மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் ஆவேசம்
தொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக்கடலில் தூக்கி எறிவோம் என்று மாநிலங்களவையில் பேசிய டி.கே.ரங்கராஜன் குறிப்பிட்டார்.தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திருத்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில் கூறியதாவது:
அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளனர். நானும் அவர்களோடு இணைந்து கொள்கிறேன். இந்த மசோதா முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரானதாகும். அமைச்சர் ஓய்வு பெற்ற பிறகு இத்தகைய மசோதாவை கொண்டு வந்ததற்காக வருத்தப்படுவார். அடுத்த தலைமுறையையும் இந்த மசோதா பாதிக்கும்.இந்திய தொழிற்சங்க வரலாற்றை படித்துப் பார்க்குமாறு உறுப்பினர்களை நான் வேண்டிக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு கிடைத்த எந்தவொரு சலுகையும் அரசின் கருணையால் கிடைத்ததல்ல. மும்பை, கோவை ஆகிய மாநகரங்களின் தொழிற்சங்க வரலாறு ஆனாலும் சரி, ரயில்வே தொழிலாளர்களின் போராட்ட மானாலும் சரி தொழிலாளர்களின் தியாகத்தால்தான் உரிமைகள் கிடைத்துள்ளன. பொன்மலையில் நடந்த ரயில்வே தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். கோவையில் 4 பஞ்சாலை தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். முதல் ஊதியக் குழு வந்த பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் இவை. ஒவ்வொரு சலுகையையும் தொழிலாளர்கள் போராடித்தான் பெற்றுள்ளனர்.
19 வயது முதல் தொழிற்சங்க ஊழியராக பணியாற்றி வருகிறேன். சர்க்கரை, சிமெண்ட், ஜவுளி, பெல், ரயில்வே மற்றும் ஆயுத தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக உழைத்து வந்துள்ளேன். அவர்களது நிலை யை நான் முற்றாக அறிவேன். அவர்களுக்காக நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நான் பங்கேற்று ள்ளேன். ஒரு ரூபாய் பெறுவது கூட எளிதான காரியமல்ல. கடுமை யான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். இதற்காக பல தொழிலா ளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.தொழிலாளர்கள் போராடி ஒன்றை பெற்றால் வேறுவழியில் அதை அபகரித்துக் கொள்வார்கள். ஓவர் டைம் அதிகரிக்கிறது என்றால் என்ன பொருள்? தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது என்பதுதான். இதனால் பலனடைவது யார்? தொழிற்சங்க இயக்கம் நாளுக்கு நாள் பலவீனமடைகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
அரசை நான் எச்சரிக்க விரும்புகிறேன். இந்திய தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் எழுவார்கள். தொழிலாளர்களுக்கு விரோதமான அனைத்து சட்டங் களையும் அவர்கள் வங்கக் கடலில் தூக்கி எறிவார்கள். இத்தகைய தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங் கள் ஏற்கெனவே உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறிக்க முயல்கின்றன.ஐஎல்ஓ குறித்து அமைச்சர் பேசுகிறார். ஐஎல்ஓ அமைப்பின் அனைத்து தீர்மானங்களையும் இந்த அரசு ஏற்கிறதா? ஆனால் 125 மணிநேரம் ஓவர் டைம் என்பதை மட்டும்குறிப்பிடுகிறீர்கள். இந்திய தொழிலாளி பிரிட்டிஷ், ஜெர்மன் தொழிலாளர் களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த சட்டத் திருத்தத்தால் தொழிலாளர்களும் அனைத்து பொதுமக்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படும். எனவே இந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தின் மூலமும், அதன் பின்னரும் தொழிலாளர்களுக்கு கிடைத்த சலுகைகளை பறிக்க இந்த அரசு முயல்கிறது. இது முற்றிலும் தவறு. இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.