13.04.1919 - 13.04.2019
சுட்டேன்..சுட்டேன்..தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன் எனும் இந்த ஆணவ வரியைஇந்தியனாக பிறந்த எவராலும் மறக்க முடியாது. பள்ளியில் படித்தது. படித்த போது ஆங்கிலஅரசின் கொடுமை கண்டு கண்கள் கலங்கியது. மடிந்தஅந்த அப்பாவி மக்களைப் பற்றியும், அதையே “காந்தி” திரைப்படத்திலும், பகத்சிங் திரைப்படத்திலும் காட்சியாக பார்த்த போது அழுததும் இன்னும் நினைவுகளில். அந்த கொடூரம் நடந்த இடத்தை நேரே பார்த்த போது அந்த குறுகிய நுழைவு வாயிலை கொண்ட மைதானம், கிணறு, தோட்டாக்களின் வடுக்களை தாங்கிய சுவர்கள்என எண்ண ஓட்டத்தை பின்னோக்கிய போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ல் நடந்த அம்மனித படுகொலையை மீண்டும் நினைத்தால் உடம்பெல்லாம் நடுங்குகிறது.
அந்த கொடூரம் நடந்த நூற்றாண்டு நினைவு நாள் இன்று.அது ஜாலியன் வாலாபாக் படுகொலை.
ஒரு மனித கொடூரம் நடந்து நூறாண்டுகள் கழித்துஅந்த நிகழ்வை நடத்திய இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் டிம் மே வருத்தம் தெரிவித்துள்ளார். உலகஅரங்கில் அடிமை நாடுகளில் நடத்தப்பட்ட மிக கொடியதுப்பாக்கிச் சூடு. அதையொட்டிய மரணம் ஆகியவற்றில் ஜாலியன் வாலா பாக் சம்பவமே மிக மோசமானது.
கொடுங்கோல் சட்டம்
இந்திய விடுதலை போரின் நீண்ட வரலாற்றில் பெரும்போராட்டங்கள், வீர மரணங்கள் என ரத்த சாட்சியங்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு போராட்டமும் வெவ்வேறு வகையில் முக்கியமானவை.ஆனால் ஜாலியன் வாலா பாக் சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது. ஏன் என்றால்அது ஆங்கில ராணுவத்தின் ஆதிக்கத்தை, திமிரை, கொடுங்கோன்மையை பறைசாற்றிய சம்பவம். அந்த சம்பவம் தான் இந்திய சுதந்திர போராட்டத்தின் திசை வழியையே மாற்றியது என்றும், காலனி ஆதிக்கத்தின் சங்கிலிகளை உடைத்தெறிய மக்கள் முடிவு செய்ய வைத்தது என்றும் சொல்ல முடியும்.
இன்று சட்டத்தின் ஆட்சி எனும் சொல்லாடலை நாம் பொதுவெளியில் அன்றாடம் கேட்கின்றோம். ஆனால் அடிமை இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான். அப்படி வந்தது தான் ரவுலட் சட்டம் எனும் கருப்புச் சட்டம். இந்த சட்டத்திற்கு எதிராக ஆங்காங்கே மக்களின் கோபம்கொப்பளித்து வெவ்வேறு வடிவம் பெற்றது. கிட்டத்தட்ட எல்லாமே சாத்வீகமான இயக்கங்கள். ஒன்று கூடுதல், அமைதியாக எதிர்ப்பை தெரிவிப்பது, கருப்புச் சட்டத்தின்அபாயத்தை பகிர்வது என்பது தான் அந்த வடிவங்கள். ரவுலட் சட்டம் அதன் பிரிவுகள் ஒட்டுமொத்த ராணுவ திணிப்பை, குரல் வளையை முறிக்கும் ஷரத்துக்களை அறிந்து கொள்வதே சாமானிய இந்தியனுக்கு பெரும் கடினமாக இருந்தது.
அந்த பின்னணியில் தான் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் இச்சட்டத்தின் கொடுமைகளை தெரிந்து கொள்ள மக்கள் கூடினர். அது ஒரே ஒருசிறு நுழைவாயிலை மட்டுமே கொண்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள இடம். சீக்கியர்களின் புனித தலம். அதோடு அன்றோ சீக்கியர்களின் புத்தாண்டு (வைசாகி தினம்) என்பதால் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். ராணுவ ஆட்சியின்மீதான பயம் அதிகமாக வேண்டும் என முடிவு எடுத்தான்பஞ்சாபின் கவர்னர் மைக்கேல் ஒ ட்வையர். அந்த எண்ணஓட்டத்தை செயலாக்க அவன் முன்னிருத்திய அதிகாரி தான் ஜெனரல் டயர்.
இவர்கள் இருவரும் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூட போகும் கூட்டத்தை இனி எவரும் மறக்கவேகூடாது. நாட்டின் எந்த பாகத்திலும் ஒர் எதிர் குரல் கூட ஒலித்திடக் கூடாது என்பதை போன்ற ஒரு நிகழ்வை நடத்திட முன்னரே திட்டமிட்டனர். எவ்வளவு மக்கள் கூடுவார்கள். அந்த எண்ணிக்கையில் எத்தனை பேரை கொலை செய்யலாம் என்பது உட்பட திட்டம். அதை செயலாக்கிக் காட்ட வேண்டும். நர வேட்டை நடத்திட முடிவும் செய்தார்கள்.
1919, ஏப்ரல்.13
வைசாகி திருநாளையொட்டி அமிர்தசரஸ் நகரின் பொற்கோவிலுக்கு சுமார் 50,000 மக்கள் வந்தனர். ஒருபெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரளை ஒட்டுமொத்தமாக மிரட்சி அடைய வைத்து, நாடு முழுவதும் பீதியைஉருவாக்குவதே பிரிட்டிஷாரின் நோக்கம். மைதானத்துக்குள் மக்கள் திரண்டனர். கிட்டத்தட்ட முழுமையடையப் போகும் நேரத்தில் ராணுவ தளவாடங்கள் துப்பாக்கிகள்சகிதமாக வந்து மைதானத்தின் சிறு வாசலை அடைத்து நிராயுத பாணிகளாக இருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி எங்கும் தப்பிக்க முடியாமல் அடைத்துதுப்பாக்கி சூடு நடத்தினான். சுவர்களில் ஏற முடியாது.சிதறி ஓடியதால் மண் பறந்து எதுவும் தெரியாமல் போய் மோதிக்கொண்டு மாண்ட பச்சிளம் குழந்தைகள். தப்பிக்க இருந்த ஒரே வழியான அங்கிருந்த கிணற்றில் குதித்து மேலே எழமுடியாமல் இறந்தவர்கள். குண்டுபட்டு மரணித்தவர்கள் என சுமார் 500 பேருக்கும் அதிகமானவர்கள் மடிந்தனர். அப்போதும் அந்த மனித மிருகத்துக்கு வெறி அடங்கவில்லை. இன்னும் சிலரை விட்டுவிட்டோமே என ஆதங்கப்பட்டான் என்பதை அவனின் வாக்குமூலத்தின் மூலமே அதை தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை நிகழ்ச்சி தான் இந்திய மக்களின் தேச விடுதலை போராட்டத்தின் திசை வழியை தீர்மானித்தது. சொல்லப்போனால், காந்தியாரின் சிந்தனை ஓட்டத்தையே மாற்றியது.
இந்த மனித படுகொலை பெரும் அதிர்வலைகளை நாட்டுக்குள் ஏற்படுத்தியது. இக்கொடுமையை பற்றிய செய்தியும் அவ்விடத்தை நேரே பார்த்திட்ட ஒரு சிறுவனை தான் இன்னும் பல லட்சம் பேருக்கு போராட்ட உணர்வை ஊட்டும் மாவீரன் பகத் சிங்காக நமக்கு அளித்தது. அந்த சிறுவன் போட்ட விதை தான் இன்னும்நமக்கு செயலூக்கம் தருகின்றது.ஒரு கருப்புச் சட்டம். அதன் பாதகங்களை எதிர்த்த மக்களுக்கு கிடைத்த பரிசு தோட்டாக்கள்.ஆனால் நூறாண்டுகளுக்கு பிறகும் புது வடிவங்களில்இன்றும் புது சட்டங்கள் நம்மை துரத்துகின்றன.
விசாரணை கமிஷனும் வாக்குமூலமும்
ஜாலியன் வாலா பாக் சம்பவத்தை உலகம் முழுதும்உள்ள பல நாடுகள் கண்டித்தன. தாங்கள் மனித உரிமைகளின் பாதுகாவலர் என்பதை உலகுக்கு சொல்லிட, இக்கொடுமையை விசாரிப்பது என ஒரு விசாரணை கமிசனை ஆங்கில ஏகாதிபத்தியம் நடத்தியது. அதில் டயர்கொடுத்த வாக்குமூலம் என்ன தெரியுமா? பஞ்சாப் மக்களுக்கு ராணுவத்தின் மீதான பயத்தை மேலும் அதிகப்படுத்திடவே அதை செய்தேன். இன்னும் அதிகமாக காட்டியிருப்பேன். தோட்டாக்கள் தீர்ந்து போனதே என சொன்னான். அந்த கொடுங்கோலனை இங்கிலாந்துக்கே சென்று, அவனின் பணி ஓய்வு காலத்தில் பழி தீர்த்து கொலை செய்தான் மாவீரன் உத்தம் சிங். தன் நாட்டு மக்களை கொன்று குவித்த அவனை என்றாவது ஒரு நாள்நானே கொல்வேன் என ஜாலியன் வாலா பாக் மண்ணில்சபதமெடுத்தான். நிறைவேற்றினான்.
BSNLEU சேலம் மாவட்ட சங்கம், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தனது செவ்வணக்கதை தெரிவித்து கொள்கிறது.