Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 31, 2019

சிஐடியு பொன் விழா ஆண்டை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்!


ஒன்றுபடுவோம்!  போராடுவோம்! என்ற போர்ப்பரணியோடு கல்கத்தா நகரில் 1970 மே 30ஆம் நாள் உயர்ந்த சிஐடியு செங்கொடி இந்தியநாட்டில் ஐம்பதாண்டுகள் பவனிவந்து இன்று பொன்விழா கோலம் பூண்டு முன்னேறுகிறது. இந்த பொன்விழா- சிஐடியு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிவீசித்திகழும் அங்கீகாரத்தை பெற்ற போராட்ட ஒற்றுமையின் சிகரமாகும். சோசலிசம் என்ற குறிக்கோளையும், வர்க்கப் போராட்டத்தையும் சிஐடியு தொடர்ந்து உயர்த்தி பிடித்து வந்ததுடன் இவ்வுயரிய நோக்கத்துக்கு விரோதமான அனைத்து தத்துவங்களையும் அது எதிர்த்து போராடியும் வந்துள்ளது. 

சிஐடியுவின் பொன்விழா ஐம்பதாண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு களிப்பும், உவகையும் மீதூறக் கொண்டாடி மகிழும் விழா மட்டுமன்று; கடந்த கால அனுபவங்களையும் படிப்பினைகளையும் கருத்தில் வைத்து இந்திய உழைப்பாளி மக்கள் இன்று எதிர்கொள்கின்ற சவால்களை முறியடித்து, வரலாறு நம்மீது சுமத்தியுள்ள வர்க்கக் கடமைகளை நிறைவேற்றும் பாதையில் நமது இலட்சியப் பயணத்தை மேலும் வீறுகொண்டு தொடர உறுதி பூணும் தருணம் இது!. சிஐடியு உதயமானபோது நம்மை பிளவுவாதிகள் என்று ஏசியவர்கள் உண்டு. ஒற்றுமைக்காக நாம் கரம் நீட்டியபோது உதறித்தள்ளி உதாசீனப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால் இன்று இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க இயக்கத்தின் ஒற்றுமைத் தேருக்கு அச்சாணியாய் திகழுவது சிஐடியு என்பதை மறுப்பவர் எவரும் இல்லை.

குறைந்தபட்ச போனசை 4 சதவீதத்திலிருந்து 8.33 சதவீதமாக உயர்த்துவதற்கான இயக்கம், 

1974 ரயில்வே தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலை நிறுத்தம், 

கட்டாய சேமிப்பு என்ற பெயரில் இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் கொணரப்பட்ட ஊதிய முடக்கத்தை எதிர்த்த இயக்கம், 

1975-76 அவரசகால கொடுங்கோன்மையின் குவிமுனைத் தாக்குதல்களைச் சந்தித்த தொழிலாளி வர்க்கத்தின் எதிர் நடவடிக்கைகள், 

பூதலிங்கம் குழுவின் மோசமான பரிந்துரைகளைத் தாங்கி வந்த புதிய ஊதியக் கொள்கை என்ற பேராபத்தை முறியடித்த இயக்கம், 

புதிய தொழிலுறவு மசோதா என்ற பெயரில் ஜனதா ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்ட தொழிலாளர் விரோத, உரிமைப்பறிப்புத் திட்டத்தை ஊதித்தள்ளிய போராட்டம், 

மாறாது நிலை கொண்டுவிட்ட பொதுத்துறை தொழிலாளர்களுக்கான பஞ்சப்படி புள்ளிக்கு ரூபாய் 1.30 என்பதை உயர்த்துவதில் இருந்து தொடங்கி இன்று பொதுத்துறைகளையும், தொழிலாளர் நலன்களையும் பாதுகாக்கும் கூட்டியக்கம், புதிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள், 

அனைத்திந்திய அளவிலான பேரணிகள், சிறப்பு மாநாடுகள், பொதுவேலை நிறுத்தங்கள், பந்த் என்று எண்ணற்ற கூட்டியக்கம், 

ஐம்பதாண்டுகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் ஈடுபட்டஅனைத்து போராட்ட இயக்கங்களிலும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுபடுத்தி பங்கேற்கவைத்ததில் சிஐடியுவின் பணி மகத்தானது. தொழிற்சங்க ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசிய போராட்டக்குழு (NCC) ஸ்பான்சரிங் கமிட்டி, வெகுஜன ஸ்தாபனங்களின் தேசிய மேடை என்று மாறிவரும் காலச் சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான புதிய புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டதில் சிஐடியு பரந்துபட்ட அமைப்பாக பாடுபட்டு வந்துள்ளது. 

1979-ல்  சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய ஒருமகா சம்மேளனம் உருவாக்கவேண்டும் என்று சிஐடியு அறைகூவல் விடுத்து அதைதொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.1970-80 காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் 1971ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மாநில மாநாடு மதுரையில் நடத்தப்பட்டபிறகு தமிழகத்தில் நமது இயக்கத்தின் மீதும், போராடும் தொழிலாளர்கள் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன், கே.எம்.அரிபட், ஆர்.குசேலர் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரனையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிற் தகராறு சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பல வேலை நிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டன. இருப்பினும் பல்வேறு தடைகளை தாண்டி நடைபெற்ற போராட்டங்களை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. டி.வி.எஸ் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டம், டி.ஐ.சைக்கிள் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம், பஞ்சாலை தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய பொதுவேலை நிறுத்தம். எண்ணூர், பேசின்பிரிட்ஜ் அனல்மின் நிலையங்களில் துவங்கி மாநிலத்தின் பல பகுதிகளில் பரவிய மின்சாரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பாரத மிகுமின் நிறுவனம்,  இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (ஊட்டி), சர்க்கரை, சிமெண்ட், தேயிலைதோட்டங்கள் போன்றவற்றின் போராட்டங்கள், இந்துஸ்தான்டெலிபிரிண்டர்ஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம், சட்டமன்றத்தையே ஒத்திவைக்க செய்து வரலாறு படைத்த சிம்கோ மீட்டர்ஸ் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்த போராட்டம், நெய்வேலியில் நடந்த வேலை நிறுத்தம், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், தோல் பதனிடும் தொழிலாளர்கள், ஸ்தல ஸ்தாபன தொழிலாளர்கள் நடத்திய கிளர்ச்சி, பாலு கார்மென்ட்ஸ், அம்பத்தூர் குளோத்திங் பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக நடத்திய வீரமிக்க போராட்டம், கைத்தறி தொழிலாளர்கள் நடத்திய மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம்-மறியல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் நடத்திய உறுதிமிக்க போராட்டங்கள் நடந்ததெல்லாம் இதே காலகட்டத்தில்தான். இதில் பெருவாரியான போராட்டங்கள் நீடித்த போராட்டங்களாகவே இருந்தன. உறுதியாகவும் தீவிரமாகவும் நடத்தப்பட்ட போராட்டங்களாக இருந்தன. இந்த போராட்டங்கள் பலவற்றில் போலீசின் மிகக்கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பஞ்சாலை தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தின் போது துடியலூர், சிங்காநல்லூர் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட கொடுரமான தடியடி, டி.ஐ.சைக்கிள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, துப்பாக்கி பிரயோகம், கரூர் எல்பிஜி மோட்டார் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போதுநடத்தப்பட்ட தடியடி, டிவிஎஸ் போராட்டத்தின் போது ஏவிவிடப்பட்ட கடும் அடக்குமுறை போன்றவை முக்கியமான நிகழ்வுகளாகும். 

1980-90 காலகட்டங்களில் 

1982 ஜனவரி 19 நடைபெற்ற தேசம் தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தின் போது தமிழகத்தில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய மூன்று விவசாயத் தொழிலாளர்களை தமிழக போலீசார் சுட்டுக்கொன்றது. 1984ல் ஆலை மூடல், ஆட்குறைப்பு, கதவடைப்புக்கு எதிராக நடைபெற்றபோராட்டங்கள், 1985ஆம் ஆண்டு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னையில் நடைபெற்ற 5வது மாநில மாநாட்டையொட்டி  வெளியிடப்பட்ட மலர், மலருக்கான விளம்பரம் சேகரித்த காரணத்தையொட்டி தோழர்கள் து.ஜானகிராமன், எஸ்.பஞ்சரத்னம், எஸ்.எஸ்.சுப்பிரமணிம் உள்ளிட்ட 44 தலைவர்கள் மீது நிர்வாகம் எடுத்த வேலைநீக்க பழிவாங்கலை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், 1986ல் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியப் போராட்டம், பொதுத்துறையை பாதுகாக்க 1987ல் நடைபெற்ற ஒருநாள் வேலை நிறுத்தம், 1988 மார்ச் 15 பாரத்பந்தை வெற்றிபெறச் செய்வது, மீண்டும் 1988 மார்ச் 14முதல் 16வரை நடைபெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கான மூன்றுநாள் வேலை நிறுத்தம், தூத்துக்குடியில் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் போராட்டம், நெய்வேலியில் அங்கீகார பிரச்சனையில் நடந்த வேலை நிறுத்தம் போன்றவை குறிப்பிடத்தகுந்த போராட்டங்கள். 

தாராளமயத்திற்கு பின்னால் 

2003இல் திருநெல்வேலியில் நடைபெற்ற 9வதுமாநில மாநாட்டின் முடிவின்படி, பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முயற்சியின் பலனாக விஸ்டியான் ஆட்டோமோடிவ்ஸ் என்ற கம்பெனி தொழிலாளர்களுக்கு சங்கம் அமைத்தோம். இதுதான் பதிவு செய்யப்பட்ட முதல் பன்னாட்டு கம்பெனி சங்கமாகும். பிறகு ஹூண்டாயில் தொடர்பு கிடைத்தது. ஹூண்டாய் தொழிற்சாலையில் ஒர்க்ஸ் கமிட்டி செயல்பட்டு வந்தது. கடவுள் படத்தை கொரிய அதிகாரிகள் காலில் போட்டு மிதித்ததை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களை நாயாக உருவகப்படுத்தி ஒரு கருத்துப்படத்தை கொரிய அதிகாரிகள் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களின் தன்னெழிச்சி போராட்டம் வெடித்தன.  போராட்டத்தில் நாம் தலையிட்டதின் பெயரில் சிஐடியுவை நாடிவந்தனர். சங்கம்அமைத்து பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிற்சங்க பதிவாளரிடம் சமர்ப்பித்தவுடன் நிர்வாகம்  பழிவாங்க தொடங்கியது. 12 பேர் மும்பை, டில்லி போன்ற இடங்களுக்குஇடம் மாற்றம் 80 பேர் வேலை நீக்கம் என பழிவாங்கியது. பழிவாங்கலை கண்டித்து தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொழிலாளர் ஆணையர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்தனர்.உண்ணாவிரதம் 4நாட்கள் தொடர்ந்தது. பல தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். அதுவரை பேச்சுவார்த்தைக்கே வரஇயலாது என்ற நிர்வாகம் தொழிலாளர் ஆணையர் முன்பு ஏ.எஸ் மற்றும் நிர்வாகிகளுடன் பேசி ஏற்புடைஅறிவுரை பெற்று அந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. 18நாட்கள் போராட்டத்திற்கு பிறகு ஒரு தொழிலாளிக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் உள்ளே சென்றனர். இதனை தொடர்ந்து நோக்கியா, பாக்ஸ்கான் போன்றவற்றில் சங்கம் அமைக்கப்பட்டது. பாக்ஸ்கானில் நடைபெற்ற போராட்டத்தின் போது தோழர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டது. இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் அதன்விளைவாக 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சிஐடியு  தலைமைப்பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. மற்றும் திருநெல்வேலி ஏடிசி டயர் தொழிற்சாலையிலும் சிஐடியு சங்கம் செயல்பட்டு வருகிறது. 

இதே காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் மறுப்புக்கு எதிரான 18 நாட்கள் தொடர்ச்சியான போராட்டம். ஆயிரக்கணக்கில் கைது போன்ற சம்பவங்களும் ஆளும் அரசுக்கு எதிராக திரும்பியது. 2003ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் - 1லட்சத்து 73ஆயிரம் பேர் டிஸ்மிஸ், வீடுபுகுந்து கைது போன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. போக்குவரத்து சம்மேளனம் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன்  அவர்கள் வழக்கு தொடுத்ததின் பேரில் அரசு ஊழியர், ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. இதனால் சிஐடியு அந்தஸ்து பெருமளவுக்கு உயர்ந்தது. 2019 ஜனவரி மாதம் 8-9 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் வரை எண்ணற்ற போராட்டங்களை தொழில்வாரியாக சிஐடியு மேற்கொண்டுள்ளது. 

புதிய சூழலில்

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. இதன் விளைவு கடந்தஐந்தாண்டுகளில் எதிர்கொண்ட பிரச்சனைகள் மேலும் தீவிரமாகும். அதுபோன்றே நமது பணிகளையும் முன்னைக்காட்டிலும் வேகப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இப்பின்னணியில், நிரந்தர தொழிலாளர்களைசுற்றியே சுழன்று கொண்டிருக்கும் அமைப்பாக தொழிற்சங்க இயக்கம் இருந்து விடக்கூடாது. ஸ்தாபன ரீதியாகதிரட்டப்படாத தொழிலாளர்களையும்  ஈர்த்து செயல்படவேண்டும். 

ஆண் தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்புகளை ஏற்று செயல்படுவது என்பது ஒற்றைக்காலில் நொண்டியடிப்பது போலாகிவிடும். எனவே, உழைக்கும் பெண்களைத் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் செயல்படவைக்க விசேஷ கவனம் செலுத்துவது.

கிராமப்புறத்து ஏழை மக்களான விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகளின் இயக்கத்தை வளர்த்தெடுக்க உணர்வுபூர்வமாக ஈடுபாட்டை செலுத்தி தொழிலாளி விவசாயி அணியைக் கட்டுவது. 
தொழிற்சங்க போராட்டங்களை சீர்குலைக்க ஆளும் வர்க்கங்கள் வேலையில்லாத இளைஞர்களை கருவியாகப் பயன்படுத்தும் மோசடியை புரிந்துகொண்டு வேலையில்லாதோரை திரட்டி வேலை கிடைக்க போராடவைப்பது. 

கூலி-பஞ்சப்படி, போனஸ் என்ற குறுகிய வட்டத்துக்கு அப்பால் சென்று இன்றைய தொழிலாளர்களின் புதிய எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய வீட்டுவசதி, பயிற்சி, பதவிஉயர்வு, ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது. 

சாதி மோதல்களில் தொழிலாளி வர்க்க ஒற்றுமை பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்துவதோடு, ஓடுக்கப்பட்ட ஜாதியினரின் சமூக நீதிக்கான கோரிக்கைகளை தொழிற்சங்க மேடையிலிருந்தே எதிரொலித்து வர்க்க ஒற்றுமையை பாதுகாப்பது.

வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளில் தாக்குதல்களினால் நாடும், மக்கள் ஒற்றுமையும் கூறுபோட படும் அபாயத்தை தடுத்து நிறுத்தி நாட்டையும் வகுப்பு நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவது. 

போன்றவை சிஐடியு முன்கையெடுத்து செயல்படுத்த  புதிய பரிமாணங்களின் சிலவாகும். ஆனால் இந்த அன்றாட போராட்டங்களுக்கு அப்பால் சென்று இன்றைய சுரண்டல் அமைப்புக்கே முற்றுப்புள்ளி வைக்கும் புரட்சிகர சக்தியாக தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குவதும், சுரண்டலில் இருந்து விடுதலை பெற்று சோசலிசத்தை நிறுவ, இடைவிடாது போராடுவதும், தொழிற்சங்கஇயக்கத்தின் இன்றியமையாத கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளது சிஐடியு. இன்றைய சர்வதேச நிலையில் ஏகாதிபத்தியத்தையும், ஏகபோக முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடும் உலகம் முழுவதிலும் உள்ள நமது வர்க்க சகோதரர்களுடன் கைகோர்த்து நின்று பாட்டாளிவர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்காக உரக்க குரல்கொடுத்து உணர்வுடன் செயலாற்றி வருவதும் சிஐடியு. நமது சிஐடியுவின் பொன்விழாவை பெருமிதத்தோடு, கொண்டாடுவோம். இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாம் சிஐடியுவை மேலும் வளர்ப்போம்! பலப்படுத்துவோம்!

வி.குமார், CITU தமிழ் மாநில உதவி தலைவர் 
img