தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 2 அன்று நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி மாநில, மாவட்ட மாநாடுகள், பிரச்சார இயக்கம் நடத்த மாநில தொழிற்சங்க அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. எச்.எம்.எஸ். அகில இந்தியத் தலைவர் க.அ.ராஜா ஸ்ரீதர் தலைமை ஏற்றார். மு.சண்முகம் (எல்பிஎப்) தில்லியில் நடந்த அகில இந்திய அனைத்து தொழிற்சங்க மாநாட்டு நிகழ்வுகளை விளக்கினார்.கூட்டத்தில், ஜி.பி.சரவணபவன் (பி.எம்.எஸ்.) ஆதிகேசவன், எம்.பன்னீர்செல்வம் (ஐஎன்டியுசி) டி.எம்.மூர்த்தி, எஸ்.குப்பன் (ஏஐடியுசி), மு.சுப்பிரமணியன், மா.சுப்பிமணியபிள்ளை (எச்எம்எஸ்), ஆர்.சிங்காரவேலு, வி.குமார் (சிஐடியு), ஆ.நடராசன், மா.பேச்சிமுத்து, கி.நடராஜன் (எல்பிஎப்) ஏ.எஸ்.குமார், எஸ்.ஜவஹர் (ஏஐசிசிடியு), வி.சிவகுமார் (ஏஐயுடியுசி), டி.ஆனந்தமுருகன் (டியுசிசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்தும், இந்தியத் தொழிலாளர்களின் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும், செப்டம்பர் 2 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யுமாறு தில்லியில் நடந்த தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. அதை ஏற்று தமிழ்நாட்டில் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் நடத்தவும், அதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடவும் இக்கூட்டம் ஏகமனதாக முடிவு செய்தது.
ஜூலை 7 மாவட்டத் தலைவர்கள் மாநாடு
திருச்சியில் ஜூலை 7ம் தேதியன்று மாவட்டத் தலைவர்கள் மாநாடு நடைபெறும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்பார்கள். திருச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு தொழிற்சங்க அரங்கத்தில் இம்மாநாடு நடைபெறும்.
வேலை நிறுத்த ஆயத்த மாநில மாநாடு
வேலை நிறுத்த நோக்கங்களை விளக்கி ஜூலை 3வது வாரத்தில் சென்னையில் மாநில மாநாடு நடைபெறும். இதில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள்.
மாவட்ட மாநாடுகள்
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மாவட்ட வாரியாக வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகள் கூடி தேதி, இடம் நிச்சயிப்பார்கள். இவற்றில் மாநிலத் தலைவர்கள் பங்கேற்பர்.
அரங்க வாரியாக மாநாடுகள்
ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட மத்திய பொதுத் துறை அமைப்புகள், மின்சாரம் உள்ளிட்ட மாநில பொதுத்துறை அமைப்புகள் தனித்தனியாக மாநில அளவிலான மாநாடுகளை நடத்த வேண்டும்.
வேலை நிறுத்த நோட்டீஸ்
வேலை நிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் ஆகஸ்ட் 14ம் தேதியன்று நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிரச்சார இயக்கம்
ஆகஸ்ட் 17 முதல் 23 வரை தமிழ்நாடு முழுவதும், வேலை நிறுத்தக் கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல விரிவான பிரச்சார இயக்கம் நடத்தப்படும். இவற்றை மாவட்டக் குழுக்கள் ஒருங்கிணைத்து நடத்தும்.
வாயிற் கூட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்
ஆகஸ்ட் 24 முதல் 30 வரையில் அனைத்து ஆலை வாயில்களிலும், வாயிற் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும்.வேலை நிறுத்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழகத்திலுள்ள மாநில, மாவட்ட, வட்டார, ஆலை அளவிலான தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பங்கேற்க அழைப்பதென தீர்மானிக்கப் பட்டது.மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் மாவட்டக் கிளைகள் மேற்கண்ட முடிவுகளை சிறப்பாக அமலாக்குவதற்கும், திட்டமிட்டு செயல்படுமாறும்,
தொழிற்சங்க, தொழிலாளர் ஒற்றுமையை வலிமைப்படுத்தி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துமாறும் தமிழகத்தின் அனைத்துத் தொழிலாளர்களும் ஒத்துழைக்குமாறும் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்