Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 4, 2018

10 ஆண்டு பணியாற்றியோரை நிரந்தரம் செய்ய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் மாநாடு வலியுறுத்தல்



தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறையில் 10 ஆண்டுகள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்தோரை நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக்க வேண்டும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்சங்க 6ஆவது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.திங்களன்று திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு தொடங்கியது. இருநாட்கள் நடைபெற்ற இம்மாநாடு செவ்வாயன்று பேரணி, பொது மாநாட்டுடன் நிறைவடைந்தது.

மாபெரும் பேரணி

செவ்வாயன்று பிற்பகல் திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பிருந்து மாநாட்டுப் பேரணி தொடங்கியது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா கொடி அசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள் உள்ளிட்டதொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் அணிவகுத்து வந்தனர். இந்த பேரணி ரயில்நிலையம், ஊத்துக்குளி சாலை வழியாக பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தைச் சென்றடைந்தது.அங்கு பொது மாநாடு நடைபெற்றது. இதில்எஸ்.செல்லப்பா, சிஐடியு மாநில உதவித் தலைவர் கே.விஜயன் உள்பட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தொலைத் தொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் உரையாற்றினர். முன்னதாக கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி நடைபெற்றது.

தீர்மானங்கள்

இரு நாட்கள் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 10 ஆண்டு பணியாற்றியஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும், மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணித்தன்மைக்கு ஏற்ற ஊதியத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்கும் நிர்வாகத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும்மத்திய அரசையும் கண்டித்தும், முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள சங்கத்துடன் ஊழியர்பிரச்சனைகளை பற்றி நிர்வாகம் விவாதிக்க முன்வர வேண்டும், கேரளத்தைப் போல் சம்பளத்துடன் பண்டிகை விடுமுறை ஊதியம் வழங்க வேண்டும், அதற்கான போராட்டத்தை வலுப்படுத்துவது, குறைந்தபட்ச போனஸ் சட்டத்தை நாடு முழுவதும் கறாராக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜனவரி 8, 9 தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்தியதொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள இரு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்யவும் இம்மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக எம்.முருகையா, துணைத் தலைவர்களாக எஸ்.செல்லப்பா, ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, மாநிலச் செயலாளராக சி.வினோத்குமார், உதவிச் செயலாளர்களாக முத்துக்குமார், பாஸ்கர், முனியராஜ்,மாநிலப் பொருளாளராக பிரதிபா உள்படமாநில சங்க நிர்வாகக்குழுவில் 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Image result for theekkathir