2020 நவம்பர் 26 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு BSNL ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலின் அடிப்படையில், மத்திய உதவி தொழிலாளர் நல ஆணையர் 20.11.2020 அன்று சமரச பேச்சு வார்த்தையை நடத்தினார். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும், நிர்வாகத்தின் சார்பில் திரு பிரதீப் குமார் AGM(SR) அவர்களும் கலந்துக் கொண்டனர். நமது கோரிக்கைகளை நமது பொதுசெயலர் தோழர் P.அபிமன்யு விளக்கமாக எடுத்துரைத்ததோடு, நிர்வாகம் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்வு காண தயாரில்லை என குற்றம் சாட்டினார். நிர்வாகத்தின் வாதங்களை AGM(SR) முன்வைத்தார். 3வது ஊதிய மாற்றம் தொடர்பாக அவர் கூறுகையில், ஊதிய பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும் என்கிற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பேச்சு வார்த்தை துவங்கும் என்றும் கூறினார். அதன் பின் பேச்சு வார்த்தையை 2020, டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இடையில் நிறுத்தப்பட்ட ஊதிய பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. BSNL நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உடன்பாட்டில் கையெழுத்திட்டு, தமக்கு அனுப்ப வேண்டும் என தொலை தொடர்பு துறை BSNLக்கு அறிவுறுத்தியதை, நமது சங்கம் சுட்டிக் காட்டியது. எனவே தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலை BSNL நிர்வாகம் மீறி ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை இடையில் நிறுத்தியது என BSNL ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியது.
அந்த அடிப்படையில் ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த பிரச்சனையை 39ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் விவாதத்திற்கு உரிய பிரச்சனையாக BSNL ஊழியர் சங்கம் முன்வைத்துள்ளது. மேலும், நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்த கோரிக்கைகளில் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தையும் உள்ளடக்கி நிர்வாகத்திற்கு அறிவிப்பு வழங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் 20.11.2020 அன்று நடைபெற்ற சமரச பேச்சுவாத்தையில் நிர்வாகத்தின் சார்பில் கலந்துக் கொண்ட திரு பிரதீப் குமார் AGM(SR) அவர்கள், விரைவில் ஊதிய பேச்சு வார்த்தையை துவங்க உள்ளதாக தெரிவித்தார். இது BSNL ஊழியர் சங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியால் கிடைத்த பலன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கொள்ள தேவையில்லை. நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள BSNL ஊழியர் சங்கம், மேலும் காலதாமதமின்றி ஊதிய பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.