Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 24, 2017

வர்க்கப் போராட்டத்தின் உயிர்ப்பு

Image result for வெண்மணி


டிசம்பர்-25 உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நாள். “உன்னைப் போலவே உன் பக்கத்து வீட்டாரையும் நேசி” என்று உலகுக்கு அன்பை போதித்த இயேசுவின் பிறந்தநாள். அந்த நாளில் தான் அந்தக் கொடுமையை நிலப்பிரபுக்கள் அரங்கேற்றினார்கள். 1968 டிசம்பர் 25 இரவு கீழவெண்மணி கிராமம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 2018 டிசம்பர் 25ந் தேதியுடன் அந்த வெறிச்செயல் நிகழ்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

தமிழக வரலாற்றில் வெண்மணித் தியாகிகளின் தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது.

கொடூரமனம் படைத்த நிலப்பிரபுக்கள் வைத்த தீயில் 44 உயிர்கள் வெந்து மடிந்தனர். 20 பேர் பெண்கள்; அதில் இரண்டு பேர் நிறைமாத கர்ப்பிணிகள். 19 பேர் சிறுவர்கள்; அனைவரும் 13 வயதிற்குட்பட்டவர்கள். 5 பேர் ஆண்கள் அதில் 70 வயது முதியவர் உட்பட! கொளுந்து விட்டு எரிந்த தீயில் அவர்கள் வெந்த போது கதறிய கதறல் இன்னமும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

நெருப்பில் வெந்த போது அந்தக் குழந்தைகள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள். இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது; பதை பதைக்கிறது. நிலப்பிரபுக்களின் நீசத்தனமான கொடுமைக்கு எடுத்துக் காட்டு கீழ வெண்மணி படுகொலைகள். நிலப்பிரபுக்கள் எத்தகைய படுபாதகச் செயல் செய்யவும் தயங்காதவர்கள் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது வெண்மணி படுகொலை.

எதற்காக இப்படியொரு கொடுமை நிகழ்த்தப்பட்டது?

அரைப்படி நெல் உயர்வுக்காகவா வெண்மணி படுகொலை நடந்தது?

இல்லை. சொல்லப் போனால் ஒரு படி நெல் கூடுதலாக தருவதற்கு கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். வேறு என்ன காரணம்?

செங்கொடி!

அடிமையாயிருந்தவர்களை உணர்வூட்டி உரிமைக்காக குரலெழுப்பும் மனிதனாக மாற்றியதை நிலப்பிரபுக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் அன்றைய ஐ.ஜியின் அறிக்கை அமைந்திருந்தது.

1968 டிசம்பர் 28ஆம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் வெளிவந்த ஐ.ஜியின் அறிக்கை இது. “மோதலுக்கு காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளுக்கும் இடையே உள்ள வெறுப்பும் இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளை சங்கத்திலிருந்து பிரித்து விசுவாசமான தொழிலாளர்களாக மாற்ற நெல் உற்பத்தியாளர்கள் செய்த முயற்சியும் தான்” என்கிறார் ஐ.ஜி. “மோதலுக்கு காரணம் கூலிப் பிரச்சனை மட்டுமே என்று கூற மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பண்ணையடிமையாய் அடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள், சாணிப்பால், சாட்டையடி தண்டனையை வாய்மூடி மௌனமாய் ஏற்று இருந்தவர்கள், வரன்முறை இல்லாமல் கடுமையாய் உழைத்தவர்கள், நிலப்பிரபுக்களை பார்த்துப் பேசவே பயந்திருந்தவர்கள் - இப்படி இருந்தவர்களைக் ‘கெடுத்தது’ கம்யூனிஸ்ட்கள்.

தைரியமாக இப்போது கூலியை உயர்த்திக் கேட்கிறார்கள்; தண்டனையை எதிர்க்கிறார்கள்; நேருக்கு நேர் செங்கொடியை பிடித்துக் கொண்டு கோஷமிட்டுச் செல்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் வேலை செய்ய முடியும் என்று கறாராகப் பேசுகிறார்கள்.

இந்த அடிமைகளுக்கு இவ்வளவு தைரியம் வந்ததற்கு காரணம் இந்தச் செங்கொடி தான். இதற்கொரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்பது தான் அடிப்படை!

துண்டு போட்டுக் கொள்கிறான், காலில் செருப்புப் போட்டு நடக்கிறான், ஊரு பூரா கொடி கட்றான் - இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மாயிருந்தா ஆம்பளன்னு சொல்லிக்க முடியுமா? பள்ளு, பறைக்கு இவ்வளவு திமிரா? - காலங்காலமாக அடங்கிக் கிடந்தவர்களை உரிமை படைத்த மனிதனாக உணர்வு பெறச் செய்த செங்கொடி இயக்கத்தின் மீது தான் அவர்களின் மொத்த வெறுப்பும். அதனால் தான் சிக்கல் பக்கிரிசாமி, களப்பால் குப்பு என அடுத்தடுத்து முன்னணித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த எரிச்சலின் உச்சம்தான் கீழவெண்மணியை எரித்தது. ஒப்பந்தத்தை மீறி கூலிகேட்டார்கள் என்று ஒரு கதை சொல்லப்பட்டது. 6.10.1967இல் “மன்னார்குடி ஒப்பந்தம்” போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு மட்டும் தான். எனவே, சங்கம், புதிய கூலி ஒப்பந்தம் சம்பந்தமாக ஒரு முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அரசிடம் கோரியது. ஆனால், அரசு அந்தக் கோரிக்கை குறித்து கண்டு கொள்ளவில்லை. புதிய கூலி ஒப்பந்தம் ஏற்படாததால் பழைய கூலியைத் தான் தருவோம் என்று மிராசுதாரர்கள் கூறுகிறார்கள். அந்த ஒப்பந்தம் ஓராண்டுக்குத்தான்; எனவே, இப்போது கூலியை உயர்த்தித்தர வேண்டுமென்று சங்கம் கோரியது. நாங்கள் வெளியூர் ஆட்களை பயன்படுத்தி விவசாயப் பணிகளை செய்வோம் என்றனர் மிராசுதார்கள், வெளியூர் ஆட்களை வயலில் இறங்க அனுமதிக்க மாட்டோம் என்று சங்கம் முடிவு செய்தது. இதுதான் பிரச்சனையின் துவக்கம்.

ஆனால் பிறகு, செங்கொடியை இறக்குங்கள்; நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் பச்சை நிறக் கொடியை ஏற்றுங்கள்; நீங்கள் கேட்கும்கூலியை விட கூடுதலாக தருகிறோம் என்பது தான் மிராசுதாரர்கள் போராடிய மக்களிடம் சொன்னது. “எங்கள் உயிரேபோனாலும் செங்கொடியை இறக்கமாட்டோம். நீங்கள் கூலி தரவில்லையென் றாலும் பரவாயில்லை” என்பது தான் மக்களின் பதில்!. அந்தக் கொடுமை நடந்த போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இப்படியொரு கொடுமை நடக்க இருக்கிறது என்றுமுன்கூட்டியே 5.12.1968 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வட்டச் செயலாளராக இருந்த தோழர்.வே.மீனாட்சி சுந்தரம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புகிறார். அக்கடிதம் டிசம்பர் 15ஆம் தேதி தீக்கதிரிலும் பிரசுரிக்கப்படுகிறது. ஆனால் இந்தக்கடிதத்தை தி.மு.க அரசு அலட்சியப்படுத்தியது.

இக்கடிதம் ஜனவரி மாதம் தான் வந்து சேர்ந்ததாக அரசு பின்னர் கூறியது. முத்தரப்புக் கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்பட்டு புதிய கூலி ஒப்பந்தம் ஏற்படாதது, வெண்மணி கிராமத்தை எரிக்கமிராசுதாரர்கள் திட்டமிட்டுள்ளனர் என்ற கடிதத்தை அலட்சியப்படுத்தியது, இந்த இரண்டு விஷயத்திலும் அன்றைய தி.மு.க அரசு காட்டிய அலட்சியமும், நிலப்பிரபுக்களுக்கு ஆதரவான போக்கும் வெண்மணி எரிய காரணமாக இருந்திருக்கிறது என்பதைஉணர முடியும். உலகத்தையே அதிரச் செய்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை! 23 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கோபாலகிருஷ்ண நாயுடு, இராமு பிள்ளை என்றஇருவர் மீது மட்டுமே (கொலைவழக்கு) 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு எண் 80/69, மற்றொரு வழக்குஎண் 26/70 ஆகியவற்றின் படி நீதிபதிசி.எம்.குப்பண்ணன் தீர்ப்பு வழங்கினார். 15 பேர் விடுவிக்கப்பட்டு 8 பேருக்கு தண்ட னை விதிக்கப்படடது. இத்தண்டனையை எதிர்த்து 1971ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந் தேதி நீதிபதிகள் வெங்கட்ராமன், மகாராஜன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். மேல்முறையீட்டு வழக்கு எண் 593 மற்றும் 1208 ஆகியவற்றிற்கு தீர்ப்பு வழங் கப்பட்டது: “மேல்முறையீடு செய்யப்பட்ட 12குற்றவாளிகளும் குற்றவாளிகள் அல்லஎன்று கூறி அவர்கள் அக்கோர சம்பவத்தில்நேரிடையாகத் தொடர்பு இல்லாத வர்கள்; அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படி ஒருசெயலை செய்திருக்க மாட்டார்கள்” என்றுகூறி விடுதலை செய்யப்பட்டனர்.

நிலப்பிர புக்களின் செல்வாக்கு நீதித்துறையில் எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு உதாரணம் ஆகும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தியநீண்ட நெடிய போராட்டத்தின் விளை வாக, பொருளாதார சுரண்டலுக்கு முடிவுகட்டியது மட்டுமல்லாமல், சாதீய ஒடுக்கு முறையிலிருந்தும் அம்மக்கள் விடுதலை பெற்றனர். பண்ணை அடிமை என்ற நிலையிலிருந்து “விவசாயத் தொழிலாளி” என்ற நிலைக்கு உயர்ந்தனர். சுயமரியாதை உணர்வு பெற்ற மனிதர்களாக மாற்றியது இந்தப் போராட்டம். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.


மாற்றத்துக்கு வித்திட்ட மகத்தான தியாகிகளின் நினைவுகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழக உழைக்கும் மக்களின் உள்ளங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். வர்க்கப் போராட்டத்தின் உயிர்ப்பாய்த் திகழும் கீழ வெண்மணி தியாகிகளைப் போற்றுவோம். கீழவெண்மணி தியாகிகளின் மகத்தான தியாகத்தின் 50ஆம் ஆண்டு துவங்குவதையொட்டி 2017 டிசம்பர் 25 துவங்கி 2018 டிசம்பர் 25 வரை ஆண்டு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம்எடுத்துச்செல்வது என்று தீர்மானிக் கப்பட்டுள்ளது. “வெண்மணி தியாகிகளின் 50 ஆண்டுகள்” துவக்க நிகழ்ச்சி டிசம்பர்25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு துவக்கவுரை யாற்றுகிறார். வர்க்க ஒற்றுமையின் அடையாளமாய் திகழும் வெண்மணி தியாகிகளின் தியாகத்தைப்போற்றுவோம்.

Image result for வெண்மணிImage result for வெண்மணிImage result for theekkathir

பெ.சண்முகம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்