Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 18, 2018

பொதுவுடைமை அரசியலின் அடையாளம் ஜீவா...

ஜீவா நினைவு நாள் ஜனவரி 18

Image result for jeeva freedom fighter

‘காலுக்குச் செருப்புமில்லை,
கால்வயிற்றுக் கூழுமில்லை,
பாழுக்குழைத் தோமடா-என் தோழனே
பசையற்றுப் போனோமடா’
பாலின்றிப் பிள்ளைஅழும் 
பட்டினியால் தாயழுவாள் 
வேலையின்றி நாமழுவோம்-
என் தோழனே வீடு முச்சூடும்அழும்’
‘கோடிக்கால் பூதமடா..
தொழிலாளி கோபத்தின் ரூபமடா’ 
எனும் கவிதைகள் காலத்தால் அழியாதவை. 

அவை சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, மிகச் சிறந்த பேச்சாளர் தோழர் ஜீவா அவர்களை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைத்தண்டனைகளையும் சோதனைகளையும் தாங்கியவர். அவரது ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்கப் பற்றாளராக, இலக்கியவாதியாக,பொதுவுடமை இயக்கத் தலைவராகச் செயலாற்றியவர்.

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம் சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும் எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார். பெரும்இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்குப் புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர். பொதுவுடமை மேடைகளில் முதல் முறையாக தமிழ்கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் நடத்தித் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கும் கிடைக்காத பேறு.இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகளாகிய கண்ணம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றவர் ஜீவா.மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராகவெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால் அன்றையஇளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார்.

சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான்ஏன் நாத்திகனானேன்?’ எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்தார். அதை பதிப்பித்தவர் ஈ.வெ.கிருஷ்ணசாமி.அதை வெளியிட்டவர் பெரியார். மொழி பெயர்த்ததற்காக, ஜீவாவின் கை கால்களுக்கு விலங்கிட்டனர். 1930- களில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோடு தன்னை சுயமரியாதை இயக்கத்தவராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939-1942) மும்பையிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில்இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்களையும் கவர்ந்தார் ஜீவா. எதிராளியையும் பேச்சால் தன்வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை “சட்டப்பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.எதிரணியில் இருந்தாலும் அனைத்துத் தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். இலக்கியத்தின்பால் தீராத தாகம் கொண்ட ஜீவா,தனது இறுதிக் காலத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தைத் துவக்கினார். இலக்கியத்தைமையப்படுத்தி கட்சியின் சார்பில் தொடங்கப்பட்ட‘தாமரை’ இலக்கிய இதழ், ‘ஜனசக்தி’ நாளிதழ்ஆகியவற்றுக்கு ஆசிரியராக செயல்பட்டார்.தன் இறுதிக்காலம் வரை சாதாரண மக்கள் மத்தியிலேயே வாழ்ந்தார் ஜீவா. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர், திறப்பு விழா நடக்கும் இடத்தின்அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிறபோக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி. நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர், அவரது எளிமையான வீட்டைக் கண்டு இன்னும்அதிர்ந்துபோனார்.

அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்குப் பிடித்தமானவராகவும் இருந்தாலும், துாய்மையான தலைவராக, எளிமையாக இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு அவரது தபால் தலையை வெளியிட்டு அவருக்கு பெருமை சேர்த்தது.இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு.

புதுச்சேரியில் இவரது நினைவாகஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. அவரைப் பற்றி ஏராளமானநூல்கள் எழுதப்பட்டுள்ளன. இருந்தாலும் மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா,தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவாவின் எழுத்துக்கள், பேச்சுக்களைத் தொகுத்த நூல்கள்.பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.

பெரணமல்லூர் சேகரன்
Image result for theekkathir