Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 6, 2014

ரூ.1 லட்சம் கோடி தனியாருக்கு போகிறது பொதுச்சொத்து!



மோடி அரசின் முதல் பட்ஜெட்டிற்கு தயாராகிறார் அருண் ஜெட்லி



-நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, தனது முதல் மத்திய பட்ஜெட்டை இன்னும் சில வாரங்களில் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகளில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தீவிரமாக ஈடு பட்டுள்ளார். இந்நிலையில், முதல் பட்ஜெட்டி லேயே பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக பெரும் நிறுவனங்களது லாபங்களை அதிகப்படுத்தவும், அதி முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்குத் தாரைவார்க்கவும் அறிவிப்புகளை வெளியிட அருண் ஜெட்லி தயாராகி வருகிறார் என தில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மிகவும் மகிழ்ச்சியோடு “ஃபர்ஸ்ட் பிஸ்” எனும் வர்த்தக ஏடும், “பிசினஸ் ஸ்டாண்டர்டு” ஏடும் விரிவான பல செய்திகளை வெளியிட்டுள்ளன. இதில் “ஃபர்ஸ்ட் பிஸ்” ஏடு, சமீபத்தில் முகேஷ் அம்பானியால் விலைபேசி வாங்கப்பட்ட நெட்வொர்க் 18 ஊடகக்குழுமத்தின் ஒரு ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்லியின் திட்டங்கள்
பட்ஜெட்டில் தனது முதல் நட வடிக்கையாக நடப்பு நிதியாண் டில் ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சொத்துக்களை கைமாற்றிவிடுவதன் மூலம் மட்டுமே ஈட்டுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என பெரும் முதலாளி களின் வட்டாரத்தில் பலத்த எதிர் பார்ப்பு நிலவுகிறது. நரேந்திர மோடி ஆட்சி அமைந்துள்ள நிலையில், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற ஊகத்தின் அடிப்படையில் பங்குச்சந்தை வர்த்தகம் “முன்னேற்றத்தை” எட்டியுள்ளது.
பங்குச்சந்தையில் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் ஊடாடி வருகின்றன. இவற்றின் மதிப்பும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலைமையை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக பணம் ஈட்ட முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கணக்குப்போட்டுள்ளதாக மேற்கண்ட செய்திகள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, பொதுத்துறையின் வசமுள்ள யுடிஐ நிறுவனம் (யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா) அதிக மதிப்புள்ள தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, லார்சன் அண்டு டர்போ (எல் அண்டு டி) மற்றும் ஐடிசி மற்றும் அதிகம் அறியப்படாத ஆனால் மதிப்பு வாய்ந்த பல கம்பெனிகளின் பங்குகளை சிறப்பு ஏற்பு என்ற திட்டத்தின் கீழ் தன்வசம் வைத்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி ஆகும்.
முந்தைய ஆட்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த பங்குகளில் ஆக்ஸிஸ் வங்கியின் 9 சதவீத பங்குகளை மட்டும் கைமாற்றிவிட்டு சுமார் ரூ.5 ஆயிரம்கோடியை ஈட்டலாம் என கருதி யிருந்தார். ஆனால் தற்போது பங்குச்சந்தையின் மதிப்பு அதிகரித்திருப்பதால், அருண்ஜெட்லி யுடிஐ வசமுள்ள பங்குகளை விற்று ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு பணத்தை ஈட்டலாம் என முடிவு செய்திருப்பதாக மேற்படித் தகவல்கள் கூறுகின்றன. இதை விற்பதன் மூலம் யுடிஐ நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடன்பட்ட நிறுவனமாக மாறும் அபாயம் உள்ளது. பிற்காலத்தில் ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே யுடிஐ நிறுவனத்தை விழுங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
அதேபோல ஏற்கெனவே தனியாரிடம் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட இந்திய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம் ஆகியவற்றின் இதர பங்குகளையும், ஏற்கெனவே அவற்றை வாங்கியுள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு விற்றுவிடலாம் என்றும் அருண்ஜெட்லி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.மற்றுமொரு ஆபத்தான திட்டம் என்னவென்றால், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க்ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் 56 முதல் 70 சதவீத பங்குகள் அரசின் வசம் உள்ளன; சென்ட்ரல் வங்கி, ஐடிபிஐ, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்ட்ரா போன்ற பல வங்கிகளில் 60 முதல் 80 சதவீத பங்குகள் அரசின் வசம் உள்ளன. இவை உள்ளிட்ட 24 பெரிய பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய பங்குச்சந்தை மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
இந்நிலையில், இந்த வங்கிகளின் பங்குகளில் 51 சதவீதத்தை மட்டும் அரசின் வசம் வைத்துக்கொண்டு, எஞ்சியுள்ள பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் மிகப்பெருமளவில் பணத்தை ஈட்டலாம் என்றும் அருண்ஜெட்லி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த வங்கிகளின் மொத்த பங்கு மதிப்பில் 10 சதவீதத்தை விற்றால் மட்டும் உடனடியாக ரூ. 45 ஆயிரம் கோடியை ஈட்டமுடியும் என்றும் மத்திய நிதியமைச்சகம் கணக்குப்போட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, இந்திய நிலக்கரிக்கழகம் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை ஈட்ட முடியும் என்றும் கணக்குப்போட்டுள்ளது.இது தவிர, நாடு முழுவதும் அரசாங்கத்திற்குச் சொந்தமான துறைமுகப் பொறுப்புக்கழகங்கள், ரயில்வே, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், அஞ்சல்துறை உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு சொந்தமான - ஆனால் தற்போது அன்றாடப் பயன்பாட்டில் இல்லாத பெருமளவு நிலங்களை தனியாருக்கு விற்றுவிடுவது எனவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ரயில்வேத்துறையில் மட்டும் அதன் நகர்ப்புற ரயில் நிலையங்களுக்குச் சொந்தமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலம் விற்பதற்கு தகுதியாக இருக்கிறது என்றும், இதன் மூலம் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியை ஈட்ட முடியும் என்றும் அரசு கருதுவதாக சமீபத்தில் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஏடு ஒரு விபரத்தை வெளியிட்டிருந்தது. இதேபோல துறைமுக பொறுப்புக்கழகங்களிடம் உள்ள நிலங்களில் 5ல் ஒரு பகுதியை விற்றால் பல லட்சம் கோடி ரூபாய் நிதியை ஈட்ட முடியும் என்றும் அருண் ஜெட்லியிடம் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பெரும் முதலாளிகளிடம் தாரை வார்ப்பதன் மூலமாக இந்த நிதியாண்டில்மட்டும் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் கோடி நிதியைத் திரட்டுவதற்கு மோடி அரசு திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.இதை விரிவாக வெளியிட்டுள்ள முகேஷ் அம்பானி யின் “ஃபர்ஸ்ட் பிஸ்” வர்த்தக ஏடு, “கைக்கெட்டும் தூரத்தில் உள்ள அற்புதமான பழங்களை உடனடியாக பறிப்பீர்” என்று தலைப்பிட்டு, அருண்ஜெட்லிக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.