Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 3, 2014

இன்சூரன்ஸ்: அந்நியருக்கு திறந்துவிடுவதா?


அறிஞர்கள்-கலைஞர்கள்-கல்வியாளர்கள் எதிர்ப்பு!!இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துகிற மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள் அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்றப் போவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மக்கள் கருத்தை திரட்டுகிற இயக்கங்கள் நடந்தேறி வருகின்றன.இந்தியா முழுமையும் 5000 க்கும் மேற்பட்ட பொருளாதார அறிஞர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் பல்கலை துணைவேந்தர்கள்,பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், முன்னணி வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் நிதியமைச்சருக்கு அந்நிய முதலீட்டு உயர்வைக் கைவிடுமாறு வலியுறுத்தி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
மக்கள் நலனுக்கு எதிரானது
உலக நிதி நெருக்கடி பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நம்பகமற்ற தன்மையையும், தோல்வியையும் வெளிப்படுத்தியுள்ள நிலைமையில், இந்திய இன்சூரன்ஸ் துறையை அந்நிய முதலீட்டிற்கு கூடுதலாக திறந்து விடுவது தேச நலனுக்கு உகந்ததல்ல என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்திய நாட்டில் தேசியமயத்திற்குப் பின்னர் இன்சூரன்ஸ் பரவலாக்கல் கிராமங்களுக்கும், அடித்தள மக்களுக்கும் விரிவடைந்திருப்பதை எடுத்துக் காட்டியுள்ள அவர்கள், அந்நிய முதலீட்டிற்கு லாபமே நோக்கமாக இருக்குமேஅன்றி சமூகப் பொறுப்பு இருக்குமா என்ற வினாவை அவர்கள் எழுப்பியுள்ளனர். உள்நாட்டு சேமிப்புகளே பொருளாதார வளர்ச்சிக்கான ஜீவ ஊற்றாக விளங்க முடியுமே தவிர அந்நிய முதலீட்டை சார்ந்த வளர்ச்சி நீடித்து நிலைப்பதாக இருக்காது என்பதையும் அவர்கள்வலியுறுத்தியுள்ளனர். தேசத்திற்கோ, இன்சூரன்ஸ் துறையின் நோக்கங்களுக்கோ, பாலிசிதாரர்கள் நலனுக்கோ உதவாத இம்முடிவை அரசு கைவிடவேண்டுமென கேட்டுக் கொண்டுள் ளனர்.
பல்துறை வல்லுநர்கள் கடிதம்
ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி. சாவந்த் (உச்ச நீதிமன்றம்), கே.சந்துரு (சென்னை உயர்நீதிமன்றம்), ஜனார்த்தன் சஹாய் ( அலகாபாத் உயர்நீதிமன்றம்)டாக்டர் ரோகித் சுக்லா ( திட்டக் கமிசன் முன்னாள் உறுப்பினர்), வரலாற்று அறிஞர்கள் டாக்டர் கே.என்.பணிக்கர், பாபுராவ் கௌரவ் , பொருளாதார அறிஞர்கள் அமியகுமார் பக்சி, டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா, டாக்டர் தன்கேஷ் ஓழா (முன்னாள் அரசு இணைச் செயலாளர், குஜராத்) முன்னாள் மத்திய அரசு எரிசக்தி துறை செயலாளர் இ .ஏ.எஸ்.சர்மா, பேரா ஆர்.சி. திரிபாதி ( இணை துணை வேந்தர், அலகாபாத் பல்கலை.) டாக்டர் ராஜசேகரன் (இணை துணை வேந்தர், காலடி சம்ஸ்கிருத பல்கலை.) முன்னாள் துணை வேந்தர்கள் பேரா. கே.வி.ரமணா (விசாகபட்டினம் பல்கலை.) டாக்டர் பிரசாத் ( காலடி சமஸ்கிருத பல்கலை) பல்கலை. டீன்கள் என்.ஒய். சுதாகர் (பொட்டி ஸ்ரீராமுலு பல்கலை) எஸ்.வி.சத்ய நாராயணா (உஸ்மானியா பல்கலை) டாக்டர் என்.கே. சவுதுரி (பாட்னா பல்கலை)
கலைஞர்கள்-எழுத்தாளர்கள்
பிரபல கவிஞர் வைரமுத்து, “பத்மஸ்ரீ” டாக்டர் மகாதேவ் பிரசாத் பண்டே (விடுதலை போராட்ட வீரர்) ஞான பீட விருது எழுத்தாளர்கள் பகவதி சர்மா, சந்திரசேகர் கம்பர், பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட், கவிஞர் ஒ.என்.வி.குரூப், சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்கள் பொன்னீலன், டி0ள.செல்வராஜ், சு.வெங்கடேசன், மலர்வதி, உயிரியல் விஞ்ஞானி மனோஜ் தியாகி (அலகாபாத் பல்கலை.), பேரா. ஹர கோபால் ( மனித உரிமை போராளி, ஹைதராபாத்)
வழக்கறிஞர்கள்
பிரபல வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர்.வைகை,மனோதத்துவ நிபுணர் கிரீஷ், பிரபல திரைப்பட இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், ஷாஜி என்.கருண், கவிஞர் ரோஸ் மேரி (கேரளா), சர்வதேச மாஜிக் நிபுணர் கோபிநாத் முத்துக்காடு,சர்வதேச செஸ் வீரர் பிரதியுசா (ஆசிய தங்க பதக்கம்-இளைஞர் பிரிவு) உள்ளிட்ட பலர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 900 க்கும் மேற்பட்ட கடிதங்கள் பல்வேறுதுறை சார்ந்தவர்களால் அனுப்பப்பட் டுள்ளன.
சோனியாவுக்கு கடிதம்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லாகான், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்சூரன்ஸ் மசோதாவை எதிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் மசோதாவை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பரிசீலனைக்கு விடவேண்டும் என்று கூறியுள்ளது.மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால் மறுநாளே இந்தியா முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் கண்டன வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.