Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 29, 2017

"BSNL வருவாயை அதிகப்படுத்துவது" சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம்


Related image

கடந்த, 19.09.2017 அன்று, சேலம் மாவட்டத்தில், "BSNL வருவாயை அதிகப்படுத்துவது" சம்மந்தமாக, கருத்துக்களை உள்வாங்க, நிர்வாகம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கமான நம்மை, கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். நாமும் நிர்வாகமும் நேரடியாக, ONE TO ONE கருத்துக்களைப்பரிமாறி கொள்வது, "வருவாய் பெருக்கம்" சம்மந்தமான நமது ஆலோசனைகளை வழங்குவதும் கூட்டத்தின் நோக்கமாகும். 

BSNL சேலம் முதன்மை பொது மேலாளர் தலைமையில், அவரது அறையில், கூட்டம் நடைபெற்றது. நிர்வாகம் சார்பாக, அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதாவது, முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஷ் ITS, துணைப்  பொது மேலாளர்கள் திருவாளர்கள் M. முத்துசாமி (நிதி), K . பொன்னுசாமி (நிர்வாகம்), K . கோவிந்தராஜூ (CM), K . அண்ணாதுரை (CFA), T .V . உமா (ஊரகம்), T .V. S. ஆஷா (TR), உதவி பொது மேலாளர் திரு. C . கந்தசாமி (நிர்வாகம்) ஆகியோர் நிர்வாகம் சார்பாக கலந்து கொண்டனர். 


நமது மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட தலைவர் தோழர் M. விஜயன், மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டோம். 

திரு. சபீஷ், PGM அவர்கள் தனது துவக்கவுரையில், சேலம் மாவட்ட BSNL நிறுவனத்தின் இன்றைய நிதி நிலையை விளக்கி பேசினார். சேவை விரிவாக்கம் சம்மந்தமாக கூறும் போது, பழுதடைந்த பேட்டரிகள் புதியதாக மாற்றப்பட்டுவருகிறது,  Phase VII திட்டம் நிறைவடைந்துள்ளது, NGN Phase I, Phase II திட்டம் நிறைவடைந்துள்ளது, CDoT NGN வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேலைகள் துவங்கியுள்ளது, பராமரிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகிறது என்று பல தகவல்களை வழங்கினார். இருப்பினும், நிதி வருவாய் தொடர்ந்து சரிவு நிலையில் உள்ளது என கவலையுடன் கூறினார். சிம் விற்பனை கடந்த 3 மாதமாக குறைந்து வருகிறது, MNPல் நீண்ட இடைவேளைக்குப்பின், Negative நிலை, மூன்றாவது ஊதிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள நாம் இந்த நிலையை கூர்ந்து ஆராய வேண்டும் என கோரினார். 


திரு. முத்துசாமி DGM (F) அவர்கள் நிதி நிலை சம்மந்தமான விவரங்களை கூறும் போது, BSNL வளமாக இருந்தபோதிலும், நிதி வரவு குறைவாக உள்ளதாகவும், நமது சேலம் மாவட்டம் சென்ற நிதி ஆண்டில், சுமார் 14 கோடி நட்டத்திலிருந்து தற்போது 20 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2015-16ல் சுமார் 49 கோடி நிதியை மாநிலத்திற்கு அனுப்பிய நாம், 2016-17ல் சுமார் 41 கோடி நிதி தான் அனுப்ப முடிந்தது. அதுவும், நடப்பு 2017ல், ஐந்து மாதங்களில் 8 கோடி மட்டுமே அனுப்பியுள்ளோம். நிகரமாக, 2015-16ல் சுமார் 55 கோடியாக இருந்த செலவுகள் 2016-17ல் 52 கோடியாக குறைந்தபோதும், 2015-16ல் சுமார் 57 கோடியாக இருந்த வருவாய், 2016-17ல் 36 கோடியாக குறைந்ததை வேதனையுடன் குறிப்பிட்டார். தரைவழி, பிராட் பேண்ட், அலைபேசி என அணைத்து பிரிவிலும், வருவாய் சரிந்துள்ளதை சுட்டிக்காட்டி ஒவ்வொரு பிரிவாக, வரவு, செலவு கணக்கு  விவரங்களை வெளியிட்டார். 


BSNLEU சங்கம் சார்பாக பதில் அளிக்கத்துவங்கிய நாம், வருவாய் குறைவதற்கு ஊழியர்கள் காரணமல்ல, நித்தம் மாற்றப்பட்டு வரும், கட்டணங்களே அதற்கு காரணம் என முதலில் தெளிவு படுத்தினோம். பணி ஓய்வு, இறப்புக்கள் மூலம் ஊழியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் போதும், கூடுதல் சுமையுடன் ஊழியர்கள் திறம்பட பணி புரிந்து வருவதை எடுத்து கூறினோம். இருப்பினும்,  இந்த நிதி ஆண்டின் எஞ்சிய ஆறு மாதங்களில்  மேலும் திறம்பட உழைத்து, வருவாயை அதிகரிக்க உறுதி கூறினோம். 


அதற்கு ஏதுவாக, நிர்வாக தரப்பில் செய்யப்பட வேண்டிய பணிகளை பட்டியலிட்டோம். தல மட்ட அதிகாரி துவங்கி, தலைமை அதிகாரி வரை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களிடம் மேலும் நெருக்கமாக கள பணியில் இறங்கிட வேண்டும், BB  மற்றும் LL  இணைப்புகள் சரண்டர் ஆவதை தடுக்க செய்யப்பட வேண்டிய பணிகள், புதிய இணைப்புகளை, இருக்கின்ற உபகரணங்களை வைத்து, Non Feasible என புறம் தள்ளாமல் பார்த்து கொள்வது, விளம்பரங்களை குறைந்த செலவில், எளிமையாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வது, MNP வாடிக்கையாளரை கவர, ப்ரத்தியேக சலுகைகள் வழங்குவது, கம்பி சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், கம்பியில்லா சேவையில் கூடுதல் கவனம் செலுத்தி அதன் தரத்தையும்  உயர்த்துவது, கோட்ட அதிகாரி தலைமையில், துணை பொது மேலாளர்கள் முன்னிலையில் தொடர்ச்சியாக ஊழியர் கூட்டங்கள் நடத்துவது, பழுதடைந்த பேட்டரிகளை விரைந்து மாற்ற நடவடிக்கை எடுப்பது, வளர்ந்து வரும் பகுதிகளில் கூடுதல் கேபிள்கள் பதிப்பது, அதிகமாக வெளி இடங்களில் "மேளாக்கள்"  நடத்துவது, அதில் சரணைடைந்த தரைவழி இணைப்புகளை மறு இணைப்பு செய்ய கூடுதல் கவனம் செலுத்துவது, நம்முடைய டவர்களை தனியாரும் பயன்படுத்தும் இடங்களில் நமது சிக்னல் பாதிக்காத வகையில் பார்த்து கொள்வது, தரைவழி நீண்ட நாள் வாடிக்கையாளர்களுக்கு பழைய தொலைபேசி கருவிகளை மாற்றி கொடுப்பது என பல ஆலோசனைகளை வழங்கினோம். 


Sales Team ஐ அதிகப்படுத்துவது,  CRM பிரிவை உயிரோட்டமாக மாற்றுவது, NWOP - BSS பிரிவுகளை மேலும் இணக்கமாக மாற்றுவது, வாடிக்கையாளர் சேவை மையத்தில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்குவது, விளம்பரங்களை அதிகப்படுத்துவது, CSC ஊழியர்களுக்கு உதவும் வகையில், கட்டண மாற்ற விவரங்களை உடனுக்குடன் எளிமையாக அவர்களுக்கு புரிய வைப்பது, External பிரிவு பகுதியில், அதிகாரிகள் மேலும் கூடுதலாக களப்பணி புரிவது, என பல விஷயங்களை சுட்டி காட்டினோம். 


செலவினங்களை குறைப்பது சம்மந்தமாக, TNEB அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஒரே இடத்தில், மையமாக அணைத்து வகையான EB கட்டணங்களையும் செலுத்த ஏற்பாடு செய்ய கோரினோம். இலாக்கா வாகன உபயோகத்தை அதிகரித்து, வாடகை வாகன உபயோகத்தை குறைக்க ஆலோசனை வழங்கினோம். 


இறுதியாக, சேலம் மாவட்டத்தில் வருவாயை அதிகரிக்க ஊழியர்களின் ஒத்துழைப்பை மேலும் கூடுதலாக வழங்க தயாராக உள்ளோம், நிர்வாகமும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என வலியுறுத்தினோம். இரு தரப்பும், பரஸ்பரம் கூறிய கருத்துக்களை இரு தரப்பும் ஆக்கபூர்வமாக எடுத்து கொண்டது, நல்ல அம்சம். கூட்டத்தின் நோக்கம் நிச்சயமாக நிறைவேறும் என நம்புவோம்.

தோழர்களே! கட்டளைகள் மட்டும் பிறப்பித்து வந்த நிர்வாகங்கள் இன்று நம்மிடம் ஆலோசனைகளை பெற்று, இயங்க கூடிய நிலை, கால சுழற்சியில் ஏற்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது முழு திறனையும் அர்ப்பணிப்பு உணர்வோடு வெளிப்படுத்த வேண்டும். கால ஓட்டத்தில், வயது மூப்பு ஒரு பிரதான 
காரணமாக இருந்தாலும், சிந்தனையில் இளமையுடன் இருப்போம். BSNL நிறுவனத்தை காப்பது என்பது நமது நலன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, தேச நலனோடும் இணைந்துள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்வோம். 

அர்ப்பணிப்போடு பணிபுரிவோம்! 

ஆர்ப்பரித்து உழைப்போம் !!
போட்டிகளை திறம்பட எதிர்கொள்வோம் !!!
வெற்றி பெறுவோம் !!!

தோழமையுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர்