சேலம் உருக்காலையை பாதுகாக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (மே 17) உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மற்றும் ஊழியர் குடும்பத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை 4000 ஏக்கர் பரப்பளவில் 15000 கோடி மதிப்புடைய பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது ஆலையை விரிவாக்கம் செய்யாமல் நஷ்டத்தில் செயல் படுவதாக கூறி தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஆலையை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கக்கோரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
மேலும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகளை சந்தித்து உருக்காலையை பாதுகாக்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவையில் பேசும் போது சேலம் உருக்காலையை விற்க தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறினார். இந்நிலையில் மத்திய அரசு சேலம் உருக்காலையை விற்க புதிய ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.இந்த ஒப்பந்த புள்ளிகள் புதனன்று மாலை திறக்கப்படவுள்ளது.சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் தற்போதுள்ள 1300 நிரந்தர பணியாளர்களும், 800 தற்காலிக தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலையை இழப்பர். 2000க்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்பும் பறிபோகும்.
இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆர்ப்பாட்த்தில் பேசிய தலைவர்கள் கூறினர்.புதனன்று நடைபெற்ற போராட்டத்தின் போது கோரிக்கைகளை விளக்கி சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கே.பி.சுரேஷ்குமார், ஐஎன்டியுசி தியாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.