Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 13, 2018

தோழர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Related image

முன்னாள் மக்களவை தலைவர் தோழர் சோம்நாத் சாட்டர்ஜி 13.08.2018 அன்று காலையில் கொல்கொத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 1929ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்த தோழர் சோம்நாத் சாட்டர்ஜி கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று மேற்கு வங்க மாநிலத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1968ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த அவர், 1971ஆம் ஆண்டு முதல் பத்துமுறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1989 முதல் 2004ஆம் ஆண்டு வரை CPI(M) கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டதை எதிர்த்து UPA அரசாங்கத்திற்கு CPI(M) கட்சி கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அவரையும் சபாநாயகர் பதவியிலிருந்து விலக கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்த காரணத்தால் CPI(M) கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது. 

நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்த காலம் முழுவதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் தோழர் சோமநாத் சாட்டர்ஜி. அவரது வயது மூப்பு காரணமாக சிறுநீரக பிரச்சனையில் சிலகாலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையில் 12.08.2018 அன்று மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 13.08.2018 காலையில் காலமானார். 

தோழர் சோமநாத் சாட்டர்ஜியின் மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

வருத்தங்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்