Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, January 12, 2021

சாதி சான்றிதழ் சரிபார்ப்பு விவகாரம் - BSNLEU கடிதம்



OFROT என்ற ஒரு அமைப்பு மராட்டிய மாநிலத்தில் உள்ள 857 ST பிரிவு  ஊழியர்கள், போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக ஆதாரமற்ற ஒரு புகாரை கொடுத்ததன் அடிப்படையில், சம்மந்தப்பட்ட ST பிரிவு ஊழியர்கள் தங்கள் சாதி சான்றிதழின் உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும் என  நிர்பந்திக்கப்பட்டு, மராட்டிய மாநில நிர்வாகத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். 

BSNLEU  இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ப்பரேட் நிர்வாகத்தை  தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 857 ST பிரிவு ஊழியர்களில் பெரும்பாலான ஊழியர்கள் வயது மூப்பு மற்றும் VRS2019 திட்டத்தில், பணி நிறைவு செய்து விட்டார்கள். 

அவர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் தவிர எந்த ஒரு ஓய்வு கால பலன்களும் வழங்கப்படவில்லை. மராட்டிய மாநில நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைளை,  பல்வேறு உத்தரவுகளை சுட்டிக்காட்டி விவாதித்தும் கோரிக்கையில் முன்னேற்றம் இல்லை. 

இந்நிலையில் SC / ST ஊழியர்களுக்கான பாராளுமன்ற நிலை குழு கூட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. 1995 க்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்கள், பணி நியமன காலத்தில் வழங்கிய சான்றிதழின் உண்மை தன்மையை தற்போது ஆராய கூடாது என 24.12.2020 தேதியிட்ட உத்தரவில் பாராளுமன்றகுழு தெளிவு படுத்தியுள்ளது.

அதாவது, 1995க்கு முன் பணியில் சேர்ந்த ST பிரிவு ஊழியர்களின் சான்றிதழின் உண்மை தன்மையை இனி  SLC, என்று சொல்லக்கூடிய மாநில கண்காணிப்பு குழு ஒப்புதலுக்காக அனுப்பி அவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என 24.12.2020 தேதியிட்ட, பாராளுமன்ற குழு உத்தரவு தெரிவிக்கிறது.

அதை சுட்டிக்காட்டி, மராட்டிய மாநில ST பிரிவு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வு கால பலன்களை பட்டுவாடா செய்ய வலியுறுத்தி, BSNLEU மத்திய சங்கம்  11.01.2021 அன்று BSNL CMD மற்றும் தொலைதொடர்பு துறை, Member (Finance), ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தோழர்களே! இது எதோ மராட்டிய மாநில தோழர்களுக்கு மட்டுமான கடிதம் அல்ல. தமிழகத்திலும் பாதிக்கப்பட்டுள்ள ST பிரிவு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வு கால பலன்களை பெறுவதற்கு வழி வகை செய்யும் கடிதம் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு விடியல் பிறக்கும் என நம்புவோம்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்

மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்