Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, April 25, 2015

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி! பி.எப். நிதியை சூறையாடுகிறது மோடி அரசு!!

Image result for epfo logo

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.பி.எப். நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என்று சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 

எனினும்,

மோடி அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியுள்ளது.2014-15ம் ஆண்டு கணக்கின்படி பி.எப். நிதியத்தில் மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தொழிலாளர்களின் சேமிப்பு பணம் குவிந்திருக்கிறது. இந்த பெரும் தொகை, பெரு முதலாளிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும், ஊழியர்களும் வியர்வை சிந்தி சேமித்த இந்தப் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடி பெருமுதலாளிகளின் கைகளில் சேர்ப்பதற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, 15 சதவீத நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாக அரசு முதலில் அறிவித்தது. ஆனால் எந்தவிதத்திலும் பங்குச் சந்தையில் பி.எப். நிதியை முதலீடு செய்யக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில், 5 சதவீத நிதியை முதற்கட்டமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

தற்போது ரூ.80 ஆயிரம் கோடியாக உள்ள ஒட்டுமொத்த பி.எப். நிதியானது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் பங்குச் சந்தையின் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும்.முதலீடு செய்யத்தக்க நிதியின் அளவே ஒரு லட்சம் கோடியாகும். ஒட்டுமொத்தத்தில் பி.எப். வாரியத்தின் கையில் உள்ள நிதியின் மதிப்பு ரூ.6.5 லட்சம் கோடி ஆகும்.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சொத்தினை கபளீகரம் செய்வதற்கு, தனது முதல்படியை துவக்கியிருக்கிறது மோடி அரசு. இதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கண்டனக் குரல் வலுத்துள்ளது.