது நமது பொறுப்பு...” என்று தொடங்கும் பாடல். கலைவாணரின் ஆஸ்தான பாடலாசிரியராக உடுமலை நாராயணகவி இருந்தபோதிலும் நகைச்சுவைக்குப் புது அர்த்தம் சொன்ன கலைவாணரின் கொள்கை வரிகளைச் சுமந்துவந்த பாடலை - சிரிப்புக்குப் புது இலக்கணம் சொன்ன இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி.
‘மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு’ என்றும், ‘துன்ப வாழ்வினில் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு’ என்றும், ‘சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கை இருப்பு... வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு’ என்றும் சிரிப்பின் பெருமைகளைச் சிரிக்கத்தெரிந்த மனிதனுக்கே உணர்த்தியது இந்தப் பாடல். 1956 ஜூன் 2 குடும்ப விளக்கு, அக்டோபர் 29 ரங்கோன் ராதா ஆகிய படங்கள் வெளியாகின. இதே மாதத்தில்தான் இந்திய பேசும் படத்தின் 25 ஆம் ஆண்டுவிழா - வெள்ளிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. கலைவாணரும் பங்கேற்றுப் பேசினார். 1956 நவம்பர் முதல் நாள் கேரளத்தின் திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் ஆளுமைக்குக் கீழிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை முதலான 2000 சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் நிலம் தாய்த் தமிழகத்தோடு இணைந்தது.அதனை அரசு விழாவாகக் கொண்டாடினர். இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பங்கேற்க, இணைப்பைவிரும்பிக் குரல்கொடுத்த கலைவாணர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கூடத் தரப்படவில்லை. இணைப்புப்போராட்டத்திற்காகப் பெரும் நிதியுதவி செய்த கலைவாணருக்கு மரியாதை தராததைக் கண்டித்து வாலி பர் சங்கத்தினர் தங்கள் முயற்சியில் ஒரு பெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் பங்கேற்ற கலைவாணர் உற்சாகமின்றி வெறும் ஐந்து நிமிடத்தில் தனது உரையை முடித்துக்கொண்டார்.
கடுமையான கடன் சுமை, வறுமை வாட்டிய நிலையில் உடற்சோர்வுட னிருந்த கலைவாணர் ஒருநாள் தனது காதல் மனைவியிடம் இப்படிக் கூறினார்: “நான் ஐம்பது வயதில் இறந்துவிட ஆசைப்படு கிறேன் மதுரம். அதற்குமேல் உயிருடன் இருந்தால் என் சிரிப்புச் சேவையில் கிழடுதட்டிவிடும்.” மதுரத்துக்குஅதிர்ச்சியாக இருந்தது. இதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கப்போகிறது என்று அப்போது மதுரத்துக்குத் தெரியவில்லை. 1957 ஆகஸ்ட் 15, இந்தியசுதந்திர நாளைத் தென்னிந்தியப் பத்திரிகையாளர் சங்கம் கொண்டாடியது. அதில் தெலுங்கு நடிகர் என்.டி. ராமாராவ் பங்கேற்ற கதம்ப நிகழ்ச்சி ஒன்றைக் கலைவாணர் இயக்கினார். மதுரத்துடன் இணைந்து ஒரு சிறிய நாடகத்தையும் நடத்தினார்.
தேச விடுதலை நாளில் பங்கேற்றதே கலைவாணரின் வாழ்வின் கடைசி நிகழ்ச்சி என்றானது.அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 16 ஆம் நாள் கடுமையான மஞ்சள் காமாலை மற்றும் குலை வீக்கநோயின் காரணமாக கலைவாணர் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கலைவாணரின் உடல்நிலை குறித்த செய்திகளும், கூடவே வதந்தி களும் பரவின. ஒருநாள் கலைவாணரைப் பற்றிய தவறான வதந்தியால் மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். சென்னையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெளியூர்களுக்கும் அவ்வதந்தி பரவி கடைகள் அடைக்கப்பட்டன. மறுநாள் பொழுது விடிந்தது. கலைவாணர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரைக்கண்ட நண்பர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.அழுகைச் சத்தம்கேட்ட கலைவாணர் விழித்துக் கொண்டார். அவர்களிடம் கேட்டார்:“ஏன் அழுகிறீர்கள்?”அவர்களில் ஒருவர் பதில் சொன்னார்: “பாவிப் பசங்க உங்களைப் பற்றி தப்பா செய்தியைப் பரப்பிட்டானுக...”“அதை உண்மைனு நம்பி கடையெல்லாம் அடைச்சுட்டான்” - என்றார் இன்னொருவர்.உடல்நலம் குன்றிய நிலையிலும் கலைவாணர் முகத்தில் நமட்டுச் சிரிப்பு அரும்பியது. சிரித்துக் கொண்டே அவர்களிடம் கேட்டார்: “என்ன செய்தி பரப்பினாங்க... நான் செத்துப் போய்ட்டேன் என்றுதானே?” என்று இயல்பாகக் கேட்டார் தனக்கேயுரிய நகைச்சுவை பொங்க.நண்பர்கள் கதறி அழுதேவிட்டார்கள். அவர்களின் அழுகையைப் பொருட்படுத்தாமல் கலைவாணர் தொடர்ந்தார்:“இப்போதாவது புரிஞ்சுக்கிட்டீங்களா கலை வாணர் என்றால் யாரென்று? கடைகளை அடைக்க மாட்டார்களா என்ன? அப்படித்தான் அடைப்பார்கள். கலைவாணர்னா லேசா? வேணா பாருங்க, நான் நிஜமாவே செத்தப்புறம் இதைவிடப் பெரியளவில் நடக்கும்!”1936 ல் தொடங்கிய அவரது திரைக்கலைப் பயணம்1957 ல் ஒரு முடிவுக்கு வந்தது.
ஐம்பது வயதில் இறந்துவிட விரும்பியவர்தான் அவர். ஆனால் 49 வயது முடியுமுன்னமே தனது உயிருக்கு உயிரான காதல் மனைவிவீட்டிற்குச் சென்றிருந்த அந்த முற்பகல் வேளையில், அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர்,1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் காலை 11 மணி 10 நிமிடத்துடன் தமிழ்கூறு நல்லுலகத்தைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த தனது அரும்பணியை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார் அந்த மகா கலைஞர். ஆனால், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், முற்போக்குக் கருத்துக்களையும் தனது தனித்துவ நகைச்சுவைக் கலையின் மூலம் விதைத்துச் சென்ற அவரது தடம் தமிழுலகத்தின் சிந்தையில் என்றும் நீடுவாழும் என்பதில் ஐயமில்லை.