சென்னை பல்லவன் டெப்போ
13-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை நிறைவேற்றுதல், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க உடனே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் மே 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினருக் கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில தினங்களாக 7 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.ஞாயிறன்று(மே14) போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடனும் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர்.ஞாயிறன்று மாலையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தன்னெழுச்சியாக துவக்கினர்.
இதனால் திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கரூர், திருவள்ளூர் உள்பட தமிழ் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பேருந்துகளின் இயக்கம் முடங்கியது. தலைநகர் சென்னையிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை துவக்கினர்.இந்த நிலையில், திங்கட்கிழமை முதல் திட்டமிட்டப்படி காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்றுதொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாகஅறிவித்தனர். இதனயடுத்து, வேலைநிறுத்தம் மேலும் தீவிரமானது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கெல்லாம் அரசு பேருந்து ஓட்டுநர்கள்பணிமனைகளுக்கு வந்து தங்கள் பணியைத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால் திங்களன்று அதிகாலை பணிமனைகளில் இருந்து ஒரு பேருந்தும் எடுக்கப்படவில்லை. அரசுப் பேருந்து சேவை முற்றிலும் முடங்கியதால் அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர்.இந்நிலையில் 8 போக்குவரத்து மண்டலங்களிலும் பலத்த போலீஸ்பாதுகாப்புடன், வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க நிர்வாகம்மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.தலைநகர் சென்னையில் உள்ள 37 பணிமனைகளிலும் 95 விழுக்காடு பேருந்துகள் அணி வகுத்து நின்றன.மாநிலம் முழுமைக்கும் அரசுப் பேருந்துகள் ஓடாததால் தனியார் பேருந்துகளிலும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டது.
உதாரணத்திற்கு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்துகளில் ரூ. 45 கட்டணம். ஆனால், தனியார் பேருந்துகள் ரூ.65 வரைக்கும் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.இதற்கிடையே, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசுதரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை திங்களன்று(மே 15) மாலையில் நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, செய்தியாளர்களும் திரண்டனர். ஆனால், அந்தக் கூட் டம் நடைபெறவில்லை.
கண்டனம்
ஒட்டுமொத்த தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசு, பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முன்வரவில்லை. மாறாக, வேலைநிறுத்தத்தை முறியடிக்க சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த செயலுக்கு போராட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக, துறைக்கு சம்பந்தமில்லாத,அனுபவமில்லாத - பயிற்சியில்லாதவர்களை கட்டாயப்படுத்தி, பேருந்துகளை இயக்கச் சொல்வது சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளுக்கு எதிரானது, ஆபத்தானது என்றும்போராட்டக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கைது-வழக்கு
வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போடுவதையும் கைதுசெய்வதையும் அரசு கைவிட வேண்டும் என்றும், போராட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் விபரீத முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆர்ப்பாட்ட அறைகூவல்
அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை கண்டித்து ஆங்காங்கு அருகிலுள்ள பேருந்துநிலையங்களில் காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், சென்னையில் மாலை 4 மணிக்கு பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இந்த போராட்டங்களில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்குழு தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்கள்.
மத்திய சங்கங்கள்
வேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சர் தலையிட வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்களின் கூட்டம் மே 15 அன்று நடைபெற்றது. இதில், வரும்17 ஆம் தேதி அனைத்து மாவட்டத்தலைநகரங்களி லும், தொழில் மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற் சங்க ஊழியர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த கூட்டத்தில் அ.சவுந்தரராசன்(சிஐடியு), சுப்புராமன் (தொமுச), ராசு (எச்எம்எஸ்), சி.மூர்த்தி(ஏஐடியுசி), சிவக்குமார் (ஏஐயுடியுசி), எ.எஸ். குமார் (ஏஐசிசிடியு) ஆகியோர் பங்கேற்றனர்.