கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட மரணங்களுக்கு இழப்பீடு கொடுப்பது சம்பந்தமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆகஸ்ட் 17 தேதியிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படி எல்லா காலத்திலும் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் என்பதற்கான சரியான உதாரணமாகும். கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாலிசி எடுத்த மறுநாளே இறந்திருந்தாலும் அவருக்கு முழுத்தொகையை வழங்குவது என்று எல்ஐசி முடிவெடுத்திருக்கிறது. அதேபோல உடல் ஊனம் ஏற்பட்டிருந்தாலும் அது இந்த வெள்ளத்தால் ஏற்பட்டதெனில் அதற்கும் காலம் பார்க்க வேண்டியதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். இறப்புச் சான்றிதழ் முறையாக - உடனடியாகத் தர முடியவில்லையெனில், அரசின் எந்த துறை ஒருவர் இறந்ததாக குறிப்பிட்டிருந்தாலும் அதை இறப்பாக கவனத்தில் கொண்டு இழப்பீடு வழங்கலாம் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். வாரிசுதாரர் மற்றும் பாதுகாப்பாளர் யார் என்பதற்கான உரிய சான்றிதழ் அளிக்க முடியாத நிலையிருந்தாலும் அவர்களுக்கும் இழப்பீட்டை வழங்கி விடலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைப் பொறுத்தமட்டில் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என வழிகாட்டப்பட்டிருக்கிறது.
ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான இழப்பீடு எனில் பாலிசி பத்திரம் அழிந்து போய்விட்டதென்றால் அதற்கான தொகையை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு கொடுத்து விடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க முன்வரும் போது எல்.ஐ.சி. என்கிற பொதுத்துறை நிறுவனம் தானும் அந்த துயரில் பங்குபெறுவதோடு அந்த மக்களுக்கான சேவையை எந்த சிரமுமின்றி செய்வது என்றும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இதுபோன்ற நேர்வுகளில் விபத்து காப்பீடு என்ற வகையில் கூடுதலாக மற்றொரு மடங்கு காப்பீடு தொகை வழங்க வேண்டியதில்லை என்று ஏற்கனவே விதிகள் இருந்தாலும் அதை இந்த நேரத்தில் இந்த குறிப்பிட்ட பகுதிகளுக்காக மாற்றி அடிப்படை காப்பீட்டு தொகையுடன் விபத்து காப்பீட்டிற்கு வழங்க வேண்டிய மற்றொரு காப்பீட்டு தொகையையும் வழங்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எல்.ஐ.சி. மக்களின் பணத்தால் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. மக்களுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சான்று இது. பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு விடுத்த ஃபிட்னெஸ் சவால் தனி நபர் சம்பந்தப்பட்டது. எல்.ஐ.சி விடுக்கும் சவால் தேசம் சம்பந்தப்பட்டது. எல்.ஐ.சி.யின் இந்த ஃபிட்னெஸ் சவாலை மோடியும் அவரது வகையறாக்களும் வருந்தி வருந்தி அழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்பார்களா?