Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 22, 2014

பதற வைக்கும் பாலியல் கொடுமைகள்


தேசிய குற்றப் பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நாடு முழுவதும் 2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்கு கள் பதியப்பட்டன, ஆனால் 2013ல் அது 33707 ஆக உயர்ந்திருக்கிறது. மாநகரம் என்று எடுத்துக் கொண்டால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள். அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப் பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர். மொத்தத்தில் 2854 வழக்குகளில் குற்றவாளிகள் பெற்றவரும், உற்றவரும் தான். முன்னேயும், பின்னேயும் தெரிந்தவர்களே இந்தக் கொடுமையில் ஈடுபடும் போது, முன்ன பின்ன தெரியாதவர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? தஞ்சையில் மாதர் சங்கம் நடத்திய பொதுவிசாரணையில் மேடைக்கு வந்த இளம் பெண் சொன்ன விவரங்கள் நம் ரத்தத்தை உறைய வைத்தன. பெற்றெடுத்த தந்தையே, 3 ஆண்டுகளாக இப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி, 3 குழந்தைகள் பெற வேண்டிய அவலம்; கடைசி குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று சந்தேகம் வேறு, அதனால் அந்தக் குழந்தைக்குத் தாய் பால் கிடைக்கக் கூடாது என்று பால் கொடுக்கும் இடத்தையே பிளேடால் அறுத்த கொடுமைகளை அந்தப் பெண் விவரிக்கும் போது அரங்கமே அதிர்ச்சியில் விழுந்தது.
போபாலில் 65 வயதானவர், தன் பேத்தியை 5 மாதங்களுக்கும் மேலாகப் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தி, கர்ப்பமான போது கர்ப்பத்தையும் கலைத்திருக்கிறார். உடுமலையில் தந்தையின் பாலியல் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று 2 மகள்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.பெண்ணை ரசிக்கிற, ருசிக்கிற, அனுபவிக்கிற போகப் பொருளாகப் பார்க்கும் பார்வை வலுப்பட்டுள்ளது. மனித உறவுகள், மாண்புகள் சீரழிந்துள்ளன. கலாச்சாரம் காணாமல் போய்விட்டது. கலாச்சார காவலர்கள் இவை குறித்தெல்லாம் வாயை இறுக மூடிக் கொள்வது ஏன்? நம்ம சாதி பொண்ணு மேல கை வச்சா, கைய வெட்டு என்றுமுழங்கும் காடுவெட்டிகள் என்ன செய்கிறார்கள்? கலாச்சாரம் கெட்டு விட்டது என்று குஷ்புவை விரட்டியவர்கள் இன்று எங்கே? நீ சுகப்பட்டால் போதும், மற்றதைப்பற்றிக் கவலைப்படாதே என்று கலாச்சார மதிப்பீடுகளைத் திருத்திஎழுதிய உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு இதில் பங்கில்லையா?
கும்பல் பலாத்காரம்
தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான வல்லுறவு என்று பார்த்தால் 48 வழக்குகள் 2013ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்திரிகை செய்தி களைப் பார்க்கும் போது, இந்த விவரம் முழு உண்மையல்ல என்று தோன்றுகிறது. இருப்பினும் இந்த விவரமே சொல்லுவது என்னவென்றால், தினசரி சராசரியாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.கும்பல் பலாத்காரம் குறித்த தனி யான பதிவுகள் கிடைக்கவில்லை.
ஆனால் பெரும்பாலும் நாம் பார்க்கும் செய்திகள், இந்தியா முழுதும் இது அதிகரிப்பதாகத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் ஒரு கல்லூரி மாணவிக்கு நடந்தது, முன்னதாக காரைக்காலில் புத்தாண்டு தினத்தன்று நடந்தது, ஹரியானா, உத்தர பிரதேச நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாருக்கும் தெரியாமல் குற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட அற்றுப் போய்விட்டது. ஏனெனில் இது குற்றம் என்பது போய் ஒரு பொழுதுபோக்காக ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து செய்வதில் ஒரு ஜாலி, அந்தப் பெண் தவிப்பது, அலறுவது, துன்புறுவதைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம். இந்த உலகம் தனக்கு இழைக்கும் துரோகத்துக்கு, தான் முன்னேறாததற்கு, நினைத்தது கிடைக்காததற்கு என்று எல்லாவற்றுக்குமான பதிலும், நிறை வும் இதில் கிடைத்து விடுகிறது. ஆண்மையின் ஆளுமை வெற்றி பெறுவதான நினைப்பு! வன்முறையைப் பொழுதுபோக்காக்கியதில் சினிமாவுக்கு முக்கிய பங்குண்டு.
காரணங்களைத் தேடு
குடி போதை, வன்முறைக்கு ஒரு பிரதான காரணமாக முன்னுக்கு வரு கிறது. குடிக்காதவர்கள் அப்பாவிகள், குடிப்பவர்கள் குற்றவாளிகள் என்று ஒரு சூத்திரத்தை எழுத முடியாது. ஆனால் வன்முறை செய்வதற்கான துணிச்சலை, போதை உற்பத்தி செய்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் குடித்திருந்தார்கள் என்னும் செய்தி, இதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் மதுபானக் கொள்கைக்கு இதில் பங்குண்டு. ஊக்கப்படுத்தி ஊற்றிக் கொடுக்கும் வேலையை அரசு செய்ய வேண்டுமா? லாபம் பார்க்கும் பிசினசாக இதைப் பார்த்து, குடி குடியைக் கெடுக்கும் என்று சட்ட ரீதியான எச்சரிக்கையை சிறு எழுத்தில் போட்டு விட்டால் போதுமா? போதை பழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சியோ, பிரச்சாரமோ அறவே இல்லையே?அடுத்து, மொபைல் இருந்தாலே போதும், சுலபமாக இணைய தளத்தில், யூடியூபில் ஆபாசத்தைப் பார்த்துவிட முடிகிறது.
பிறகு, பார்ப்பதை எல்லாம் பரீட்சித்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு ஒரு பெண் வேண்டும், ஒரு வயதாக இருந்தால் என்ன, 80 வயதாக இருந்தாலென்ன என்கிற மனநிலை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். அத்துடன், காவல்துறை விசாரணை, நீதிமன்ற நிகழ்வுகள் போன்றவை எல்லாம், பாதிக்கப்பட்டவர்களை நோகடிப்பதாகவே இருக்கின்றன. காலம் கடந்த நீதி அர்த்தமிழக்கிறது. 25 சதவிகிதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும் யதார்த்தம் தவறு செய்பவர்களுக்கே அனுகூலமாகி விடுகிறது. நிர்பயா வழக்குக்குப் பிறகு புதிதாக வந்த சட்டத் திருத்தத்தில், அரசு அதிகாரி அல்லது காவல் அதிகாரி சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று உள்ளது.
இந்த இபிகோ பிரிவு 166 ஏ என்பதை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல் பொள்ளாச்சி சம்பவத்தில் தமிழக முதல்வர் வேகம் காட்டியவுடன் செயல்பட்ட அதிகாரிகள், மற்றவற்றில் மெத்தனமாக இருந்து விடும் ஏற்பாடு உள்ளது. எல்லாவற்றிலும் முதல்வர் வேகம் காட்ட வேண்டும் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. இந்த 166ஏ என்ற பிரிவு வரக் காரணமாக இருந்தது ஜனநாயக மாதர் சங்கம்; இதை வடிவமைத்தது மாதர் சங்கத்தின் அகில இந்திய சட்டப்பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பு செய்யாத, திருடாத, பொய் சொல்லாத மனிதன்தான் கதாநாயகன் என்பது மாறி, குடிப்பவர்கள், சமூக விரோத செயல்களை செய்பவர்கள், பெண்களைப் பாலியல் சீண்டல் செய்பவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை நியாயப்படுத்தி, கதாநாயகன் பாத்திரமாக உலா வருகிற படங்கள் கணிசமாக வருகின்றன. இவர்கள் இன்றைய சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாக மாறுகிறார்கள்.
திசை திருப்பக் கூடாது
காரணங்கள் இப்படியாக இருக்கும் போது, பெண்ணின் உடை காரணம், ஆண் நண்பருடன் போனது காரணம், இந்த நேரத்தில் தெருவில் நின்றது காரணம் என்ற அபத்தங்களை ஏன் பேச வேண்டும்? எந்த உடை அணிந்தால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் இருந்தால் பிரச்சனை வரவே வராது என்று சொல்வார்களா? இப்படிப் பேசுவது திசை திருப்பும் போக்காகும். குற்றத்தை நியாயப்படுத்துவதாகும். மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுத மாகவே பயன்படுத்தப்படுகிறது. தபஸ் பால் இதற்கு ஓர் உதாரணம். ஹரியானா உள்துறை அமைச்சர், பாலியல் வல் லுறவு சில சமயம் சரி, சில சமயம் தவறு என்றார்.
முலாயம் சிங் யாதவ், பசங்க பசங்க தான் என்கிறார். கோவா முதல்வர், ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் ஒரு இன்ஸ்பெக்டரைத் தான் சமாளிக்க வேண்டும், ஆனால் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் 26 இன்ஸ்பெக்டர்களை சமாளிக்க வேண்டும் என்று பேசி யிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் (Code of Conduct) இப்படிப் பேசுவதையும் தகுதி இழப்புக் கான காரணமாக இணைக்க வேண்டும். மேலும் சாதியும், வர்க்கமும் முக் கிய காரணிகளாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் கூடுதலாக வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். மேற்கு வங்கத்திலும், ஜார்க்கண்டிலும் பழி வாங்கும் நடவடிக்கையாக சாதி பஞ் சாயத்தின் தண்டனையாக பாலியல் வன்முறை பயன்பட்டிருக்கிறது.
பொது வெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும், பொது வெளியில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி வர்மா குழு சொன்னது மிகப் பொருத்தமானது. பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் போது, நிச்சயம் குற் றங்கள் குறையும்.இதற்கு அரசு, நிர்வாகம், காவல் துறை, நீதித்துறை, ஊடகங்களின் நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட வேண்டும். பாடத்திட்டங்கள் பயன்பட வேண்டும். கல்வி, பொறுப்புள்ள குடி மக்களை உருவாக்க வேண்டும். கல்வி வணிகமயமாகும் போது, சமூக நீதிக்கும், சம நீதிக்கும் மதிப்பில்லாமல் போய் விடுகிறது. இதற்கு மத்தியில் நமக்கும் வன்முறை தடுப்பில் முக்கிய பங்குண்டு. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மக்களை சந்தித்து, ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விவாதிக்க திட்டமிட்டிருக்கிறது.
பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறையைத் தடுக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, தமிழகத்தில் ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து நடத்தப்படும். ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கி சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி நிறைவு செய்யப்படும். சாதி மதம் பார்க்காமல், உள்ளூர் வெளியூர் நியாயம் பேசாமல், எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் கண்ணியமாக வாழும் உரிமையைப் பாதுகாக்க உறுதி ஏற்க மக்கள் முன் வர வேண்டும்.