Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 11, 2016

“கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு”

Theekkathir
இன்று பிப்ரவரி 11 சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத மறைவு அஜண்டாவை நிறைவேற்றிக் கொள்வதற்கு வெளிப்படையாகவும் அனைத்து காரியங்களையும் கச்சிதமாக ஆற்றி வருகிறது பிஜேபி அரசு! அதன் உச்சம்தான் மோடி அரசு பதவி ஏற்ற முதல் குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட “மதச்சார்பின்மை; சமத்துவ சோசலிச குடியரசு” என்கிற வார்த்தைகள் காணாமல் போக செய்துவிட்டது. கேட்டால் தவறு நேர்ந்துவிட்டது என்று ஒரு குரலும், ஏன்? எதற்கு? இனி அந்த வார்த்தைகள்? என்று இன்னொரு குரலும், அது வேண்டுமா என்று விவாதிக்கலாமே? என்று மற்றொரு குரலும், சோசலிசம்தான் இல்லாமல் போய்விட்டதே இனி நாம் ஏன் அதை தூக்கிப்பிடிக்க வேண்டும்? என்று கட்டக்குரலும் என பிஜேபி “பலகுரலில்” பேசியதை நாடு கண்டது!இந்திய சுதந்திரப் போராட்டத்தில் “இந்திய நாடு குடியரசு நாடாக வேண்டும்; அதில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்; மக்கள் ஜனநாயகம் மலர வேண்டும்; அதன் ஊடே மதச்சார்பற்ற சமத்துவ குடியரசு நாடாக... இந்திய திருநாடு மாற்றப்பட வேண்டும்” என்று தன் இன்னுயிரை ஈய்ந்தவர்கள் எண்ணிலடங்கா! இதன் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள்! அவர்கள் வாய்ச்சொல் வீரர்களல்ல; அன்றும் இன்றும் களப்பணி ஆற்றியவர்கள்; ஆற்றிவருபவர்கள்! அதற்கு இதோ ஒரு தமிழகத்தில் நடந்த “ரத்த சா(கா)ட்சி!”1950 பிப்ரவரி 11.

இந்திய துணைக்கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகடனப்படுத்திய 16வது தினம்; முதல் குடியரசு தினம் கொண்டாடிய ஆண்டு. அதாவது இந்தியாவில் சுதந்திர காற்று வீசத்தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடம்! நாடெங்கும் சுதந்திரக்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த சுதந்திரக் காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் சுவாசிக்கக் கிடைக்கவில்லை. என்ன கொடுமை இது? ஆம்! 1948-1951 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட தடை! நம் விடுதலை மண்ணில்!விடுதலைக்காக- வெள்ளையனை விரட்டியடித்து, பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அதன் சுவடுகூட தெரியாத அளவுக்கு வேரோடு பிடுங்கி எரிந்த தேசபக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது; அளப்பரியது! அப்படிப்பட்ட தேசபக்தர்களை விடுதலை இந்தியாவில் விருப்பம் போல் செயல்படவிடவில்லை அன்றைய காங்கிரஸ் அரசு. கம்யூனிஸ்ட்கள் மீது வழக்குமேல் வழக்கு போட்டது; ஆம்! அவை யாவும் மெய்யான வழக்கல்ல, பொய்யான வழக்குகள். இதன் விளைவு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டனர். ஏன்? எதற்காக?“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றதற்காக! ஆம்! அந்த சமத்துவ கொள்கையை விடுதலை சமவெளிகளில் விதைத்ததற்காக! விடுதலை இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செங்கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக! அதற்காகத்தான் அன்று கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டார்கள் விலங்குகளைப்போல!சேலம் மத்திய சிறையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த (அன்றைய மதராஸ் ராஜஸ்தானி) 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பகுதி 20 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் யாவரும் அரசியல் கைதிகளே! இவர்களை கொள்ளை, கொலை, திருட்டு போன்ற சமூக விரோத, சட்டவிரோத காரியங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘கிரிமினல்’ கைதிகளோடு ‘சி’ பிரிவு சிறையில் அடைக்கப்பட்டார்கள். விடுதலை போரின் வீரர்களுக்கு அன்றைய காங்கிரசும், ஆளும் வர்க்கமும் அளித்த பரிசு இது!“...கிரிமினல் கைதிகளை போல் தொப்பியும், நம்பர் அட்டையும் அணிய வற்புறுத்தினர். ஒவ்வொரு நாளும் வற்புறுத்துதல் அதிகமானது. 1950 பிப்ரவரி 7 ஆம் நாள் 15 தோழர்களை ‘அனெக்ஸ்’ பகுதியிலிருந்து தலைமை சிறைக்கு கொண்டு சென்றனர். மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விப்பட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. பிப்ரவரி 11இல் நெம்பர் அட்டை அணிய மறுத்ததால் ஜெயிலர் கிருஷ்ணன் நாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினர். சேகரித்து வைத்திருந்த கற்களில் நாங்களும் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒருகல் விழுந்து விட்டது. அவ்வளவுதான். உடனே துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். அப்பொழுது முன்னணி தோழர்கள் எங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு அவர்கள் தங்களின் நெஞ்சை நிமிர்த்திக் காட்டினர்...!” என்கிறார் அன்று அந்த சிறையில் இருந்து உயிர் பிழைத்து வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்த உத்தமலிங்கம்.17 தோழர்கள் துப்பாக்கி சூட்டிலும், 5 தோழர்கள் அடித்தும் கொல்லப்பட்டனர்; பிப்ரவரி 11 இல் 22 சுதந்திர போராளிகளை (கம்யூனிஸ்ட்கள்) சேலம் சிறையில் ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தனர்; 22 கம்யூனிஸ்ட்கள் வீரமரணம் எய்தினர்; 105 ரவுண்ட் சுட்டு, கம்யூனிஸ்ட்களின் செங்குருதியை குடித்தது காங்கிரஸ் காட்டுமிராண்டி அரசு!அந்த வீரதியாகிகள் திருபெயர்கள் வருமாறு-1. ஆறுமுகம், 2. காவேரி, 3. சேக்தாகூத் (ஆகியோர் இன்றைய தமிழ்நாடு); 4. எம்.கே. கோபாலன் நாயர், 5. பி. கோபாலன் நாயர், 6. நீலஞ்சேரி நாராயணன் நாயர், 7. பரம்பிக்கடாரம் குஞ்சிப்பா, 8. குஞ்சிராமன், 9. நந்தாரி குஞ்சம்பு, 10. கலாத்தொக்கோயில் ஏதேன், 11. மரோலிகோரன், 12. எம்.நாராயண நம்பியார், 13. புல்லாக்ஜி ஏதேன் கோவிந்தன் நம்பியார், 14. குஞ்சப்ப நம்பியார், 15. வடகோறையின் மான்ஆசாரி, 16. என்.கண்ணன், 17. காட்டூர் நடுவலப்பிறையில் கோரன், 18. உடையாமாடத்து பலக்கல் நம்பியார், 19. தாளன் ராமன் நம்பியார், 20. எம்.கோபாலக்குட்டிநாயர், 21. நடுக்காண்டி பத்மநாபன், 22. நலப்பறக்கல் பாலன் ஆகியோர் இன்றைய கேரளா. இவர்கள் யாவரும் ஏழை உழைப்பாளி மக்களே!“...சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்று வெள்ளை பரங்கி ஜெனரல் டயர் பஞ்சாப் ஜாலியன்வாலாபாக்கில் சுதந்திர போரின் போது கொக்கரித்தான்! அதுபோல் அன்று சேலம் சிறையில் அரங்கேற்றப்பட்டதைக் கேட்கிற போது, நெஞ்சம் வெடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அன்று ‘விடுதலை’யில் தந்தை பெரியார்- “நினைக்க நினைக்க நெஞ்சம் வெடிக்கிறது” என்றும், ‘திராவிட நாடு’வில் அறிஞர் அண்ணா- “கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு” என்றும் தலையங்கம் தீட்டினர்! ஆனால் ‘தினத்தந்தி’ மட்டும் “22 செம்பிடாரிகள் சாவு” என்றது!சேலம் சிறைத்தியாகிகள் அன்று சிந்திய செங்குருதி வீண்போகவில்லை; அவர்களின் சாம்பல்களில் இருந்து இன்று ஆயிரமாயிரமாய் பீனிக்ஸ் பறவைகள்போல் கம்யூனிஸ்ட்கள் எழுந்து வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள்! ஆம்! சேலம் சிறைத்தியாகிகள் எந்த லட்சியத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈய்ந்தார்களோ அந்த சோசலிச சமுதாயம் அமைத்திடும் பணி இன்றும் தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது இந்திய தேசத்திலும், தமிழகத்திலும்!சேலம் சிறைத்தியாகிகளே! நீங்கள் வீழ்த்தப்பட்ட மரங்களல்ல; வீரிய வித்துக்கள்! உங்களிலிருந்து ஆயிரமாயிரமாய் எழுவோம் பினீக்ஸ் பறவைபோல்! சுரண்டும் இந்த அமைப்பை சுக்கு நூறாக்குவோம்!

பி.தங்கவேலு