Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, September 3, 2026

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்ட செயற்குழு!


BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், 02.09.2026 அன்று, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, கூட்ட அரங்கில், எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், விண்ணதிரும் கோஷங்களுக்கிடேயே ஏற்றி வைத்தார். பின்னர், கூட்ட அரங்கில், தோழர் K. சண்முகசுந்தரம், மாவட்ட உதவி தலைவர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் D. பிரசாத், மாவட்ட அமைப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார்.

BSNLEU தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர் M. சண்முகம், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர் அறிமுக உரை வழங்கினார். இடைக்கால ஸ்தாபன பரிசீலினையாக, எழுத்துபூர்வமாக, விவாத குறிப்பு, வரவு செலவு, சமர்ப்பிக்கப்பட்டது. 

பின்னர், BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் B. மாரிமுத்து, சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில், மூன்றாவது ஊதிய மாற்றம், AUAB முடிவுகள், மாநில நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப்போக்கு, 16.09.2026 மாநிலம் தழுவிய போராட்டம், ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடைபெற்ற இயக்கங்கள், மத்திய, மாநில செயற்குழு முடிவுகள், சேலம் மாவட்ட சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார்.

CoC கூட்டமைப்பு சார்பாக, தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் ஆய்படு பொருள், மாவட்ட செயலரின் விவாத குறிப்பின் மீதான விவாதத்தில், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

விவாதத்திற்கு பதில் அளித்து, மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், முதலில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இயக்கத்தில் பங்குபெற்ற தோழர்கள் P. தங்கராஜு, K. தங்கவேல், ஆகியோர்  மாநில செயலரால் கௌரவப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து, சென்ற செயற்குழுவிற்கு பின், பணி நிறைவு பெற்ற நமது தோழர்கள், கௌரவப்படுத்தப் பட்டனர்.

மாவட்ட செயலரின் விவாத குறிப்பு ஏகமனதாக ஏற்கப்பட்டது. கூட்டத்தின் பிற முடிவுகளை மாவட்ட செயலர் முன்மொழிய, முடிவுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைப்பு ரீதியாக, 9 கிளைகளை, 5 கிளைகளாக இணைக்க, மாவட்ட செயலர் கொடுத்த முன்மொழிவு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் நமது தோழர்களை, கிளைகளை இணைத்து, ஒரே கிளையாக, நாமக்கல் கிளை என்கிற பெயரில் கிளை சங்கம் செயல்படும். சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட சேலம் வருவாய் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பணிபுரியும் நமது தோழர்களை, கிளைகளை இணைத்து, ஓமலூர் கிளை என்கிற பெயரில் கிளை சங்கம் செயல்படும். சேலம் நகர பகுதிகளில், (GM அலுவலகம் தவிர்த்து) பணிபுரியும் அனைத்து தோழர்களும், ஒரே கிளையாக, சேலம் நகர கிளை என்கிற பெயரில் கிளை சங்கம் செயல்படும். நடைமுறையில் உள்ள, ஆத்தூர் மற்றும் GM அலுவலக கிளைகளில் எந்த மாற்றமும் இல்லை. 

பணி நிறைவு காரணமாக, ஏற்பட்டுள்ள காலியிடங்கள் பொறுப்புகளுக்கு, புதிய பொறுப்பாளர்கள், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தோழர் K. சண்முகசுந்தரம், மாவட்ட உதவி தலைவர்(1) பொறுப்பிற்கு, தோழர் N. பாலகுமார், AOS., GM அலுவலக கிளை அவர்களும், தோழர் M. சண்முகம், மாவட்ட உதவி செயலர் (2) பொறுப்பிற்கு, தோழர் C. மாணிக்கம், JE., சேலம் மெயின் கிளை அவர்களும், தோழர் J. மணி மாவட்ட அமைப்பு செயலர் (1) பொறுப்பிற்கு, தோழர் R. அன்பழகன், JE ஆத்தூர் கிளை அவர்களும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட பிற முடிவுகள்: 

1. கிளைகள் இணைப்பு சம்மந்தமான,செயற்குழுவின் முடிவுகளை அமுலாக்கும் விதத்தில், நாமக்கல், ஓமலூர், சேலம் நகர கிளை மாநாடுகள் மற்றும் நடைமுறையில் உள்ள ஆத்தூர், GM அலுவலகம் என ஐந்து கிளை மாநாடுகளையும், இரண்டு மாதத்திற்குள், நடத்துவது.

2. பணி மாறுதல், சேவை மேம்பாடு, ஊழியர் தரப்பு பிரச்சனைகள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், அலுவலக பராமரிப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட மாவட்ட அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால், தள மட்ட போராட்டத்திற்கு செல்வது.

3. BSNLEU மாநில சங்க போராட்ட அறைகூவலான, 16.09.2026 மாலை நேர தர்ணா போராட்டத்தை, நமது மாவட்டத்தில், CoC சார்பாக, சக்திமிக்கதாக நடத்துவது.

4. 03.10.2026 அன்று டெல்லியில் நடைபெறும், BSNLCCWF சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு செல்லும் TNTCWU தோழர்களுக்கு, உதவுவது.

5. மூன்றாவது ஊதிய மாற்றத்திற்காக, நடைபெறவுள்ள AUAB  போராட்டங்களை, சேலம் மாவட்டத்தில் சக்திமிக்கதாக நடத்துவது.

6. ஓய்வூதிய மாற்றத்திற்காக AIBDPA தலைமையில் நடத்தப்படும், NCPA / FCCPA போராட்டங்களுக்கு, ஆதரவு தருவது.

7. அடுத்த தள மட்ட கவுன்சில், LCM கூட்டத்தை கூட்ட ஏதுவாக, கிளை சங்கங்கள், 10 நாட்களுக்குள், அஜென்டாகளை வழங்குவது.

8. மாநிலத்தில் எங்கும் இல்லாத நிகழ்வாக, காவல் பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியரே, அலுவலகம் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யவேண்டும் என்கிற, பிற்போக்கான உத்தரவை, திரும்ப பெரும் வரை தொடர்ச்சியாக, நிர்வாகத்துடன் பேசுவது, இயக்கம் காண்பது.

இறுதியாக, தோழர் R. ரமேஷ், மாவட்ட பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கொடிகள், தோரணங்கள், அமைதியான இடம், இருக்கைக்கே தேநீர், பலகாரம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு என சிறப்பான ஏற்பாடுகள் செய்த, BSNLEU செவ்வை கிளை மற்றும் TNTCWU தோழர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்