தலைநகர் தில்லியில், தோழர் பி. ராமமூர்த்தி பெயரில் அமைந்துள்ள கட்டிடம் டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை, இன்று திறக்கப்படுகிறது. சிஐடியுவின் ஸ்தாபகத் தலைவரான தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவுக்கு அவரது 30ஆம் ஆண்டு நினைவு தினத்தில் இந்த பவன் சமர்ப்பிக்கப்படுகிறது.
தெற்கு தில்லி உள்ள சாகெட் பகுதியில் ஆறாவது செக்டாரில் அமைந்துள்ள பி.ராமமூர்த்தி பவன், வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கட்டிடத்தைத் திறந்துவைக்கிறார்.
இவ்விழாவில் பல்வேறு தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்களுடன், தோழர் பி.ராமமூர்த்தியின் புதல்விகள் மருத்துவர் பொன்னி, மூத்த வழக்குரைஞர் வைகை ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இக்கட்டிடம் எழுப்புவதற்கான நிதியை நாடு முழுவதும் உள்ள சிஐடியு மற்றும் சகோதர தொழிற் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் உறுப்பினர்கள் அளித்தார்கள்.
இந்தக் கட்டிடத்திற்கு 2010ஆம் ஆண்டு அப்போதைய சிஐடியு தலைவர் தோழர் எம்.கே. பாந்தே அடிக்கல் நாட்டினார்.
இக்கட்டிடம், தோழர் பி.ஆர். எந்த சிந்தனைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தாரோ அந்த சிந்தனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட இருக்கிறது.
தோழர் பி.ஆர். 12 வயதிலேயே தேசிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். அவருடைய புரட்சிகர வாழ்க்கை என்பது மற்றெவராலும் சிந்திக்க முடியாத அளவிற்கு உன்னதமானதாகும்.
சென்னையில், 1987ஆம் ஆண்டு தோழர் பி.ஆர். மறைந்தபோது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தோழர் பி.டி.ரணதிவே கூறிய சொற்கள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை களாகும். அன்றைய தினம் அதனைத் தமிழாக்கம் செய்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே. பத்மநாபன் தற்போது அதனை நினைவுகூர்கிறார். “தோழர் பி.ஆர்.குறித்து நான் ஒன்றும் அதிகம் சொல்லவில்லை. அவரைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று இதற்குப் பொருள் அல்ல, மாறாக அவரைப்பற்றிக் கூறுவதற்குப் போதுமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.”
இதுதான் தோழர் பி.ஆர்.