Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 8, 2017

இனி வீரச்சமர் ஒன்றே வெற்றிக்கான வழியாகும்!


பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.


நெருப்பை சந்திக்காத தங்கமோ, உளியை சந்திக்காத சிற்பமோ, யுத்தத்தை சந்திக்காத தேசமோ, வீரச்சமர் புரியாத அமைப்போ முழுமை பெறுவதில்லை, வளர்ச்சி அடைவதில்லை. அமைப்பு ரீதியாக உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் வர்க்கத்தில், போராட்டம் என்பது தவிர்க்க முடியாத கடமையாகி விட்டது. அரசு ஊழியரோ, ஆசிரியரோ, போராடாமல் எந்த உரிமையையும் பெற முடியாது என்பது மீண்டும் மீண்டும் உணர்த்தப்பட்டு வருகிறது. உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து போராடாவிடில் மறுக்கப்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு முற்றாக ஒழிக்கப்படும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டு விடுவதோடு அரசு ஊதியம் பெறும் ஒட்டுமொத்த ஊழியர் சமூகமும் முன்னேற்றமின்றி வீழ்ந்து விடும் ஆபத்தை ஆசிரியர்களோ அரசு ஊழியர்களோ உணராமல் இல்லை. அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ தத்தமது உரிமைகளுக்காக தனித்தனியாகவும், ஒட்டுமொத்த உரிமைகளுக்காக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாகவும், பலவிதமான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் மூலம் அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட அல்லது நிறுத்திவைக்கப்பட்ட உரிமைகளை வென்றிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.

வரலாறு படைத்த வேலை நிறுத்தம்

22.6.1988ம் தேதியை, அன்றைய தேதியில் பணியில் இருந்த அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 8 லட்சம் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் பங்கேற்று வரலாறு படைத்த 31 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் துவக்க நாள் அது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஒரு மாத ஊதியம் போனஸ் ஆகியவற்றை கொள்கை அளவில் அரசை ஏற்றுக்கொள்ள வைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம். அந்தப் போராட்டத்திற்குப் பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை; தற்காலிகப் பணியாளர்களுக்கு பணிமுறிவு ஏதுமின்றி மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்; வேலை நிறுத்த காலத்தில் 22 நாட்கள் ஈட்டிய விடுப்பில் கழிக்கப்பட்டது; இடைக்கால நிவாரணமாக ரூ.70/-ம் மருத்துவப்படியாக ரூ.15/-ம் வழங்கப்பட்டது. தொழில் வரியை அரசே ஏற்றுக் கொண்டது போன்ற பல முக்கிய பயன்களை அரசு ஊழியர்கள் பெற்றனர். 1988ம் ஆண்டில் இந்தப் போராட்டத்தை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நடத்திய போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. ஆளுநரின் ஆலோசகரோடு 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதிகார வர்க்கத்தின் தலையீடு அப்போதும் இருந்தது. ஆனால், ஆளுநர் அலெக்சாண்டர் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தீர்வுகாண முனைப்பு காட்டினார். முடிவும் நல்லவிதமாக அமைந்தது.

எஸ்மா, டெஸ்மா தகர்ந்தது

மறக்கமுடியாத இன்னொரு போராட்டம் 2003ல் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீண்டும் ஒன்றுகூடி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாக நடத்திய காலவரையற்ற போராட்டம். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி சட்டசபையிலேயே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் மீறி போராடினால் எஸ்மா, டெஸ்மா உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களும் பாயும் என்றும் தமிழக மக்கள் தொகையில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே. அவர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க.விற்கு தேவையில்லை என்று ஆர்ப்பரித்தார். அவர் மிரட்டலுக்கு ஆசிரியர்களோ அரசு ஊழியர்களோ யாரும் பயப்படவில்லை. மாறாக உக்கிரமான காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். கோபமுற்ற ஜெயலலிதா ஒரே அரசாணையில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்தார். அப்போதும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மனம் தளராமல் போராட்டக் களத்தில் நின்றனர். சில துறைவாரி சங்கங்கள் போராட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதால் போராட்டத்தின் திசைவழி மாறியது. பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

அரசு ஊழியர்களை துச்சமென நினைத்து அதிகார வர்க்கத்தின் பாட்டுக்களுக்கு தாளம்போட்ட ஜெயலலிதாவின் அரசாங்கத்தை, மக்கள் சந்திப்பு பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம், மாவட்டம்தோறும் பிரச்சாரம் என பலகட்ட இயக்கங்களை நடத்தி அடுத்த தேர்தலில் அவர் தோற்றுப்போக தொண்டாற்றி பகை முடிக்கும் பணி முடித்ததும் அரசு ஊழியர்களே. திமுக 2006ல் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் இழந்த உரிமைகளான சரண்விடுப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகைகளை ரொக்கமாக வழங்குதல் போன்றவற்றை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் திரும்பவும் கிடைக்கப் பெற்றனர். எதற்கும் அஞ்சாத இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று போராடிய எஃகு கோட்டை வீரர்கள் என்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை அடையாளம் காட்டி புகழ்படைத்த போராட்டம் அது.

பொய்யான தேர்தல் வாக்குறுதி

அதிகார வர்க்கத்தின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பகைத்துக் கொண்டு மோசம் போய்விட்டதை அரியணை இழப்புக்குப் பின் ஜெயலலிதா உணர்ந்தார். அதன்பிறகு 2011ல் மீண்டும் அரியணை ஏறியதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக நிலைமையை கொண்டு வந்தார். 2011ல் தேர்தல் அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்சன் திட்டம் திரும்ப பெறப்பட்டு பழைய பென்சன் தொடர வழிவகை காணப்படும் என்றும் தொகுப்பூதியம், மதிப்பூதியம். சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கூலிமுறைகள் ஒழிக்கப்பட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கையான பேச்சும், நடவடிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்மீது நம்பிக்கை ஏற்பட வைத்தது.

உள்ளிருந்தே பயமுறுத்திய கருங்காலிகள்

அதனாலேயே 2011ல் அம்மையார் பதவியேற்றபின் நம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பொறுமையாக காத்திருந்தனர், ஜெயலலிதா சொன்னபடி செய்து விடுவார் என்று. ஆனால் நான்கரை ஆண்டுகள் ஆகியும் தான் கொடுத்த வாக்குறுதியை அவர் காப்பாற்றாததால், அரசு ஊழியர்கள் ஒரு காலவரையற்ற போராட்டத்திற்குத் தயாரான போது வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் சிலர் அரசு ஊழியர்களை பயமுறுத்தினர். அதிமுக என்ற எஃகு கோட்டையின் இரும்புத் தலைவி ஜெயலலிதாவிடம் உரிமைகள் கேட்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்றும், 2003 அரசு ஊழியர் போராட்டத்தின் போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை நினைவுபடுத்தியும் போராட்டத்தை தவிர்க்கவும் நீர்த்துப் போகவும் குரல் கொடுத்தனர்.

ஆனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மன உறுதியோடு 2016 பிப்ரவரியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். காலவரையற்ற போராட்டம் பத்து நாட்கள் நடந்த பின் ஐந்து அமைச்சர்கள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, போராட்டத்தை முடித்துக் கொள்ள கேட்டபோது, எழுத்துப்பூர்வமான உறுதிமொழியோ அல்லது சட்டமன்றத்தில் அறிவிப்போ முதல்வர் வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தின் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிப்போம் என்று அரசு ஊழியர்கள் அறிவித்தனர்.

போராட்டத்திற்கு பணிந்த அரசு

அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஐந்து அமைச்சர்களில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக அரசாங்கத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பன்னீர் செல்வமும் அடங்குவர். அரசு ஊழியர்கள் நடத்திவந்த போராட்டத்தின் வலிமையையும், நியாயத்தையும் உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா 19.2.2016ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், சட்டப்பேரவை விதி எண்.110ன்கீழ் 11 அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப்பெற வல்லுநர் குழு அமைக்கப்படும், காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவது குறித்து ஊதிய மாற்றத்திற்கு அமைக்கப்படும் அலுவலர் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் மூலம் புதிய ஓய்வூதிய திட்டம் திரும்பப் பெறுவதற்கான வாசல் கதவு திறக்கப்பட்டதாலும் காலமுறை ஊதியத்தை ஒழிப்பது குறித்து ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிந்ததாலும் அரசு ஊழியர்கள் அரசுக்கு அவை குறித்து பரிசீலித்து முடிவு அறிவிக்க அவகாசம் அளிக்கும் பொருட்டு, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர்.

உரிமைகள் காப்பதில் சமரசம் இல்லை

ஆக, கடந்த கால அனுபவங்களிலிருந்து, நடப்பது கவர்னர் ஆட்சியாக இருந்தாலும், ஆள்வது இரும்பு மனுஷியாக இருந்தாலும், எதிர்ப்பது எஃகு கோட்டையே ஆனாலும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் உரிமைகளைக் காப்பதிலிருந்து பிறழ்ன்று அவற்றுடன் சமரசம் செய்து கொண்டதில்லை என்கிற வரலாறு புரியும். அதன் அடிப்படையில்தான் இப்போதும் அவர்கள் 2006லிருந்து அவர்களுக்கு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். 2006ல் ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவானாலும் சரி, அதற்கடுத்து போடப்பட்ட ஒரு நபர் குழுவானாலும் சரி, அதற்குப் பின் வந்த குறைதீர்க்கும் குழுவானாலும் சரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர்களுடைய கோரிக்கைகளை தொய்வின்றி அவைகளிடம் சமர்ப்பித்து அவை சரி செய்யப்படாமல் ஏமாற்றப்பட்ட நிலையில்தான் அடுத்த கட்ட போராட்டங்ளுக்கு நகர்ந்து போயிருக்கிறார்கள்.

கிடப்பில் போடப்பட்ட அறிவிப்புகள்

2016ல் தமிழக சட்டப்பேரவையில், சட்டபேரவை விதி எண்.110ன் கீழான அறிவிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கிய அறிவிப்புகளான காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எந்தவித சலனமும் இல்லாமல் சந்தடிச் சாக்கில் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடருவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலவரையோ நான்குமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு அதன்பிறகு கைவிடப்பட்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து போராட ஆரம்பித்த பின்னர் தற்போது மீண்டும் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு நவம்பர் 2017 வரை அதன் காலவரை முடிவு செய்யப்பட்டு மீண்டும் ஒரு ஏமாற்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடத்தும் கபட நாடகம்

எந்தவித வல்லுநர் குழுவும் அமைக்காமல் ஒரே நாளில் எம்எல்ஏக்கள் சம்பளத்தை உயர்த்த முடிந்த இந்த அரசால், பல வல்லுநர் குழுக்கள் அமைத்தும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் என்ற ஒற்றை கோரிக்கையின் பேரில் அறிக்கை பெறாமல் ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நடத்தி வரும் சாக்குபோக்கு நாடகத்தை தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் உள்ள ஊழியர்களும் ஆசிரியர்களும் அருவெருப்புடனும் பொறுமையுடனும் சகித்து வருகிறார்கள்.

தற்போது கேட்பவன் கேணையன் என்றால் கேப்பையில் நெய் வடியும் என்ற சொலவடை அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை கேட்பவன் அரசு ஊழியன்-ஆசிரியன் என்றால் கேப்பையில் பொய்வடியும் என்பதாக ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2016ல் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது சம்பந்தமாக பரிசீலித்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான வல்லுநர் குழுவின் காலநீட்டிப்பு நான்குமுறை செய்யப்பட்டு எந்தவித அறிக்கையும் அவரிடமிருந்து பெறப்படாமலேயே விடப்பட்டு, தற்போது ஸ்ரீதர் தலைமையில் புதிய வல்லுநர் குழு அமைத்துள்ளதைப் பார்க்கும் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒன்றரை வருடங்கள் தேவைப்படுமா? என வினா எழுப்பும் அளவிற்கு அரசாங்கம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கபட நாடகத்தை நடத்துவது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது.

இடைவிடாத போராட்டத்தால் அலுவலர் குழு அமைப்பு

சட்டப்பேரவையில் முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஏற்கெனவே அறிவித்தபடி எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை அமைக்காததால் அதற்காக பல போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அறிவிக்கப்பட்டு அவர்கள் நிலுவைத் தொகையும் பெற்றுவிட்ட நிலையில் ஊதிய மாற்றக்குழுவை உடனடியாக அமைக்கக் கோரியும், அது தன் பரிந்துரைகளை சமர்ப்பித்து அரசாணைகள் வெளியிடும் வரையிலான காலத்திற்கு 20 சதவீதம் இடைக்கால நிவாரணமும் கேட்டு போராட வேண்டி வந்தது. அரசு ஊழியர்களின் இடைவிடாத போராட்டங்களின் காரணமாக பிப்ரவரி 22ஆம் தேதி அலுவலர் குழு அமைப்பதற்கான அறிவிப்பும் அரசாணையும் வெளி வந்தது.

சென்ற ஊதிய மாற்றம் அதாவது 2006ல் கிடைக்க வேண்டிய ஊதிய மாற்றம் 2009ல் அறிவிக்கப்பட்டு ஊதிய மாற்ற நிலுவை ஓராண்டுக்கு கருத்தியலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு 2007ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டதால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒருவருட ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை இழக்க நேரிட்ட கசப்பான அனுபவம் இன்னும் அகலாத நிலையில் இன்றுவரை ஊதியமாற்றம் அறிவிக்கப்படாததாலேயே 1.1.2016 முதல் அரசு ஊழியர்கள் இடைக்கால நிவாரணம் கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் இவ்வரசு ஊதிய மாற்றமும் ஏற்படுத்தாமல், இடைக்கால நிவாரணமும் வழங்காமல் நாற்காலி சண்டையில் மூழ்கி நாட்டு நலனைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறது.

கிடப்பில் போடப்பட்ட அறிவிப்புகள்

சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விதி எண்.110ன் கீழ் அறிவித்த ’’ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தல், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல், தொகுப்பூதியத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை, காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருதல் போன்றவை குறித்து ஊதியக்குழுவே பரிசீலிக்க இயலும் என்பதால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் ஊதியக்குழு மூலம் பரிசீலிக்கப்படும்’’ என்ற அறிவிப்பினால் அலுவலர் குழுவே இதற்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்பதால் அதுவும் கிடப்பில் உள்ளது. மேலும் இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில் ஊதிய மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாத துரோகத்தையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது.

பீறிட்டு வரும் கோபக் கனல்

இத்தனை போராட்டங்களையும் அரசு கண்டும் காணாமல் இருந்ததுடன், தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை பயன்படுத்தி அதிகார வர்க்கத்தினர் அரசு ஊழியர்கள் உரிமைகளை நீர்த்துப்போக வைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். தமிழக அரசின் இத்தகைய உதாசீனப்படுத்தும் மனோபாவம்தான் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை காலவரையற்றப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. கடந்த ஓராண்டுகாலமாக அரசு ஊழியர் ஆசிரியர் ஒவ்வொருவர் நெஞ்சுக்கூட்டிலும் அடைகாத்து வைத்திருக்கும் ஆவேச உணர்வுகள் அக்னிகுஞ்சுகளாய் பீறிட்டு எழும்பும் தருணம் இப்போது தோன்றியுள்ளது.

கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் தமிழக அரசு

தலை இல்லாத அரசு, செயல்படாத அரசு, போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு, தன்னுடைய ஆட்சியையே காத்துக்கொள்ள தினம்தினம் போராடிக்கொண்டிருக்கும் அரசு என்றெல்லாம் இந்த அரசின் மீதான விமர்சனங்களும், இந்த அரசிடமா உரிமை கேட்டு போராடப்போகிறீர்கள் என்ற வினாக்களும் இவர்கள்மீது தொடுக்கப்படுகின்றன. ஆனாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தீர்க்கமும், தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் மூர்க்கமும், அரசு ஊழியர், ஆசிரியர் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மார்க்கங்களை காட்டியுள்ளன. மக்கள் பணி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இவ்வளவு நாட்களும் அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுத்து அமைதி காத்து வருகிறார்கள்.

இந்த அவகாசத்தை அரசாங்கம் மேலும் மேலும் நீட்டித்து கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி வருவது அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொறுமைகளை எல்லை கடந்து சோதிக்க வைத்திருக்கிறது.போராடும் அரசு ஊழியர்களை ஆசிரியர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு கடைசி நேரத்தில் மட்டும் முன் வருவதும், வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது, அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது அவை அறிக்கை கொடுத்த பின்னர்தான் எதையும் பரிசீலிக்க முடியும் என்று கைவிரிப்பதும், ஒண்ணே முக்கால் ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய மாற்ற கோரிக்கையும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் விதி எண்.110ன் கீழ் அறிவிப்பாக வெளியிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வல்லுநர் குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்று உத்தரவிட்டு அக்குழு கடந்த ஒன்றரை வருடங்களாக அறிக்கை எதுவும் தாக்கல் செய்யாமல் காலநீட்டிப்பு செய்து அரசு ஊழியர்களை ஆசிரியர்களை ஏமாற்றியதும், தற்போதும் ஸ்ரீதர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்து விட்டு அதன் அறிக்கை கிடைத்த பிறகு பரிசீலிப்பதாக சொல்வதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்பதை ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் உணர்ந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் தமிழக அரசு

இந்நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒருசிலவற்றையேனும் இந்த அரசு பரிசீலித்திருந்தாலாவது முக்கியமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பையாவது வெளியிடுமாறு போராட்டக் குழுவினர் அரசிடம் வற்புறுத்தியும் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட ஏற்காமல் அக்டோபரில் பார்க்கிறோம், நவம்பரில் பார்க்கிறோம், அறிக்கை வந்ததும் பார்க்கிறோம் என சொன்ன பொய்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதை எந்த ஆசிரியரும் அரசு ஊழியரும் ஏற்பதாக இல்லை. ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் வலிமை அரசாங்கத்திற்கு உணர்த்தப்பட்டிருப்பது ஒரு பெரிய பலம் தான். பேச்சு வார்த்தைக்குப் பின்னர் முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூட எந்தவிதமான நிர்ணயிக்கப்பட்ட திடமான தேதியோ உத்தரவாதமோ இல்லை என்பதால்தான் இந்தப் போராட்டத்தை மேலும் வலிமையோடு நடத்த திட்டமிட வேண்டியுள்ளது.

முதல்வர் தன் அறிக்கையில் நவம்பரில் அலுவலர் குழு அறிக்கை கிடைத்து விடும் அதன்பிறகு ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் என்கிறார். எத்தனை நாளில் எத்தனை மாதங்களில் என்ற விவரம் சாதுர்யமாக விடப்பட்டிருக்கிறது. ஊதிய மாற்றம் அப்படி ஏற்படுத்தப்படாவிட்டால் பிறகு இடைக்கால நிவாரணம் பற்றி பரிசீலிக்கப்படும் என்றஅறிவிப்பிலும் நம்பகத் தன்மை இல்லை. புதிய ஓய்வுதியத் திட்டம் திரும்பப் பெறுவது குறித்து அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு நவம்பர் மாத இறுதியில் தான் அறிக்கை தரும் அதன்பிறகு எத்தனை நாளில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற விபரங்களும் அறிக்கையில் இல்லை. ஒண்ணே முக்கால் வருடங்களாக அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்லி வந்த பொய்மை இப்போது முதலமைச்சர் சொல்லியிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் வித்தியாசம் இல்லை.

பொய்யாக பேட்டி கொடுத்த செங்கோட்டையன்

ஈரோட்டில் முதல்வருடன் பேச்சு வார்த்தைக்கு ஜாக்டோ ஜியோ தலைவர்களை அழைத்துவிட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஊடகங்களுக்கு, அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கிறார்கள் என நக்கல் பேட்டி கொடுத்தபோதே பேச்சுவார்த்தையை விட்டு விலகி வந்திருக்க வேண்டிய ஜாக்டோ ஜியோ தலைவர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன்கருதி அதையும் பொறுத்துக் கொண்டு முதல்வருடன் பேச முன்வந்தனர். ஆனால், முதல்வர் கொடுத்த உறுதியே போதும் என சில சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகியுள்ளது துரதிருஷ்டவசமானது. அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஏமாற்று நாடகத்தை உணர்ந்து மீண்டும் ஜாக்டோ ஜியோவுடன் இணைவார்கள் என்ற நம்பிக்கையும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற கோட்பாட்டை உடைத்து பிரித்தாளப் பார்க்கும் அரசின் சூழ்ச்சிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் யாரும் பலியாகி விடாமல் உரிமைகளை பெறும் வரை போராட்டக் களத்தில் இருப்பதே இந்த தலைமுறைக்கும் இனிவரும் அரசு ஊழியர் ஆசிரியர் தலைமுறைக்கும் அவர்கள் செய்யும் தலையாயக் கடமையாக இருக்கும்.

வீரச்சமர் ஒன்றே உரிமைகளை வென்றெடுக்கும்

காலவரையற்ற போராட்டம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தேடிச் சென்றதல்ல, அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு எந்த போராட்டம் நடத்தினாலும் கண்டுகொள்வதில்லை எனும் போக்கே அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைத்துவிடும் என்பதை ஆள்பவர்கள் இந்த போராட்டத்தின் மூலமாக புரிந்து கொள்வார்கள் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகும், கோரிக்கைகளில் ஒன்றைக்கூட பரிசீலிக்க முன்வராத நிலையில் அரசு இயந்திரத்தை சில நாட்கள் முடக்கி வைப்பதைத்தவிர வேறு வழியில்லாத சூழ்நிலையில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்வர். இந்த போராட்டங்கள் மூலம் மக்களுக்கு சிரமங்கள் நேரலாம்.

ஆனால் இந்த சிரமங்களுக்கு காரணம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்ல, சிறந்த நிர்வாகத்தை நடத்தத் தெரியாத அரசாங்கமும், மக்கள் நலனில் அக்கரையில்லாத அதிகார வர்க்கமும்தான். 07.09.2017ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செயல்படாத அரசாங்கத்தை செயல்பட வைக்கட்டும். அதிகார வர்க்கத்தின் கைகளில் அரசாங்கத்தை கொடுத்துவிட்டு நாற்காலிக்காக நாலாபுறமும் ஓடிக்கொண்டிருக்கும் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் ஜாக்டோ ஜியோ போராட்டம் சிந்திக்க வைக்கும். சாணக்கியத் தனங்கள் தலைகுனியும் இடங்களில் சத்ரியத் தனம் தலை கொய்யும் என்பதையும், சமரசம் மறுக்கப்படும் இடங்களில் வீரச்சமர் ஒன்றே உரிமைகளை வென்றெடுக்கும் என்பதையும் இன்னும் ஒருமுறை இவ்வுலகுக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள்.