Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, June 14, 2015

பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்தக் கூடாது, ரயில்வே ஒட்டுமொத்தமாக தனியார்மயம் - மோடி அமைத்த நிபுணர் குழு பரிந்துரை - 30.06.2015 - கருப்பு தினம் - ரயில்வே தொழிற் சங்கங்கள் முடிவு



ரயில்வே துறையில் தனியார் துறை மற்றும் தன்னிச்சையான ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட- ரயில்வே துறையை சீரழிக்கும் வகையிலான பல்வேறு பரிந்துரைகளை மோடி அமைத்தநிபுணர் குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத் துள்ளது.

ரயில்வேயை சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்தார். ‘நிதி ஆயோக்’உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமை யில் அமைக்கப்பட்ட இக்குழு, தற்போது தமது 300 பக்க பரிந்துரை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் அளித்துள்ளது.

அதில், சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற பெயரில், ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கச் சொல்லி பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. இதை ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து விட்டு, பின்னர்பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளது.

அந்த பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாவது:சாலை, சிவில் விமான போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. ரயில்கள் இயக்கத்தில் தனியாரையும் அனுமதிக்க வேண்டும். இதற்காக, இந்திய ரயில்வே ஒழுங்குமுறை ஆணையம் என்ற சட்டப்பூர்வ, சுயேச்சையான அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குதனி பட்ஜெட் போட வேண்டும்.

சரக்கு கட்டணங்களை நிர்ணயித்தல், சர்ச்சை களுக்கு தீர்வு காணுதல், தொழில்நுட்பத் தரத்தை நிர்ணயித்தல் போன்ற பணிகளை அந்த அமைப்பு செய்ய வேண்டும். ரயில்களை இயக்குவது மட்டுமே இந்திய ரயில்வேயின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். 

ரயில்வே சார்பில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நடத்துவதை கைவிட வேண்டும். மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே காவல்துறையினரின் ஒட்டுமொத்த செலவையும் அந்தந்த மாநில அரசுகளே ஏற்குமாறு கூற வேண்டும்.

இப்படி பல்வேறு சீர்குலைவு ஆலோசனைகள் அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.இந்த பரிந்துரைகளை அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தினால், ரயில்வேக்கு என தனி பட்ஜெட்டே தேவைப்படாது என்றும் விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு கூறியுள்ளது

இதை கண்டித்து அணைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும், 30.06.2015 அன்று கருப்பு தினம் அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளனர். 

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்