இன்று முதல் அரசு பஸ் ஓடாது
அதிமுக அரசின் பிடிவாதத்தால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள்.
போக்குவரத்து அமைச்சருடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து திட்டமிட்டபடி திங்கள் (மே 15) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் 2016 செப்டம் பர் 1ம் தேதியிலிருந்து அமலாகி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வராததால், சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இணைந்துஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்கி பல கட்ட போராட்டங்களை நடத்தின.அதனைத் தொடர்ந்து 13வது ஊதியஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மார்ச்7 ஆம் தேதி தொடங்கியது. இதில் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பொதுக்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மே 4 அன்று நடைபெற்றது.
அதில் முன்னேற்றம் ஏற்படாததால் மே.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டமைப்பு அறிவித்தது.இதன்பின்னர் மே 8, 11 தேதிகளில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற் சங்கங்கள் கோரிய 7ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையில், 750 கோடி ரூபாயை மட்டும் வழங்குவதாக அமைச்சர் கூறினார். இதனை தொழிற் சங்கங்கள் ஏற்கவில்லை.இதனைத்தொடர்ந்து மே 12, 13 தேதிகளில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு தனித்துணை ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் முத்தரப்புபேச்சுவார்த்தை 4 சுற்றுகள் நடைபெற்றது.
இதிலும், முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே போக்குவரத்து துறைஅமைச்சர் ஞாயிறன்று (மே 14) சென்னையில் தொழிற்சங்கங்களுடன் 5வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது கூடுதலாக 500 கோடி ரூபாயை செப்டம் பர் மாதம் வழங்குவதாக அமைச்சர் கூறினார். இதனை கூட்டமைப்பு தலைவர்கள் ஏற்கவில்லை.மாலையில் நடந்த 2வது சுற்று பேச்சுவார்த்தையின் போது அமைச்சரிடம் கூட்டமைப்பு சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகள் பட்டியலிடப்பட்ட அந்த மனுவில், “கூட்டமைப்பு கோரிக்கைகளின் பேரில் அரசு தரப்பில் நம்பகத்தன்மையுள்ள எவ்வித உத்தரவாதமும் எழுத்துப்பூர்வமாக அளிக்காத நிலையில் வேலைநிறுத்தத்தினை ஒத்திவைப்பதற்கான சூழல் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனையடுத்து சிஐடியுதலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:நாங்கள் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு செல்லுங்கள் அமைச்சர் கூறுகிறார்.
செப்டம்பர் மாதம் பணம் தருவோம் என்பதற்கான எந்த உத்தரவாதம் அளிக்கவில்லை. வரவுக்கும் செலவும் இடையேயான இழப்பை ஈடுகட்ட கொள்கை பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.கேரளாவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தலா 1000 கோடி ரூபாய் தருவதாகவும், பென்சனில் 50 விழுக்காட்டை அரசு ஏற்றுக்கொள்வதாகவும் கொள்கை அறிவிப்பை பட்ஜெட்டில் அந்த மாநில அரசுஅறிவித்துள்ளது. அப்படிப்பட்ட கொள்கை முடிவை அரசு அறிவிக்க கோரினோம்.
அதற்கும் பதில் இல்லை. அரசு போக்குவரத்து கழகங்களை சுயேட்சையாக செயல்பட அனுமதிக்க மறுக்கிறது. ஒரு பகுதி தொகை தருவதாக கூறும் அரசின்அறிவிப்பை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெற இயலாது. எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்.வேலைநிறுத்தம் நாளை தொடங்கஉள்ள நிலையில் இன்றே கைது நடவடிக்கையை அரசு தொடங்கி உள்ளது. நாமக்கல்லில் ஒருவர், ராமநாதபுரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் உள்ள தொழிலாளியிடம் அடுத்த 3 நாளைக்கு பேருந்துகளை இயக்குவேன் என்றுஎழுதி கொடுக்கக் கூறி மிரட்டுகிறார்கள். இதன்காரணமாக கோபமுற்ற தொழிலாளர்கள் சில இடங்களில் இன்றிலிருந்தே பணியை விட்டுச் சென்றுள்ளனர்.
ஆத்திரமூட்டும் நடவடிக்கையை கைவிட்டு வேலைநிறுத்தத்தை தவிர்க்க பொறுப்பான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள். வேலை நிறுத்தத்தை உடைக்க அரசு செய்யும் முயற்சிகளை முறியடிப்போம். அரசுஎப்போது அழைத்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என்றார்.பேட்டியின்போது தொமுச தலைவர் மு.சண்முகம், ஏஐடியுசி தலைவர் ஜே.லட்சுமணன், எச்எம்எஸ் தலைவர் சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.