Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, March 7, 2021

மார்ச் 8 - உலக மகளிர் தினம்


மார்ச் 8ம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பர்யமும் உண்டு.  இந்தப் பெருமிதத்தோடு உலகெங்கிலும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்து போராடும் அத்தனை போராளிகளுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். 

உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்தும்  மகத்தான போராட்டங்கள் முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன.  இந்தியாவிலும் பொது வேலை நிறுத்தங்கள், 100 நாளை கடந்து நிற்கும் விவசாய / விவசாய தொழிலாளர் போராட்டங்கள், LIC.,BSNL.,  மற்றும் பொதுத்துறை நிறுவனஙகளில் நடக்கும் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்கள், அரசு ஊழியர் - ஆசிரியர், சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்கள் பேராட்டம், பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாகவும், கொரோனா பெருந்தொற்று, திட்டமிடப்படாத பொது முடக்கம் காரணமாகவும் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, கடுமையான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார் மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒரு புறம் தாக்குகின்றன. மறு புறம் இணைய தளக்குற்றங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சுயமாகக் கருத்து கூறும் பெண்கள் வலைத்தளத்தில் படுமோசமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக சாதி, மத வெறியர்கள் இக்குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அறிவியல்  விரோத பிற்போக்குக் கருத்துக்கள், பெண்ணடிமைத்தனத்தை கெட்டிப்படுத்துகின்றன. சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையைப் பற்றி நிற்கும் அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதற்கான முயற்சிகள், குறிப்பாகப் பெண்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.  குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான  முயற்சிகளை, போராட்டங்களை முன்னெடுக்கும். பெண்கள் அமைப்புகளுக்கும், இதற்காக நடத்தும் இயக்கங்களுக்கும் முழு ஆதரவு அளிப்போம். சாதி, மதம் கடந்து நின்று, நீதிக்கான போராட்டங்களில் வலுவான பங்காற்ற சபதமேற்போம் 

மகளிர் தின வாழ்த்துக்களுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

குறிப்பு: கிளைகளில் வழக்கம் போல் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்